1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்:

 

நடப்பு 2024-25  நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்:

இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையானதாகவும், 4 சதவீதம் என்ற இலக்கை நோக்கியும் செல்கிறது.

5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி அளித்தல் மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதற்காக, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் அடங்கிய பிரதமரின் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, 9 முன்னுரிமை துறைகள் வாயிலாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2024-25 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் நலனில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக, உயர் விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவ நிலைகளையும் தாக்குப்பிடிக்கக் கூடிய, 109 புதிய பயிர் ரகங்களும், தோட்டக்கலை பயிர்களும் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


1,000 தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்.

பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு, ‘பூர்வோதயா’ எனப்படும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.

மகளிர் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்க, மகளிர் மற்றும் சிறுமிகள் நலனுக்கான திட்டங்களுக்காக, ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற கட்டமைப்பு வசதி உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்ரா கடன் தொகை தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு, 500 பெரிய தொழிற்சாலைகளில் பணி அனுபவ பயிற்சி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.

தொழில் பழகுநர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

விரைவில் 12 தொழில்துறை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் – நகர்ப்புறம் 2.0-ன் கீ்ழ், ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும். 25,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ நிலைகளையும் தாக்குபிடிக்கக் கூடிய இணைப்பு வசதியை ஏற்படுத்த, பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் 4-ம் கட்டம் செயல்படுத்தப்படும்.

 ரூ 1,000 கோடி கூட்டு தொழில் மூலதனத்தில் விண்வெளி பொருளாதாரத்தை 5 மடங்கு விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

வருமான வரி செலுத்தும் 4 கோடி மாத சம்பளம் பெறும் தனிநபர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிவாரணம்.

புதிய வருமானவரி நடைமுறையின்படி நிலையான கழிவுத் தொகை ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படும்.

குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவுத் தொகை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

புதிய வரி நடைமுறையின் கீழ், பெரு நிறுவனங்கள் வரி 58 சதவீதத்திற்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் புதிய வருமான வரி நடைமுறைக்கு மாறியுள்ளனர்.

மின்னணு வர்த்தகத்துக்கான டிடிஎஸ் வரி விகிதம் தற்போதைய 1 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக குறைக்கப்படும்.

புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, அனைத்து தரப்பையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி கைவிடப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெரு நிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சம்பளம் வழங்குமிடத்தில் பிடித்தம் செய்யப்படும் 5 சதவீத வரி, 2 சதவீத வரி பிடித்த நடைமுறையுடன் இணைக்கப்படும்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் பயனடையும் விதமாக, மூலதன ஆதாய விலக்கு உச்சவரம்பு, ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

எக்ஸ்ரே பேனல்கள், செல்போன்கள் மற்றும் பிசிபிஏ-க்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களின் விலையை குறைக்கும் விதமாக அவற்றின் மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும்.

சூரிய எரிசக்தி உற்பத்திக்கான உபரி பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க பரிசீலிக்கப்படுகிறது.

கல்விக் கடன்: அரசு திட்டங்கள், கொள்கைகளின் கீழ் பயன்பெற தகுதிபெற இயலாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரை உயர் கல்விக் கடன் உதவி வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சதவீத வட்டியில், ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக இதற்கான மின்னணு ரசீதுகள் வழங்கப்படும்.


‘வாத்சால்யா’ - சிறுவர்களுக்கென ‘வாத்சால்யா’ எனப்படும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பங்களிப்பை மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் செலுத்துவார்கள். இத்திட்டத்தில் இணையும் சிறுவர்கள் பருவ வயதை எட்டும் போது, அவர்களது கணக்கை வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.


 

பெண்கள் மற்றும் சிறுமிகள் பலனடையும் வகையிலான திட்டங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இன்டர்ன்ஷிப் திட்டம்: பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்குவதற்கு அரசு விரிவான திட்டத்தை தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்குவதாக இந்த திட்டம் இருக்கும். நிகழ் நிலை வணிகச் சூழல், மாறுபட்ட தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் 12 மாத பயிற்சி பெறுவார்கள். இந்த இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6,000 என்பதுடன் மாதந்தோறும் அனுபவ பயிற்சிப் படியாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவு ஏற்பதுடன் அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி

நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி; நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆந்திராவுக்கான சிறப்பு நிதி: ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். விசாகப்பட்டினம் - சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும்.


பிஹார் மேம்பாட்டுத் திட்டங்கள்: பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். பிஹாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும். பிஹாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி. பிஹார் மற்றும் அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பட்ஜெட்டில் தொகுப்பு நிதி ஒதுக்கீடு.


முன்னதாக, புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு. அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவு சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.



 


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags