1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மீனம்--குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)

மீனம்--குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)

பூரட்டாதி 4ம் பாதம் : பொய்ம்மை இகழ்

ஜென்ம ராசி, நட்சத்திரத்திற்கு அதிபதியான குரு 12ம் வீட்டிற்கு வருவது சற்று சிரமத்தைத் தரும். நினைத்த காரியம் எளிதில் நடைபெறாது இழுபறியைத் தருவதால் மனதளவில் சோர்வடைவீர்கள். என்றாலும் சனியின் ஆட்சி பலம் இந்த நேரத்தில் உங்களுக்குத் துணைபுரியும். புதிய முயற்சிகளில் வெற்றி காண இன்னும் ஐந்து மாத காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். தனக்காக இல்லாமல் அடுத்தவர்களுக்காக செய்யும் பணிகளில் வெற்றி காண்பீர்கள். மார்ச் 2 முதல் உங்கள் பணிகளில் வேகமும் சுறுசுறுப்பும் கூடுவதோடு தனித்திறமையும் மெருகேறி இருப்பதாக உணர்வீர்கள். பேசும் போது நிதானமும் கவனமும் தேவை. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களின் பார்வையில் தவறாகத் தோன்றலாம். அடுத்தவர்களின் நிலை உணர்ந்து பேசுவதன் மூலம் நற்பெயர் காண இயலும்.


நிதி : எதிர்பாராத செலவுகளால் சற்று தடுமாற்றம் காண்பீர்கள். அவசியம் செய்ய வேண்டிய செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் திடீரென்று உண்டாகும் ஆடம்பரச் செலவுகள் உங்கள் பட்ஜெட்டையும் தாண்டிச் செல்லும். கையிருப்பில் ரொக்கமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் போது அதிக கவனம் அவசியம். ஏடிஎம் மெஷின்களை உபயோகப்படுத்தும்போது உரிய துணையுடன் செல்லவும்.

குடும்பம் : மனக்குழப்பம் காரணமாக குடும்பத்தினருடன் வீண் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். இக்கட்டான சூழலில் வாழ்க்கைத்துணை பக்கபலமாக துணையிருப்பார். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. உடன்பிறந்தோருடன் கருத்துவேறுபாடு உண்டாகக் கூடும். உறவினர்கள் வழியில் வீண் கலகம் உண்டாகலாம் என்பதால் திருமணம் முதலான விசேஷங்களில் சற்று விலகியே நிற்பீர்கள்.

கல்வி : உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. குருவின் சாதகமற்ற அமர்வு நிலை ஆசிரியருடனான உறவுமுறையில் சற்று சிரமத்தைத் தரலாம். சகமாணவர்கள் செய்யும் தவறு உங்கள் மீதும் எதிரொலிக்கக் கூடும். எழுத்து வேகத்தினை உயர்த்திக்கொள்ள நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. இன்ஜினியரிங், மொழிப்பாடம், கலைத்துறை, சைகாலஜி, வேளாண்மை ஆகிய துறை சேர்ந்த மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையைப் பெரிதாக்கும். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தவறாகப் புரிந்துகொண்டு குடும்ப உறுப்பினர்கள் உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வர். உங்கள் உள்ளத்தில் இருக்கும் கருத்துக்களை கணவரோடு தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். பிறந்த வீட்டாருடன் வீண் கருத்துவேறுபாடு உண்டாகலாம். குடும்பப் பிரச்னைகளை அண்டை அயலாரோடு விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை.

உடல்நிலை: உடல்நிலையை விட மனநிலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். ஒரு சிலருக்கு சிறுநீரகக் கோளாறுகள், பித்தப்பையில் கற்கள் போன்ற பிரச்னைகள் தோன்றலாம். தினசரி தண்ணீரை காய்ச்சிப் பருகுவது நன்மை தரும்.

தொழில் : வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை ஆகியவை சார்ந்த பணியாளர்கள் சற்று சிரமம் காண்பார்கள். அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் பொதுமக்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதிலளிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். எந்தச் சூழலிலும் பொறுமை என்பது அவசியமாகிறது. தொழில்நுட்ப பணியாளர்கள் ஓய்வின்றி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவல் பணிகளில் மேலதிகாரிகளின் உதவி கிட்டாமல் போகும். அதே நேரத்தில் கீழ்நிலைப் பணியாளர்கள் துணை நிற்பார்கள். சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லறை வணிகம் சிறக்கும்.
பரிகாரம் : சனி தோறும் ஏழுமலையானை வணங்கி வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துார்வது அஃது ஒப்பதுஇல்.

உத்திரட்டாதி : தோல்வியில் கலங்கேல்
ஜென்ம ராசியின் அதிபதி குரு 12ம் வீட்டில் சிரமத்தைத் தரும் வகையில் வந்து அமர்ந்தாலும் நட்சத்திர அதிபதி சனி வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால் நீங்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் சம்பந்தமில்லாத விவகாரங்களினால் சங்கடத்தை சந்திக்க நேரிடும். நாம் உண்டு, நம் வேலை உண்டு என்றிருப்போருக்கு எந்த பிரச்னையும் இல்லை. நல்லறிவினைத் தரும் குரு 12ல் அமர்வதால் சிந்தனையில் குழப்பம் உண்டாகி உங்களைத் தெளிவான முடிவெடுக்க இயலாத சூழலுக்குத் தள்ளும். அடுத்தவர்களின் ஆலோசனைகள் மேலும் உங்கள் குழப்பத்தை அதிகமாக்கும் என்பதால் நிதானமாக யோசித்து நீங்களே முடிவெடுங்கள். முக்கியமான விஷயங்களை சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பது நல்லது. நேரத்தினை உணர்ந்துகொண்டு அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்காக முன்நின்று செயல்படும் விஷயங்களில் நஷ்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும்.

நிதி : நிதிநிலை சீராக இருந்து வரும். அடுத்த ஐந்து மாதத்தில் கொடுக்கல் வாங்கல் என்பது அத்தனை திருப்திகரமாக அமையாது. முக்கியமாக இந்த நேரத்தில் எவரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கூடாது. கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்து காத்திருந்த நிதி உதவி கிடைப்பதில் இழுபறியான சூழல் உருவாகும்.

குடும்பம் : குடும்பத்தில் புதிய சலசலப்புகள் உருவாகும். உங்கள் வார்த்தைகளை யாரும் மதிப்பதில்லை என்று அநாவசியமாக ஆதங்கம் கொள்வீர்கள். குடும்பத்தினரின் மனநிலையைப் புரிந்துகொள்ளாது அவசரப்பட்டு பேசுவதால் வீண் பிரச்னைகள் உருவாகும். வாழ்க்கைத்துணையுடன் தனிமையில் மனம் விட்டு பேசுவதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும். நண்பர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் குடும்பத்தில் குழப்பம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு.

கல்வி : மாணவர்களின் கல்விநிலை இந்த நேரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருந்து வரும். ஆராய்ச்சித்துறையில் இருக்கும் உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் சற்று தடுமாற்றம் காண்பார்கள். ஆசிரியர்களிடம் நற்பெயர் காண போராட வேண்டியிருக்கும்.

பெண்கள் : அநாவசிய சிந்தனைகளால் மனதில் ஒருவித பய உணர்வு இடம்பிடிப்பதை தவிர்க்க இயலாது. உறக்கத்தின்போது அவ்வப்போது கனவுத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். உங்கள் மனக்குழப்பம் குடும்பத்தினரிடமும் வெளிப்படுவதால் வீண் பிரச்னைகள் முளைக்கும். குடும்பப் பெரியவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது அவசியம். வயது முதிர்ந்த உறவினர் ஒருவர் மூலம் குடும்பப் பாரம்பரியத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

உடல்நிலை : நட்சத்திர அதிபதி சனியின் பலத்தினால் பொதுவாக உடல்நிலை சீராக இருந்துவரும். ஏற்கனவே ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள் உரிய சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்வது நல்லது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியம். வைட்டமின் சி அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளுதல் நலம்.

தொழில் : தொழில்நிலையைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி குரு 12ல் அமர்வதால் தொழில்முறையில் அதிகப்படியான அலைச்சலை சந்திப்பீர்கள். அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு தேவையற்ற இடமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மிகுந்த சோதனைக்கு உள்ளவார்கள். இரவு, பகல் பாராது கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுயதொழில் செய்வோர் ஓரிடத்தில் நில்லாமல் ஓடியாடி வேலை செய்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வளர்ச்சியைக் காண இயலும். எல்ஐசி முகவர்கள், வங்கியில் கடனுதவி பெற்றுத் தரும் ஏஜண்ட்டுகள், பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் ஆகியோர் கடுமையாக அலைந்தாலும் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். விவசாயிகள், உணவுப் பண்டங்கள் உற்பத்தி செய்வோர் நல்ல லாபம் காண்பர். வண்டி வாகனப் பணியாளர்கள் பணியின் போது அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
பரிகாரம் : திங்கள் தோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபடுங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.

ரேவதி : தவத்தினை நிதம் புரி

பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற சூழலையே தருகிறது. இருப்பினும் புத்தி காரகன் புதனை நட்சத்திர அதிபதி ஆகவும் தர்மநெறியைப் புகட்டும் குரு ராசி அதிபதி ஆகவும் இருப்பதாலும் எந்தச் சூழலையும் அழகாக சமாளிப்பீர்கள். திறமையாக செயல்பட்டு வரும் அதே நேரத்தில் அவ்வப்போது தைரியத்தினை இழந்து விடுகிறீர்கள். திடீர் திடீர் என மனதில் விரக்தியான எண்ணங்கள் தோன்றுவதால் சோம்பேறித்தனம் என்பது எட்டிப் பார்க்கும். நடப்பது நடக்கட்டும், நாம் நம் கடமையைச் செய்வோம் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொண்டீர்களேயானால் எவ்வித தடையும் இன்றி செயல்பட முடியும். செயல்களில் லேசான தடுமாற்றம் உருவாகும் என்பது உண்மை என்றாலும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முயற்சிப்பீர்கள். பிரச்னைக்குரிய நேரத்தில் அதிகம் பேசாமல் அமைதி காப்பதன் மூலமாக உங்கள் தரப்பு நியாயத்தை மற்றவர்களுக்க புரிய வைக்க இயலும்.

நிதி : நிதி நிலை சீராக இருந்து வரும். என்றாலும் தற்போது வரவுநிலை குறைவதாக உணர்வீர்கள். சிக்கன நடவடிக்கைகள் மூலம் இந்த ஐந்து மாத காலத்தை சமாளித்துவிட இயலும். ஆன்மிகத்தின் பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் கவனம் தேவை. போலிச் சாமியார்கள் தரும் யந்திரம், தகடு, அதிர்ஷ்டக்கற்கள் என்று நம்பிக்கையின் பெயரால் பண இழப்பு உண்டாகலாம். சிறுசேமிப்பு உயர்வு தரும். கடன் கொடுக்கல் வாங்கல் கூடாது. அதிர்ஷ்ட வாய்ப்புகளை நம்பி இருக்கும் பொருளை இழந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

குடும்பம் : குடும்பத்தினருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உடன்பிறந்தோரின் நலனுக்காக ஒரு சில தியாகங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். தாய்மாமன், அத்தை வழி உறவினர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். தம்பதியர் தனிமையில் தங்களுக்குள் பேசிக்கொள்வதன் மூலம் பிரச்னைகள் முளைக்காது தடுக்க இயலும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் மனதிற்கு வருத்தத்தை தரலாம்.

கல்வி : புத்தி சாதுர்யத்தால் சாதித்து வரும் நீங்கள் இந்த நேரத்தில் பாடம் கற்றுத் தரும் ஆசிரியரிடம் அவப்பெயர் காண நேரிடலாம். சகமாணவர்கள் செய்யும் தவறு உங்கள் மீது வீண் பழியாக வந்து சேரும். வேதியியல், நுண்ணுயிரியல், மரபணுவியல் போன்ற துறையில் உள்ள மாணவர்கள் அபார வெற்றியைக் காண்பார்கள். மொழியியல், காமர்ஸ், எகனாமிக்ஸ், சிஏ படிப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

பெண்கள் : குடும்ப சூழ்நிலையை உணர்ந்து செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது உங்கள் கடமையாகிறது. பணிச்சுமை அதிகரிப்பதால் ஓய்வாக இருக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். அவ்வப்போது உடலில் அசதியை உணர்வீர்கள். மனதில் லேசான விரக்தி தலைதுாக்கும். கணவருடன் விவாதம் உண்டாகும் நேரத்தில் நீங்கள்தான் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். கணவரின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்வதன் மூலம் நற்பெயரை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உடல்நிலை: ரோக ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வையால் உங்கள் உடல்நிலையில் பெருத்த பிரச்னைகள் ஏதும் இருக்காது. ஆயினும் அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் பரிசோதித்து வருவது அவசியம். கண்களில் நீர் வழிதல், கண் உறுத்தல், பார்வை மங்குதல் போன்ற பிரச்னைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம்.

தொழில்: தொழில் நிலையில் தொடர்ந்து ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். ஒருபங்கு சம்பாத்யத்திற்கு இருமடங்கு வேலை செய்ய வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் கடுமையான அலைச்சலை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் புதிய முயற்சியில் எதிர்பார்க்கும் லாபம் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். தொழில் முறையில் விளம்பர யுக்திகள் பலன் தராமல் போகும். விவசாயிகளுக்கு பயிறு வகை லாபத்தினைப் பெற்றுத் தரும். அரசுப் பணியாளர்களில் பொதுப்பணித்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் பணியாற்றுவோர் லஞ்சப் புகார்களில் சிக்கி தடுமாறும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. புரோஹிதர்கள், ஜோதிடர்கள், ஆலய அர்ச்சகர்கள் ஆகியோர் சம்பாத்யம் குறைவதாக உணர்வார்கள். தேநீர் கடை, பெட்டிக்கடை, மற்றும் சிறிய முதலீட்டில் செய்யும் வியாபாரம் லாபத்தினைத் தரும்.
பரிகாரம் : புதன் தோறும் தியானேஸ்வர சுவாமியை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
தவம்செய்யார் தம்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags