1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழக பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்

தமிழக பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.





பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: * புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்


தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதால், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

* அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

* விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்” அமைக்கப்படும்.

* சென்னையில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 முன்னணி சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். தமிழ்நாட்டின் விளையாட்டு துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும்.

* கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

* முதல்வரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை உலகத் தமிழர்களுடன் இணைந்து செயல்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* ஐஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.

TIDCO, SIPCOT, TANSIDCO போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

* அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

* அரசுக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

* 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உலகளாவிய பங்களிப்புடன், அறிவு சார் நகரம் (Knowledge City) உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும்.

வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco-Tourism) ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டிடங்களை புனரமைத்க்க சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு “ரோவர்” (Rover Machine) கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீதி நிர்வாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.135 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்கப்படும்.

* கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளுக்காக, இம்மதிப்பீடுகளில் ரூ.2,787 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும்.

*கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.

* வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.

* அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும்.

* நகர்ப்புற உள்ளாட்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு


உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர தமிழக அரசு உதவி செய்யும்.

* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

* கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* வரையாடுகளை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு.

* புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி செலவில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.

* முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.1547 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மருத்துவத்துறைக்கு ரூ.17,091 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* இளைஞர் விளையாட்டு நலனுக்காக ரூ.293 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு..

* மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான அம்ருத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.

* நகர்ப்புற பூங்காக்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* சேத்துமடை, ஏலகிரியில் சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* வட சென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்.

பள்ளிக்கல்வித் துறை

கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில்,அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

*மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும்.

*அடுத்த ஐந்து ஆண்டுகளில்,இத்திட்டங்கள்படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்திற்கு ரூ.8008 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கப்படும்

* சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களைத் தடுக்க சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படும்

* பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடி செலவில் தொகுக்கப்படும்.

* வள்ளலாரின் 200வது ஆண்டை ஒட்டி வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும்.

* பழமையான தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.

* இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கப்படும்.

* தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்நிலைகள் பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.

* முதற்கட்டமாக ரூ.190 கோடி செலவில் 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்
விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள 64 அணைகளைப் புனரமைக்க ரூ.1064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

* வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%-ல் இருந்து 3.80 சதவீதமாகக் குறையும்.

* உக்ரைன் போரால் வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்.

* தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்திற்கு அளிக்கப்பட்ட மானியம், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றின் தாக்கம் இந்த பட்ஜெட்டில் காணப்படும்.

* புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* முதல்வரின் முகவரின் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

* கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

* சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

* சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

* கூட்டாட்சி உரிமையை சீர்குலைக்க தொடர் முயற்சி நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆனால், மாநில உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடும்.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags