1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கடகம்--குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)

 கடகம்--குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)

புனர்பூசம் 4ம் பாதம்: விதையினைத் தெரிந்திடு

மனோகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் உங்கள் நட்சத்திர அதிபதி குரு எட்டில் சென்று அமர்வது சற்றே சிரமத்தைத் தரக்கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருப்பதால் மனதில் ஆயாசம் தோன்றும். நாம் நல்லது செய்ய நினைத்தாலும் அது மற்றவர்களால் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். வருகின்ற ஐந்து மாத காலத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. கண்டச்சனியின் தாக்கமும் அஷ்டமத்து குருவின் சஞ்சாரமும் ஒரே நேரத்தில் வருவதால் நினைத்ததை சாதிக்க பொறுமையுடன் காத்திருங்கள். அவசரப்படாமல் நிதானித்து செயல்படுவது ஒன்றே உங்களுக்கான பாதை என்பதில் உறுதியாய் இருங்கள். ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்தி சாதகமாக இருந்தால் பிரச்னை ஏதும் இல்லை.


நிதி : தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் வரவு நிலையில் குறையேதும் இல்லை. அதே நேரத்தில் பண விஷயத்தில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அதிக எச்சரிக்கை தேவை. கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் உங்கள் கையிருப்பு கரையக் கூடும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்னைகள் தோன்றி சங்கடத்தைத் தரும். பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள். பிராவிடன்ட் பண்ட் முதலான தொகைகளைப் பெறுவதில் தடைகளை சந்திப்பார்கள்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்புகள் உருவாகலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். வயதானவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டியது அவசியம். தம்பதியர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். உடன்பிறந்தோருடனான கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தையின் மூலம் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் அலட்சியமான போக்கு மனவருத்தத்தைத் தந்தாலும் அவர்களது நிலையில் இருந்து யோசித்து செயல்படுங்கள்.

கல்வி : குருவின் எட்டாம் இடத்து சஞ்சாரம் தொடங்குவதால் அவ்வப்போது ஞாபகமறதி தோன்றும். ஒருமுறைக்கு இருமுறை பாடங்களை எழுதிப் பார்ப்பது நல்லது. நான்காம் வீடாகிய வித்யா ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் ஆசிரியர்களின் உதவி கிட்டும். குருட்டு மனப்பாடம் செய்வதை விட பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதால் மட்டுமே உங்களால் சமாளிக்க இயலும். ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் புரியாத சூழலில் வெட்கம் பாராது ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது. ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவர்கள் தங்கள் கைடுகளை பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

பெண்கள் : குடும்பத்தில் தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற தவறான எண்ணம் உங்கள் மனதில் உருவாகலாம். வீட்டு வேலை செய்யும்போது உண்டாகும் சிந்தனைச் சிதறல் சங்கடத்தைத் தரக்கூடும். வங்கி, ஏடிஎம் முதலான இடங்களுக்கு செல்லும்போது கணவர் அல்லது நெருங்கிய தோழியருடன் இணைந்து பண விவகாரங்களை கையாளுங்கள். இடம், பொருள் அறிந்து பேசுவது உத்தமம். பொதுவாக அதிகம் பேசாமல் அமைதி காப்பது நலம். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை.

உடல்நிலை : நட்சத்திர அதிபதி குரு எட்டில் அமர்வதால் அவ்வப்போது உடல்நிலையில் பிரச்னைகளைக் காண நேரிடலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் பரிசோதித்து வருவது அவசியம். வண்டி, வாகனங்களை இயக்கும் போது கவனக்குறைவால் சிறு விபத்து உண்டாகும் வாய்ப்புண்டு. பூச்சிக்கொல்லி மருந்துகள், கொசுவத்திச் சுருள், எலி மருந்து ஆகியவற்றை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

தொழில் : அரசுப்பணியாளர்கள் தேவையற்ற இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். ரெவின்யூ, கருவூலம், பத்திரப்பதிவு, நீதிமன்றம், பள்ளிக்கல்வி, பத்திரிக்கை ஆகிய துறைகளில் பணிசெய்வோர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நலம். அடுத்தவர்கள் செய்யும் தவறு உங்கள் மீது வீண்பழியாக வந்து சேரக்கூடும். மார்ச் 21 முதல் சுயதொழில் செய்வோருக்கு காலநேரம் சாதகமாக அமையும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் கீழ்நிலைப் பணியாளர்கள் நிர்வாகத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. அடுத்து வரவுள்ள ஐந்து மாத காலத்தில் வங்கியில் கடன் பிரிவில் பணியாற்றுபவர்கள், வாராக் கடனை வசூலிப்பவர்கள் ஆகியோர் வாடிக்கையாளர்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கையாள வேண்டியது அவசியம்.
பரிகாரம் : தினமும் அபிராமி அந்தாதி படித்து வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.

பூசம் : தெய்வம் நீ என்றுணர்

சந்திரனை ராசிநாதன் ஆகவும் சனியை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு தற்போது குருபார்வை விலகுவதோடு கண்டச்சனியின் பார்வை தொடர்வதால் மனதில் லேசான சோம்பேறித்தனம் குடிகொள்வதோடு சற்று அசட்டையாகவும் செயல்படுவீர்கள். இதனால் இறங்கிய செயல்களில் முழுமையான வெற்றியை அடைய இயலாது போகும். பாக்யாதிபதியான குரு எட்டில் அமர்வதால் ஒரு சில வேண்டாத விளைவுகளுக்கு ஆளாகலாம். மனதிற்குப் பிடித்தமில்லாத சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும். எதையும் திட்டமிட்டு செயல்பட இயலாத வண்ணம் தடுமாற்றம் தோன்றும். இதனால் மனதில் தைரியக்குறைவுஉண்டாவதோடு தேவையற்ற கற்பனைகளுக்கு இடமளித்து அநாவசியமான பயத்தினை வரவழைத்துக் கொள்வீர்கள். வீண் வம்பு விவகாரங்கள் வந்து சேரக்கூடும் என்பதால் நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
நிதி : கடன் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். யாரை நம்பியும் ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. தன ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் சேமிப்பில் குறைவு உண்டாகாது. அதே நேரத்தில் புதிய சேமிப்பினைத் துவங்க இயலாமல் போகும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். மருத்துவ காப்பீடுகள் உரிய நேரத்தில் பயன் தரும். ஆன்மிகம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும்.
குடும்பம் : தம்பதியருக்குள் வீண் மனஸ்தாபம் தோன்றி மறையும். குடும்பப் பெரியவர்களின் வலுக்கட்டாயமான ஆலோசனைகள் மனதில் வெறுப்பினை தோற்றுவிக்கும். ஆயினும் தற்போதைய நேரத்தின் தன்மை அறிந்து அமைதியாக கேட்டுக்கொள்ளுதல் நலம். நீங்கள் நல்லது என்று நினைத்து உங்கள் கருத்தினை சொல்லப்போக அது குடும்பத்திற்குள் அநாவசியமான விரிசலை தோற்றுவிக்கலாம். உடன்பிறந்தோர் உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் செயல்கள் மன வருத்தத்தைத் தோற்றுவிக்கும்.
கல்வி : மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேர்வு நேரத்தில் படித்த பாடங்கள் நினைவிற்கு வராமல் கலக்கத்தினை உண்டாக்கும். படித்த பாடங்களை உடனுக்குடன் எழுதிப் பார்ப்பது நல்லது. தேர்வுமுறை உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையலாம். வகுப்பினில் தயக்கம் கருதி அமைதியாக இருக்காமல் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறுதல் அவசியம். கணிதம். இயற்பியல், வேளாண்மை, தாவரவியல் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
பெண்கள் : குரு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தரும் நிலையில் இருக்க வேண்டும். நாமாக ஒன்று சொல்லப்போக அது மற்றவர்களைப் பொறுத்த வரை பாதிப்பாக அமையலாம். பணப் பரிவர்த்தனைகளை தனித்து செய்வது நல்லதல்ல. சிறு சிறு விஷயங்களில் கூடி அண்டை வீட்டாரிடம் கவனத்துடன் பழகவும். குடும்பப் பெரியவர்களின் மனநிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
உடல்நிலை : குரு எட்டாம் இடத்தில் சனியின் வீட்டில் அமர்வதால் மருத்துவ செலவுகள் உண்டாகக் கூடும். உடலில் தோன்றும் எந்த ஒரு சிறு பிரச்னையிலும் அசட்டையாக இருந்து விடாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், ஜலதோஷம், சளி, மூக்கடைப்பு, படபடப்பு, அளவுக்கதிகமாக மூச்சு வாங்குதல், டஸ்ட் அலர்ஜி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும்.

தொழில் : பணியாளர்கள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கீழ்நிலைப் பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலையையும் நீங்களே சேர்த்து செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். தவறு செய்யும் மேலதிகாரிகளுடன் மோதல் போக்கு உண்டாகலாம். அடுத்தவர்களின் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுயதொழில் செய்வோர் கடுமையான அலைச்சலுக்கு ஆளாவார்கள். விவசாயிகள் தங்கள்பொருட்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல் அவதியுறுவர். எனினும் அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய உதவிகள் தவறாமல் வந்து சேரும். மோட்டார் பணியாளர்கள், இயந்திர பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், பழம், காய்கறி வியாபாரிகள், பெட்டிக்கடை தேநீர் கடை வைத்திருப்போர் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம் : தினமும் திருவாசகம் படித்து சிவபெருமானை வணங்குங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை.

ஆயில்யம்: பேய்களுக்கு அஞ்சேல்

இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் அமைதி காக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. எண்ண ஓட்டத்திற்குத் தக்கவாறு நடைபெறுகின்ற செயல்கள் இருக்காது. மனதினில் தர்ம சிந்தனைகளுக்கு இடம் தர வேண்டும். சுயநலத்திற்காக இல்லாமல் அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு முன்நின்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். சந்திரனை ராசிநாதனாகவும் புதனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் வீணான மனக்கவலைகளை விடுத்து நிதானத்துடனும் மதியூகத்துடனும் செயல்பட வேண்டும். அடுத்தவர்கள் சொல்வதை நம்பி உங்கள் முயற்சிகளை நிறுத்தி விடாதீர்கள்.

நிதி : பொருள்வரவில் அதிரடி வேகத்தினைக் காண முடியாது. முறையான அதே நேரத்தில் நிதானமான தன வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும் என்பதால் தனிப்பட்ட முறையில் உங்களது சம்பாத்தியத்தினை மட்டும் வைத்துக் கொண்டு சேமிப்பில் ஈடுபட முடியாது. கல்விக்கடன் பெறுவதற்காக காத்திருப்போருக்கு உதவி கிடைக்கும். மியூச்சுவல் பண்ட், ஷேர் மார்க்கெட், பிட் காய்ன் போன்றவற்றில் முதலீடு செய்வதில் அதிக கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுங்கள். நண்பருக்கு செய்யும் கடனுதவி திரும்ப வராமல் போகலாம்.

குடும்பம் : குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்து வரும். குடும்ப உறுப்பினர்கள் எல்லா பொறுப்புகளையும் தன் மீது சுமத்தியுள்ளதாக உணர்வீர்கள். உடன்பிறந்தோர் சரியான நேரத்திற்கு உதவவில்லையே என்ற வருத்தம் தோன்றலாம். உறவினர்களால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிப்பதோடு அவர்களது பேச்சினால் கலகம் விளையும் வாய்ப்பும் உள்ளது. அவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. குழந்தைகளின் மீதான பாசம் மிகவும் அதிகமாக இருக்கும். அவர்களது வாழ்வினில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள்.

கல்வி : குருவின் எட்டாம் இடத்து அமர்வு ஞாபக மறதியைத் தோற்றுவிக்கும். அதே நேரத்தில் உங்களின் எழுத்துத்திறன் அதிகரிக்கும். நல்ல வேகமாக எழுதக் கற்றுக்கொண்டு விடுவீர்கள், பத்து முறை படிப்பதைவிட ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும் என்பதால் பாடங்களை அவ்வப்போது எழுதிப் பாருங்கள். ஆசிரியரின் துணையோடு பாடங்களை புரிந்து கொள்வீர்கள். ஏரோநாட்டிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங், பேஷன் டிசைனிங், ஆர்க்கிடெக்சர் துறைகளில் பயிலும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.

பெண்கள் : உங்களுடைய அளவு கடந்த உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவரவர் தங்கள் குடும்ப நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்தும்கூட பெரிதாக கவலைப்படாமல் அவர்கள் எதிர்பார்த்த உதவியை செய்து தருவீர்கள். உங்கள் மனக்குறைகளை கணவரோடு மட்டும் பகிர்ந்துகொள்வது நல்லது. குடும்பப் பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

உடல்நிலை: உங்கள் தேக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. வயதானவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்கு இடமளிக்க வாய்ப்பு உண்டு. பக்கவாதம், பெராலிஸிஸ் போன்ற நோய்கள் தாக்கக் கூடும் என்பதால் அவ்வப்போது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. குரு எட்டில் இருக்கும் காலத்தில் மருத்துவ செலவுகளைத் தோற்றுவிப்பார் என்பதால் முன் எச்சரிக்கையாக வருமுன் காத்தல் அவசியம்.

தொழில் : அதிகப்படியான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம். பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவார்கள். அலுவலகத்தில் உங்களைப் புகழ்ந்து பேசி நன்றாக வேலை வாங்கிக் கொள்வார்கள். புன்னகையோடு கொடுத்த வேலையை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். மார்ச் மாத இறுதியில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். சுயதொழில் செய்வோர் தொடர்ந்து ஓய்வற்ற நிலையையே சந்திப்பார்கள். பலசரக்குக் கடை, ஓட்டல் தொழில், ஸ்வீட் ஸ்டால் ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். விவசாயிகள் நவீன முறையைப் பின்பற்றி விளைச்சலைப் பெருக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் உழைப்பு அதிகமாகவும் பலன் குறைவாகவும் இருக்கும்.
பரிகாரம் : சனி தோறும் யோகநரசிம்மரை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags