1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கன்னி--குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)

கன்னி--குரு பெயர்ச்சி பலன்கள் (13.11.2021 முதல் 14.04.2022 வரை)

உத்திரம் 2, 3 4ம் பாதம் :தூற்றுதல் ஒழி

புத்திகாரகன் புதனை ராசி அதிபதி ஆகவும் ஆத்ம காரகன் சூரியனை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஆத்மஞானத்தை போதிக்கும். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். இருப்பினும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வழிகளைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தினை அடைவீர்கள். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும்.



நிதி : ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் தனவரவு என்பது தொடரும். ஆயினும் கடன்பிரச்னைகளால் சற்று அவதிப்படுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிறப்பு கவனம் தேவை. நம்மிடம் கடன் வாங்கிய நபர் கடனைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பார். நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் சொன்ன நேரத்திற்கு திருப்பித்தர இயலாமல் ஏதேனும் ஒரு தடை வந்து சேரலாம். புதிய சொத்து வாங்கும் முயற்சியை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் கவலை இல்லை. குடும்பத்தினரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் கொண்டிருப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலையில் கண்டு வந்த சிரமங்கள் முற்றிலுமாகக் குறையும். தம்பதியருக்குள் வீண் விவாதம் காரணமாக அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உறவினர்கள் வழியில் அநாவசியமான கலகங்கள் வந்து சேரும். திருமணம் முதலான விசேஷங்களில் கலந்துகொள்ளும்போது அதிகம் பேசாமல் அமைதி காப்பதன் மூலம் வீண் பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வு எழுதும் போது கேள்விக்குரிய சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உண்டாகும். இதனைத் தவிர்க்க நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. ஞாபக மறதித் தொந்தரவால் சற்று சிரமப்படுவீர்கள். பொறியியல், வணிகவியல், கணிதம், ஜோதிடவியல் துறை சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : பல்வேறு விஷயங்களை அலசி ஆராயும் திறன் கொண்டிருக்கும் நீங்கள் இந்த நேரத்தில் அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. நல்ல தோழியரை பெற்றிருக்கும் நீங்கள் சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒன்றினைப் பற்றிப் பேசப்போய் அதன் மூலம் அவர்களோடு கருத்து வேறுபாடு கொள்ள நேரிடலாம். குடும்பப் பெரியவர்களோடு அனுசரணையான அணுகுமுறை தேவை. மனக்குழப்பத்தின் காரணமாக நீங்கள் பேசும் வார்த்தைகள் தம்பதியருக்குள் கருத்து வேறுபாட்டினை உண்டாக்கிவிடும். கவனம் தேவை.

உடல்நிலை : ஆறாம் இடத்தில் அமரும் குரு நீண்டநாள் வியாதிகளைக் குணப்படுத்துவார். அதே நேரத்தில் நோய் எதிர்ப்புத்திறன் குறைவதால் தொற்று நோய்க்கான வாய்ப்புண்டு. அடிவயிறுப் பகுதிகளில் வலி உண்டானால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் மருத்துவரை அணுகுவது நல்லது. வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை அவசியம். உடல்நலம் காக்க தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று விழுங்குவது நல்லது.

தொழில் : போட்டியாளர்கள் மற்றும் பொறாமைக்காரர்களால் பரப்பப்படும் தவறான தகவல் மூலம் அலுவலகத்தில் உங்களுக்கு அவப்பெயர் தோன்றலாம். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் நற்பெயர் காண போராட வேண்டியிருக்கும். பாதுகாப்புத்துறை, தொழிற்சாலைப் பணியாளர்கள், வருவாய்த்துறை, மருத்துவம், நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் தங்கள் பணிகளில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். சுயதொழில் செய்வோர் இந்த நேரத்தில் தொழில் ரீதியாக பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது.
பரிகாரம் : செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வரவும்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.

அஸ்தம் : மந்திரம் வலிமை

ஆறாம் இடத்தில் குரு அமர்ந்தால் மந்திர பிரயோகம் வந்து சேரும் என்று சொல்வார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். உங்கள் இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை தொடர்ந்து உச்சரித்து வருவதன் மூலம் தவ வலிமையைப் பெறுவீர்கள். பொது இடத்தில் அதிகம் பேசாமல் அமைதியாக இருங்கள். உங்களுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறக் கூடும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது. அநாவசியமான வம்பு, வழக்குகள் வந்து சேரும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுத்துவிடாதீர்கள். அதேபோல அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுவாக இந்த ஐந்து மாத காலமும் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது.

நிதி : தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் ஓரளவிற்கு நிதி நிலையை சமாளித்து வருவீர்கள். அடுத்தவர்களுக்காக பொறுப்பினை ஏற்றுக் கொள்வதையும், தனது பொருளை அடமானம் வைத்து அவர்கள் பட்ட கடனை அடைப்பதையும் முடிந்த வரை தவிர்க்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொருளிழப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது. வண்டி, வாகனங்களை மாற்றம் செய்ய நினைப்போரும் புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோரும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையு தவிர்ப்பது நல்லது.

குடும்பம் : குடும்ப ஸ்தானத்தின் மீது குருபார்வை விழுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். குடும்பப் பொறுப்புகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். ஜனவரியில் குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அவரிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவருக்குச் செய்வீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை.
கல்வி : மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மனப்பாடம் செய்யும் திறன் உங்களுக்கு துணை நிற்கும். மனப்பாடம் மட்டும் செய்யாமல் பாடங்களைப் புரிந்து படிப்பதில் கவனம் செலுத்துங்கள். கூடுதலாக எழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வேகமாக எழுதும் கலையையும் வளர்த்துக் கொண்டீர்களேயானால் சிறப்பானதொரு வெற்றி நிச்சயம். தாவரவியல், விவசாயம், புவியியல் சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
பெண்கள் : குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் உங்களால் தீர்விற்கு வரும். இதுநாள் வரை எதிரிகளாக இருந்து வந்த உறவினர்கள் உங்களுடைய அன்பு நிறைந்த செயல்பாடுகளால் பகைமை மறந்து மீண்டும் நல்லுறவு கொள்வார்கள். கணவரின் சிக்கன நடவடிக்கைகள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றும் நேரத்தில் நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பிள்ளைகளுக்காக நீங்கள் செய்து வரும் அநாவசிய செலவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

உடல்நிலை : அஸ்த நட்சத்திரக்காரர்களில் சர்க்கரைவியாதி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சிறுசிறு விஷயங்களுக்குக் கூட மிகவும் டென்ஷன் ஆகி விடுகிறீர்கள். வருகின்ற ஏப்ரல் மாதம் வரை அளவுக்கதிகமாக எந்த ஒரு விஷயத்தையும் பற்றி குழப்பிக் கொள்ளாமல் அமைதி காப்பது உடல்நலத்திற்கு நல்லது. ஹைபர் டென்ஷன் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

தொழில் : உழைப்பதற்கு ஏற்ற பலன் இல்லையே என்ற வருத்தம் இருந்து வரும். ஏப்ரல் மாதத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும். எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. தற்போதைய சூழலின்படி அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிவோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். கட்டுமானப் பொருட்களின் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். சிறு வியாபாரிகள், தேநீர் கடை, ஓட்டல், மெஸ் வைத்திருப்போர் அபிவிருத்தி அடைவார்கள்.
பரிகாரம் : வியாழனன்று ஸ்ரீராமரை வணங்கி வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

சித்திரை 1, 2ம் பாதம் : நீதி நூல் பயில்

தத்துவவாதிகளின் புத்தகங்களைப் படிப்பதில் தனி ஆர்வம் உண்டாகும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். முக்கியமான பிரச்னைகளில் உங்களின் ஆலோசனையை நாடி வருவோரின் எண்ணிக்கை உயரும். உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் உங்களுக்கு சிறப்பான நன்மை உண்டாகும். நீங்கள் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த முக்கியமான நபர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் உருவாகும். புதனை ராசிநாதனாகக் கொண்டிருந்தாலும் நட்சத்திர அதிபதி செவ்வாயின் பலம் உங்களைக் கொள்கைப் பிடிப்பாளராகக் காண்பிக்கும். நிதானமான செயல்பாடே நிலையான வெற்றியைத் தரும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.

நிதி : தன ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் நிதி நிலை சீராக இருந்து வரும். அதே நேரத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை பெரிதாக உருவெடுக்கும். பூர்வீக சொத்துக்களை விற்க நினைப்போர் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கவனம் தேவை. ஆபரணங்கள், ஆடம்பர பொருட்கள் வாங்கும்போது விலை ஒரு முறைக்கு இரு முறை பரிசீலித்து வாங்கவும்.
குடும்பம் : வாழ்க்கைத்துணை உங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பார். அதிகப்படியான அக்கறையின் காரணமாக தம்பதியருக்குள் வீண் கருத்துவேறுபாடு தோன்றி மறையும். நெருங்கிய உறவினர் ஒருவர் கடனுதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழல் உண்டாகலாம். உறவினர்கள் வழியில் கலகம் உண்டாகும் என்பதால் சிறிது காலத்திற்கு சற்று விலகியே இருப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் பிரமிப்பூட்டத்தக்க வகையில் அமையும்.

கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அவ்வப்போது சோம்பல்தன்மை உடலில் தலையெடுக்கும். படிக்கத் துவங்கும் போதே உடலில் அசதியை உணர்வீர்கள். உங்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு நண்பர்களுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. டெக்னிக்கல் சார்ந்த படிப்புகள், கலைத்துறை, கல்வி, ஓவியம், நாட்டியம், இசைப்பயிற்சி, சங்கீதம் சார்ந்த மாணவர்கள் கடின உழைப்பினால் முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : கணவரின் துணை அல்லும் பகலும் உங்களுக்குத் தேவைப்படும். அவரோடு கருத்து வேறுபாடு தோன்றும் சமயத்திலும் அவர் உங்களை அழகாகப் புரிந்துகொண்டு உங்களுக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்வார். தம்பதியராக இணைந்து செயல்படும்போது குடும்பப் பிரச்னைகள் எளிதில் முடிவிற்கு வரக் காண்பீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க நேரிடும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையே தற்காலிகமாக சலசலப்பு உருவாகக் கூடும். அது போன்ற தருணத்தில் நீங்கள் அமைதியாக இருப்பதே நல்லது.

உடல்நிலை: குருவின் ஆறாம் வீட்டு சஞ்சாரத்தால் உடலில் சுகவீனம் தோன்றக்கூடும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். வண்டி வாகனங்களை இயக்கும்போதும் சாலை வழி பிரயாணத்தின் போதும் அதிக எச்சரிக்கை தேவை. நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமும் ஆடு, மாடு, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமும் அதிக கவனமுடன் பழகுவது அவசியம்.

தொழில் : கூட்டுத்தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. கமிஷன், தரகு, ஸ்டேஷனரி, உணவுப் பண்டங்கள் வியாபாரம், தானியங்கள் வியாபாரம், திரவப் பொருட்கள், வாசனாதி திரவியங்கள், பால் சார்ந்த வியாபாரம் போன்றவற்றில் சிறப்பான லாபத்தினைக் காண்பீர்கள். கலைத்துறையினர் பாராட்டும் விருதும் பெறும் அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் பார்வை பணியில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும். உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிசெய்வோரிடம் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும். தொழிலதிபர்கள் புதிய முயற்சியை சிறிது காலத்திற்கு ஒத்துவைப்பது நன்மை தரும்.
பரிகாரம் : செவ்வாய்தோறும் துர்கையை வழிபடுங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags