வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாவிட்டாலும், புதிய வரி முறை (New Tax regime) கீழ் வரும் வருமான வரி விதிப்பு ஸ்லாப்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், பழைய வருமான வரி முறையில் (Old Tax regime) ஸ்லாப்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பழசு vs புதுசு: 2020-21 நிதியாண்டு முதல், இந்தியாவில் வரி செலுத்துவோர் பழைய மற்றும் புதிய என இரண்டு வரி விதிகளின் கீழ் தங்கள் வருமானத்தை மதிப்பிடுவதற்கான முறையை தேர்வு செய்துகொள்ள வழிவகை உள்ளது. அதேபோல், ஒவ்வோர் ஆண்டும் வரி முறையை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கும். புதிய வருமான வரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும். அந்த வகையில் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள்தான் கைகொடுக்கும் என்பதால் பழைய வருமான வரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
இதன் மீதான பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், வருமான வரி விகித ஸ்லாப் பழைய, புதிய வரி முறையில் என்னவாக இருக்கிறது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம். புதிய வரி முறையில் வருமான வரி விகிதங்கள் (2024 பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு):
ரூ.0 - 3 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.3 லட்சம் முதல் 7 லட்சம் வரை - 5% வரி
ரூ.7 லட்சம் முதல் 10 லட்சம் வரை - 10% வரி
ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை - 15% வரி
ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை - 20% வரி
ரூ.15 லட்சத்துக்கும் மேல் வருமானம் - 30% வரி
புதிய வரி முறையில் நடப்பு விகிதம் Vs 2024-25 நிதியாண்டுக்கான விகிதம் ஒப்பீடு:
புதிய வரி முறையில், 3 லட்சம் வருமானம் முதலான வருமான வரி ஸ்லாப் மாற்றப்பட்டுள்ளதன் மூலம், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்று கணிக்கப்படுகிறது.
இரண்டுக்கும் பொருந்தும் சில சலுகைகள்: புதிய / பழைய என எந்தவகை வருமான வரி முறையை பின்பற்றுபவர்களாக இருப்பினும், தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிடும் முன்னரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி முறையை மூன்றில் இரு மடங்கு பேர் பின்பற்றுவதாக சுட்டிக் காட்டினார்.
ஸ்லாப்களில் மாற்றமே இல்லாத பழைய வரி முறை: நீங்கள் பழைய வரி முறையை பின்பற்றுபவர்களாக இருந்தால் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீத வரியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30 சதவித வரியும் விதிக்கப்படுகிறது. இந்த ஸ்லாபில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் பழைய வரி முறையில் வீட்டு வாடகை படி, பயணப் படி ஆகியனவற்றின் வகையில் வரிக்கான விலக்குகளை அனுமதிக்கிறது.
ரூ.2.5 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை - 5% வரி
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - 20% வரி
ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் - 30% வரி
பழைய வருமான வரி முறையில் ரூ.5 லட்சம் மேல் ஆண்டு வருமானம் இருந்தாலே 20 சதவீதம் வரி கட்ட வேண்டிய நிலை இருப்பதால் இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் புதிய வரி முறையில் ஸ்லாப்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் இன்னும் அதிகமானோர் அந்த நடைமுறைக்கு மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.