1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கருணை அடிப்படையில் வேலை கேட்டவர் கலெக்டர் ஆன கதை

 *கருணை அடிப்படையில் வேலை கேட்டவர் கலெக்டர் ஆன கதை*🫡



*2016 ஆண்டு தமிழக கேடர் பிரிவைச் சேர்ந்தவர் இளம்பகவத், அரசு பள்ளியில் இடையில் நின்ற மாணவர். தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார் அவரை பற்றி பார்க்கலாம்…*


 *நன்றி: புதிய தலைமுறை*


இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழகன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. இவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய ரேங்க் 117 வது இடத்தைப் பிடித்தார். 


இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழகன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். 


இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத்.


ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்து போனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு இருந்தது. அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. 


ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார் செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.


“வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச் சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவு கூர்கிறார் இளம்பகவத்.


ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் பலனளிக்கவில்லை. அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்து கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.


2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது. வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்' என நினைத்தார். “ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.


2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார்.


இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத்.

ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல... ஐ.ஏ.எஸ்!

2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை.

ஒருவழியாக 2016 ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்ற இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.





Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags