JACTTO-GEOவின் ஒரு நாள் ஊதிய நிவாரண அறிவிப்பு! - எதிர்ப்பு! - எதிர்பார்ப்பு!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிக்காக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்கும் அறிவிப்பை 14.12.2023ல் வெளியிட்டுள்ளது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் போராட்ட கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ.
எந்தவொரு இயற்கைப் பேரிடருக்கும் நேரடியாகவும் - அரசின் மூலமாகவும் நிதியுதவி வழங்குவதிலும், களத்தில் நேரடியாக இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதிலும் தமிழ்நாட்டு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எந்நாளும் தயக்கம் காட்டியதே இல்லை என்பதே தமிழ்நாட்டின் பேரிடர் நிவாரண வரலாறு.
ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறாக, ஜாக்டோ-ஜியோவின் அறிவிப்பு வரும் முன்பு, ஓரிரு சங்கங்கள் தனிப்பட்டு அறிவித்த போதே அநேகர் நாங்கள் இம்முறை ஊதியத்தை அளிக்கப்போவதில்லை என்று தன்னெழுச்சியாக அறிவிக்கத் தொடங்கி அது நாளிதழில் செய்தியாகவும் வெளியானது. இத்தகைய சூழலில் உறுப்பினர்களின் எண்ண ஓட்டத்தைப் பொருட்படுத்தாது, முந்திக்கொண்டு அறிவித்த ஒருசிலரின் அடியொற்றிய ஜாக்டோ-ஜியோவின் அறிவிப்பு என்பது அத்தன்னெழுச்சியுணர்வை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதை சமூக ஊடகங்களில் கிளர்ந்தெழும் எதிர்ப்புகளின் மூலம் உணரமுடிகிறது.
இதற்கான காரணம் இரண்டே இரண்டுதான். ஒன்று திராவிட மாடல் விடியல் ஆட்சி. மற்றொன்று ஜாக்டோ-ஜியோ.
என்ன. . . . திராவிட மாடல் விடியல் ஆட்சியா?
ஆம். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற குரல் கேட்டு தாங்களே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவேதான் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களில் அநேகர் கருதினர். 10 ஆண்டுகால அஇஅதிமுக ஆட்சியில் அதற்குமுன் இழந்த எந்தவித உரிமைகளையும் மீட்கமுடியாத சூழலில் களப்போராட்டங்களில் தேர்தல் வாக்குறுதியிலும் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டிய திரு.மு.க.ஸ்டாலினை தமது உரிமைப் பறிப்புகளை மீட்டுத்தரும் மீட்பராகவே கருதினர்.
ஆனால், தான் மீட்பரல்ல என்பதை அஇஅதிமுகவின் இறுதி 3 ஆண்டுகளைவிடக் கடுமையான நிருவாக நடவடிக்கைகளின் வழியே உணரவைத்துக் கொண்டிருக்கிறார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். தான் ஆட்சிக்கு வந்தால் எதையெல்லாம் செய்து தருவேன் என்றாரோ அதில் ஒரு சதவீதத்தைக் கூட செய்துதரவில்லை என்பதோடே, எதையெல்லாம் அஇஅதிமுக தற்காலிகமாக நிறுத்திய போது எதிர்த்தாரோ அவற்றையெல்லாம் முன்தேதியிட்டும் காலவரையின்றியும் முழுமையாக நிறுத்தியே வைத்துவிட்டார் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். பணப்பலன்கள் நிறுத்திவைப்பு ஒருபுறமென்றால் நிருவாக நடைமுறைகளில் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நித்தம் நித்தம் அதிருப்தியிலேயேதான் இந்த 3 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கின்றனர்.
ஆக, திராவிட மாடல் விடியல் ஆட்சியின் மீதான ஏமாற்றத்தையும் - அதிருப்தியையும் - கோபத்தையும் வெளிக்காட்டும் உணர்வு வெளிப்பாடாகவே இந்த ஊதிய நிவாரணத் தவிர்ப்பை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கருதுகின்றனர்.
சரி. ஜாக்டோ-ஜியோ எப்படி காரணம்?
கடந்த அஇஅதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போதெல்லாம் வீதியிலிறங்கி போராடியது ஜாக்டோ-ஜியோ. 2017-ல் வழக்காடுமன்றமே தலைமைச் செயலாளரை அழைப்பித்து ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்த வைத்த வரலாற்றை உருவாக்கிய ஜாக்டோ-ஜியோ, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெரிதாக எந்தவொரு போராட்டத்தையும் இலக்கை நோக்கி நடத்தி முடிக்கவே இல்லை. அஇஅதிமுக ஆட்சியில் இழந்ததைவிட அதிக அளவு பணப்பலன்களையும் மன நிம்மதியையும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இழந்த போதும் வலுவான எந்தவொரு எதிர்ப்பையும் ஜாக்டோ-ஜியோ இந்த 30 மாதங்களில் பதிவு செய்யவே இல்லை.
கோரிக்கையே இல்லாத நம்பிக்கை மாநாடு நடத்தியபோதே ஜாக்டோ-ஜியோ தன் மீதான நம்பிக்கையைப் பெருவாரியாக இழந்துவிட்டது. அதன்பின் போராட்டங்களை அறிவிப்பதும் பின்னர் பேச்சுவார்த்தை எனும் பேரில் ஒத்திவைப்பதுமாகவே இந்த 30 மாதங்களைக் கடத்தியுள்ளது ஜாக்டோ-ஜியோ.
எப்டியிருந்த நான் இப்டி ஆயிட்டேன் என்பது போல ஜாக்டோ-ஜியோ வலுவிழந்து போக அதிலுள்ள பெரும்பான்மைச் சங்கங்கள் தனித்தனியே ஒரு சிலர்தான் இத்தொடர் நலிவிற்குக் காரணமெனக் கூறி வந்தாலும் அவர்கள் அந்த ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு ஜாக்டோ-ஜியோவை வலுவூட்ட இதுவரை முன்வரவே இல்லை என்பதால் உறுப்பினர்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாகவே ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழுவிற்கு எதிரான மனநிலைதான் உருவாகியுள்ளது. அதன் தீர்க்கமான வெளிப்பாடுதான் தற்போதைய ஜாக்டோ-ஜியோவின் ஒரு நாள் ஊதிய நிவாரண அறிவிப்பிற்கு எதிரான கொந்தளிப்புகள்.
27.05.2021-ல் பெருந்தொற்று நிவாரணத்திற்காக சங்கங்களின் அறிவிப்பை ஏற்று ஒரு நாள் ஊதியத்தை ஊழியர்களின் விருப்பக் கடிதம் பெற்று பிடித்தம் செய்து கொள்ள அரசாணை 52-ஐ பணியாளர் & நிருவாகச் சீர்திருத்தத்துறை வெளியிட்டது. ஆனால், அப்போது யாவருமே ஊதியப்பிடித்தம் செய்ய விரும்பியிருந்ததால் தனியாக விருப்பக் கடிதம் என்ற ஒன்றை பெரும்பான்மையான அலுவலகங்களில் கோரவேயில்லை. நேரடியாகப் பிடித்தம் செய்தனர். பலர் ஒரு நாளுக்கு மேலும் பிடித்தம் செய்யவும் விருப்பம் தெரிவித்தனர்.
தற்போதும் இதைப் போன்ற நடைமுறையை அரசு வெளியிடவே வாய்ப்புள்ளது. அவ்வாறு அரசாணை வெளிவருமெனில் ஊழியர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஜனவரி 2024-ல் ஊதியப் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது.
ஆனால், இம்முறை திமுக ஆட்சியின் மீதும் ஜாக்டோ-ஜியோவின் மீதும் மிகப்பெரும் ஏமாற்றத்திலும், அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதால் ஊழியர்களின் விருப்பமின்றி ஊதியப்பிடித்தம் செய்ய முடியாத சூழல்தான் உள்ளது.
மேலும், முன்னரே திட்டமிட்டபடி மாவட்டத் தலைநகர் மறியல் நடத்தப்படாது இரத்து செய்யப்பட்டாலும், டிசம்பர் 28-ல் சென்னைக் கோட்டையை முற்றுகையிட்டு முதல்வரைச் சந்திப்பது என்று அறிவித்துள்ளது ஜாக்டோ-ஜியோ.
துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டு கானலான உடன்பாடுகளும், முன்னர் வாக்குறுதியளித்த முதலமைச்சரே அதை மறுதலித்த நிகழ்வுகளும், கூட்டமைப்பிற்குள்ளான உள்ளடி வேலைகளும் அடுக்கடுக்காக நடந்தேறியுள்ள சூழலில் கோட்டை முற்றுகையை வெற்றிகரமாக நடத்தி முடித்து ஒட்டுமொத்தமாக இல்லை எனினும் ஒன்றிரண்டு கோரிக்கைகளையாவது மீட்டெடுத்தால் மட்டுமே ஜாக்டோ-ஜியோ தன்மீதான நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். அதன் தாக்கம் ஜனவரி மாத ஊதியப் பிடித்தத்தில் தீர்க்கமாகத் தெரியவரும்.
எப்போதும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தமிழ்நாட்டு அரசிற்கு அதன் நெருக்கடி காலங்களில் உற்ற துணையாகவே இருந்து வந்துள்ளனர். இப்போதும் ஒரு நாள் ஊதியமல்ல மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அந்த நொடியே அரசின் பங்களிப்புத் தொகையான சுமார் 30,000 கோடி ரூபாயை அரசே எடுத்துக் கொள்ள மறுப்பேதும் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில், எமது உழைப்பிற்கான ஊதியமும் ஓய்வூதியமும் மட்டும் எமக்குப் போதும் என்பதே ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் எண்ணம்.
அதேபோன்று, ஊழியர்களின் உரிமைகளை உறிஞ்சிக் குடிக்கும் அட்டைப்பூச்சி போல ஆட்சியாளர்கள் மாறத்துடிக்கையில் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு உரிமை மீட்பிற்கு நேராகக் கடந்து செல்ல அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தயங்கமாட்டார்கள் என்பதை பலமுறை நடத்திக்காட்டியதே இன்றளவும் வரலாறாக உள்ளது. அவ்வரலாறு மீண்டும் அரங்கேற்றப்பட வேண்டுமா வேண்டாமா என்பது ஆட்சியாளர்களின் கரங்களில்தான் உள்ளது. அதற்கான அச்சாரம் தான் இந்த 'ஊதிய நிவாரண தவிர்ப்புத் தன்னெழுச்சி' உணர்வு வெளிப்பாடுகள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.