காலையில் தூங்கி எழுந்தவுடன் காலை கடன்களை முடிப்பவர்களை விட, வெறும் வயிற்றில் மாத்திரை போடும் நபர்கள் தான் அதிகம். தைராய்டு மாத்திரை ஒரு கையை ஆக்கரமித்து இருக்க, மற்றொரு கையை ஆக்கரமித்து இருப்பது அல்சர் (வயிறு புண்), கேஸ் ட்ரபுள் மாத்திரைகள் தான்.
‘டாக்டர் நான் வயிற்று புண்ணுக்கும், வாயு தொல்லைக்கும் பல வருஷமா மாத்திரை சாப்பிடுறேன்’ என்று பக்க விளைவுகள் தெரியாமல் பரிதாபமாக பலர் சுய மருத்துவம் மேற்கொள்வது பல்வேறு உடல் உபாதைகளை விளைவிக்கும். பிபிஐ (PPI) வகை சார்ந்த மருந்துகளாகிய ஒமீபிரசோல் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரக செயல்பாட்டினை பாதிக்கும் என்ற சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளன.
எளிய பல சித்த மருத்துவ மூலிகைகள் இத்தகைய வாயு தொல்லைக்கும், முக்கியமாக வயிற்றுபுண்ணுக்கும் நிரந்தர தீர்வு தருவதாக உள்ளன. அதில் ஒன்று தான் நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் ‘ஏலக்காய்’.
மணமூட்டிகள் தான் நம் ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரங்கள். இதை அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் மணமூட்டிகளுக்காக நம் நாட்டை நாடி வந்து, அவற்றிற்கு அடிமையாகி நம்மை ஆள துவங்கிவிட்ட வரலாறு அனைவரும் அறிவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த மணமூட்டிகளின் ராணி எது தெரியுமா? ஆம். இந்த ஏலக்காய் தான்.
சித்த மருத்துவத்தில் பித்தத்தை குறைக்கும் பல்வேறு மருந்துகளிலும், சீரணத்தை சீராக்கும் பல்வேறு மருந்துகளிலும் ஏல அரிசி சேர்வது சிறப்பு. ஏலக்காய் மேல்தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மருத்துவ குணம் அதில் உள்ள அரிசியில் அதாவது விதையில் தான் அதிகம்.
கருப்பு நிறம், பழுப்பு நிறம், பச்சை நிறம் என்று பல நிறங்களில் ஏலக்காய் காணப்பட்டாலும், அதன் மருத்துவ குணங்கள் பச்சை நிற ஏலக்காயில் தான் அதிகம். அதில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட நறுமண எண்ணெய் வகைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவைதான் இதன் மணத்திற்கும்,மருத்துவ குணத்திற்கும் காரணம். அதில் முக்கிய மருத்துவ குணம் வாய்ந்த நறுமண எண்ணெய், ‘சினிஓல்’ என்ற வேதிப்பொருள் தான். இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை வாய்ந்தது.
‘உள்அண்டை ஈளை வன்பித்தம் இவைக்கெல்லாம் ஆலமாங்கமழ் ஏல மருந்ததே’ என்ற தேரையர் குணவாகடப்பாடல் மூலம், ஏலம் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையதாக அறியப்படுகிறது.
“டாக்டர் ராத்திரி எண்ணெய் பொருள் சாப்பிட்டால் செரிக்கமாட்டேங்குது, வாய்குமட்டல், சமயத்தில் வாந்தி வருது”, என்று தொடர்ந்து அசீரண வாயுவால் அவதிப்படுபவர்களுக்கு அல்சர் (குடல் புண்) உறுதியாக வரும் என்பதை, ‘தொடர் வாதபந்தமலாது குன்மம் வராது’ என்று தேரையர் சித்தரின் பிணிகளுக்கான முதல் காரணம் மூலம் அறியலாம். அவர்கள் ‘ஏலாதி சூரணம்’ என்ற சித்த மருந்தினை பயன்படுத்த நல்ல பலன் தரும்.
ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்தில் ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள் மட்டுமே சேருவதால் , நாட்பட்ட குடல்புண் (கிரானிக் காஸ்டரைட்டிஸ்) உள்ளவர்களுக்கும் நன்மையை பயக்கும். வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும். அடிக்கடி ஏலக்காய் உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.
வாய் துர்நாற்றத்தால் பிறரிடம் பேசக்கூட தயக்கப்படும் பலரும் ஏலக்காய் வாயிலிட்டு மென்று வர நல்ல பலன் தரும். இது வாய் துர்நாற்றத்திற்க்கு காரணமான பாக்டீரியாக்களை கொல்லும் தன்மையும் உடையது.
குடல் புண்ணால் அவதிப்படும் பலரும் டீ, காபிக்கு பதிலாக ஏலக்காய், சீரகம் இவற்றை லேசாக வறுத்து தூளாக்கி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள குடல்புண்ணை ஆற்றும். சீரணத்தை தூண்டி மலச்சிக்கலை தீர்க்கும். அதிகரித்த பித்தம் தன்னிலைக்கு திரும்பும். மேலும் இந்த இரண்டு மூலிகைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் குடல் சார்ந்த புற்றுநோய் வரை வரவிடாமல் தடுக்கும். அல்சர் நோயால் வயிற்றுவலியால் அவதியுறும் நபர்கள், ஏலக்காய், சீரகம், ஓமம் சேர்த்து கஷாயமாக்கி எடுக்க வலியை குறைக்கும்.
‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’ எனும் செரிமானத்தை தூண்டும் மருந்திலும் ஏலக்காய் சேருகிறது. மேலும் ஏலக்காயில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வைட்டமின்- சி யும், அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, பொட்டாசியம், சல்பர் போன்ற கனிம உப்புக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே ஏலக்காய் சேர்ந்த டீ, பாயசம் போன்ற உணவு பொருள்களை வெறும் மணமூட்டும் உணவாக மட்டும் பார்க்காமல், மருத்துவ குணமாகவும் பார்த்து பயன்படுத்த துவங்கினால், நம் பாரம்பரியத்தின் அருமை விளங்கிடும். சித்த மருத்துவத்தின் பலனும் கிடைத்திடும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.