1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கும்பம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023

கும்பம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023


அவிட்டம்; முயற்சி தள்ளிப்போகும்

தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரமும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பமும் ராசிகளாகவும். சனிபகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.

செவ்வாய், சனியின் அம்சத்தில் நீங்கள் பிறந்தாலும் கோச்சார ரீதியாக சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை கர்ம வினைக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார். அவிட்டம் 1, 2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாத சனியாகவும்,  3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கிறார்.
இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சிகளில் இழுபறி, வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல் நிலையில் ஏதேனும் சங்கடம், எதிர்பாராத விபத்து, வருமானத்தில் தடை, பணம் பலவழிகளிலும் பறந்தோடும் என்பது பொதுவான விதி. 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினர்களால் சங்கடம்,  வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை, வீண்சங்கடங்கள், நண்பர்களை விலகிச் செல்லும் நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்னை. வருமானத்தில் தடைகளை உண்டாக்குவார். இவையெல்லாம் சனிபகவான் நேர்கதியில் சஞ்சரிக்கும் காலத்திற்குரிய பொதுப் பலன்கள்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 - ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், சனி அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சங்கடங்களில் இருந்து விடுதலையை வழங்குவார் சனிபகவான். இக்காலத்தில் நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்ள முடியும். குடும்பம், தொழில், உத்தியோகம் போன்றவற்றில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். தொடர்ந்து வந்த சங்கடங்களில் இருந்து விடுதலையும், எதிர்பார்த்த வரவும் உண்டாகும். ஏப்.26, 2025 க்கு பிறகு இந்த நிலை மாறும். சங்கடமான நிலை தோன்றும். 3,4ம் பாதத்தினருக்கு ஏப்.26, 2025 வரை ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் சங்கடங்கள் உண்டாகும். உடல்நிலை, பணியில் பிரச்னைகள் ஏற்படும்.  வசிக்கும் ஊரை விட்டு வெளியூர் சென்று வாழ வேண்டிய நிலையும், குடும்பத்தில் நெருக்கடியும் தோன்றும். ஏப்.26, 2025க்கு பிறகும் எதிர்மறையான பலன்களே ஏற்படும். தொழிலில் நெருக்கடி. பணியில் பிரச்னை. குடும்பத்தில் சங்கடம், எதிர்பாலினரால் அவமானம், வீண்பழி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

குரு சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30, 2024 வரை சுக ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 5ம் ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான், 5ம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தையும், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே14, 2025 வரை குரு பகவானால் நன்மை வழங்க இயலாது என்றாலும், அதன் பிறகு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், எல்லாவித நெருக்கடிகளையும் விலக்கி வைப்பார். பணவரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகள், வம்பு வழக்குகள் என்பதிலிருந்து சாதகமான நிலையை வழங்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார்.

பொதுப்பலன்
அவிட்டம் 1, 2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது, குருவின்  சஞ்சாரம் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியும், ராகு கேதுக்களின் சஞ்சாரமும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தும் என்பதால் இக்காலத்தில் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இக்காலத்தில் இறங்க வேண்டாம். வாகன இயக்கத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.

தொழில்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலிலும் போட்டி அதிகரிக்கும். மே 1, 2025க்கு பிறகு புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

பணியாளர்கள்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான பலன் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இக்காலத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் சங்கடமான நிலை ஏற்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். மே 1, 2024 முதல் உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நன்மை அதிகரிக்கும்.

பெண்கள்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில், தொழிலில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் மிகவும் அவசியம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.

கல்வி
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.  3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் படிப்பில் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புண்டு. படிப்பில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வில் வெற்றிபெற முடியும்.

உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோய் என்பதுடன், வாகன பயணத்தில் சில சங்கடங்களும் விஷ ஜந்துக்களால் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் அவசியம்.

குடும்பம்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பதவி உயர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

பரிகாரம்; காளத்தீஸ்வரர், குல தெய்வத்தை தினமும் வழிபட்டு வர சங்கடங்கள் மறையும்.


சதயம்; நெருக்கடி அதிகரிக்கும்

யோகக்காரகன், போகக்காரகன் எனப்படும் ராகு பகவான், ஆயுள், கர்ம காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச.20, 2023 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி பகவான்.
உங்கள் ராசிக்கு சனி பகவானே அதிபதி என்றாலும் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை அவரவரின் கர்மவினைக்கேற்ப வழங்க வேண்டியவராகிறார்.

ஜென்ம ராசிக்குள் சனிபகவான் சஞ்சரிக்கும் போது ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். செயல்பட முடியாத அளவிற்கு நெருக்கடிகள் தோன்றும். வருமானத்தில் தடை உண்டாகும். கூட்டாளிகள் பிரிந்து சென்று தனித்து செயல்படுவர். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் எதிரியாக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இருக்காது என்பது பொதுவான விதியாகும். இந்த நேரத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளும், உங்கள் சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையும், நடைபெற்று வரும் திசா புத்தியும் இந்த சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச.20, 2023 -  பிப் 15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 - ஜூலை 2, 2025 வரையிலும் மற்றும் நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் சனி பகவானின் அஸ்தமன, வக்கிர காலங்களிலும் உண்டாகும் பலன்கள் சற்று மாறுபடும். இக்கால கட்டத்தில் முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். நன்மைகள் அதிகரிக்கும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையும், ஏப்ரல் 26, 2025 முதல் ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையும் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும். தேவையற்ற பிரச்னைகளால் நெருக்கடி அதிகரிக்கும். அந்நியர்களால் சிக்கல்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூரில் சென்று வசிக்கும் நிலை ஏற்படும். பொருளாதார நிலை என்பது கேள்விக்குறியாகும். பணியாளர்களுக்கு மெமோ, சஸ்பென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. வழக்குகளில் எதிர்மறையான பலன்கள் ஏற்படும். நேர்மையின்றி குறுக்கு வழிகளை பின்பற்றி வழக்குகளில் சிக்கும் நிலையும் சிலருக்கு ஏற்படும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை சுக ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 5ம் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான், மே 13, 2025 வரை உங்களுக்கு பாதகமான பலன்களை வழங்குவார். சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். உங்கள் புத்திசாலித்தனம் இக்காலத்தில் பயன்படாமல் போகும். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலையும், உடலிலும் மனதிலும் சங்கடங்களும் உண்டாகும். மே 14, 2025 முதல் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். அதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் தோன்றும். பணியாளர்களின் பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அரசியல், பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் அந்தஸ்து உயரும்.

பொதுப்பலன்
இக்காலத்தில் ஜென்ம சனியும், ராகு கேதுக்களின் சஞ்சார நிலைகளும், மே 13, 2025 வரை குருவின் சஞ்சார நிலைகளும் சாதகமாக இல்லை என்பதால் செயல்களில் கவனம் அவசியம். மற்றவர்களின் ஆலோசனைகளை ஒரு முறைக்கு நுாறு முறை யோசித்து அதன் பிறகே முடிவிற்கு வருவது நன்மையாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடுவதாக இருந்தால் நன்றாக யோசித்து கையெழுத்திடுவதால் சிக்கல்கள் ஏற்படாமல் போகும். அதிகபட்சமான ஆசைகளுக்கு ஆட்பட்டு குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் தோன்றும். அறிமுகமில்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் முடிந்தவரை அமைதியாக செல்வது நல்லது.

தொழில்
தொழிலில் எதிர்பாராத தடைகள் உண்டாகும். புதிய முயற்சிகள் பலன் தராமல் சங்கடத்தை ஏற்படுத்தும். இக்காலத்தில் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். புதிய முதலீடுகளும், தொழிலை விரிவு செய்யும் முயற்சிகளும் மே 14, 2025க்கு பிறகு பலன் தரும். தொழில் முன்னேற்றம் அடையும். அதுவரை அனைத்திலும் கவனம் அவசியம்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பணியில் முழுமையான கவனம் இருந்தால் மட்டுமே வேலையை உங்களால் தக்க வைக்க முடியும். பணியாளர்களிடம் மேலதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வர். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

பெண்கள்
குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் நன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். சுயதொழில்புரிபவர்கள் வரவு செலவில் கவனமுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் ஒத்தி வைப்பது நல்லது.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டிய காலமிது. படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும். விளையாட்டு பொழுதுபோக்கு போன்றவற்றை பொதுத்தேர்வு வரையில் ஒத்தி வைப்பது நன்மை தரும்.

உடல்நிலை
பரம்பரை நோய்கள் மீண்டும் தலைதுாக்கும். தொற்று நோய்களும் சங்கடத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத விபத்துகளால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். உடல் நலனில் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உடலில் சிறிய தொந்தரவு உண்டானாலும் உடனடியாக மருத்துவம் செய்வது நன்மையாகும்.

குடும்பம்
ஜென்ம சனி, 2ம் இட ராகு, 8ம் இட கேது, தொடர்ந்து ஜென்ம ராகு, 7ம் இடத்தில் கேது, 3,4ம் இடங்களில் குரு போன்ற சஞ்சார நிலைகளால் நெருக்கடி அதிகரிக்கும்.  குடும்பத்தில் சங்கடங்கள் தோன்றும். உறவுகளிடம் பகை உண்டாகும். தம்பதியரிடம் பிரச்னைகள் தலைதுாக்கும். சிலர்  வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் உண்டாகும் சங்கடங்களால் எந்த ஒன்றையும் சரிவர நடத்த முடியாமல் போகும். இக்காலத்தில் நிதானம் என்பது மிக அவசியம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதுடன் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வதால் தைரியம் உண்டாகும்.

பரிகாரம்; அனுமன் வழிபாட்டுடன் திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சனுார் போன்ற கோயில்களை தரிசிப்பது நலமளிக்கும்.


பூரட்டாதி; செலவு அதிகரிக்கும்

தனக்காரகன், புத்திரக்காரகன் எனப்படும் குருபகவான் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆயுள், கர்மகாரகனான சனிபகவான் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள் நட்சத்திர நாதனே ராசிநாதனாகவும் உள்ளனர்.

கோச்சார ரீதியாக சனி பகவான் சஞ்சரிக்கும் காலங்களில் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை அவரவரின் கர்ம வினைகளுக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார்.
பூரட்டாதி முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விரயச் சனியாகவும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள், தொழில், பணிகளில் பிரச்னைகளும். மனதில் குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடமும் ஏற்படும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வருமானத்தில் தடை, வீண் அலைச்சல்,  மன உளைச்சல், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும், எதிரிகளால் இடையூறு, பொருளாதார நெருக்கடி, தவறான வழியில் செல்லும் சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 -  பிப் 15, 2024 வரையிலும், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும்,  நவ, 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மைகளை உங்களால் அடைய முடியும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதியான நிலை ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

ராகு - கேது பெயர்ச்சி
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் ராகு, 8ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில் குறைபாடு, வீண் அலைச்சல், செயல்களில் தடைகள், பொருளாதார நெருக்கடி, உடல் நிலையில் சங்கடம், எதிர்பாராத விபத்துகள் உண்டாகும். 4 ம் பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல், செயல்களில் நெருக்கடி, வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு அபராதம், பொருள் இழப்பு, குடும்பத்தில் பிரச்னை, நோய்த்தொல்லை அதிகரிக்கும். ஏப்.26, 2025 க்கு பிறகு 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். குடும்பம், தொழில், பணி போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்படும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். அதே சமயத்தில் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடலில் இருந்த சங்கடம் விலகும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 30, 2024 வரை 3ம் ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை 4ம் ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் 5ம் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குரு பகவான்,  மே 13 வரை எதிர்மறையான பலன்களையே வழங்குவார். முயற்சிகள் இழுபறியாவதுடன் வருமானத்திலும் தடையுண்டாகும். மே 14, 2025 க்கு பிறகு நிலைமை சீராகும். முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, 2ம் இட குருவால் ஏப்.30, 2024 வரை நன்மைகள் அதிகரிக்கும். வருமானம் உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் 3, 4 ம் இடங்களில் சஞ்சரிக்கும் குருவால் உங்களுக்கு நன்மைகளை வழங்க முடியாமல் போகும். நெருக்கடியான நிலை உண்டாகும்.

பொதுப்பலன்
இக்காலத்தில் செயல்களில் நிதானம் அவசியம். முயற்சி இழுபறியாகும். உடல்நலனில் பின்னடைவு உண்டாகும். செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும். வரவேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும். வீண் செலவு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஊழியர்களை நம்பி எந்தவொரு பொறுப்பையும் இக்காலத்தில் ஒப்படைக்க வேண்டாம். அதனால் எதிர்மறையான பலன்களே உண்டாகும். எல்லாவற்றிலும் உங்கள் நேரடி கண்காணிப்பு இக்காலத்தில் அவசியம்.

பணியாளர்கள்
தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வேலையில் சங்கடங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசு துறையில் பணியாற்றுபவர்கள் இக்காலத்தில் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

பெண்கள்
இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலைப்பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் படிப்பிற்காக, வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் அறிவுரைகளை பின்பற்றுவது நன்மையளிக்கும். விடாமுயற்சி மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பொதுத் தேர்வில் வழங்கும் என்பதால் மற்ற செயல்களில் கவனம் செலுத்தாமல் படிப்பது மிக அவசியம்.

உடல்நிலை
திடீர் திடீரென உடலில் சங்கடம் தோன்றும். இதுநாள் வரை மறைந்திருந்த நோய்கள் இப்பொழுது தலைகாட்டும். சிலர் விபத்துகளிலும் சிக்க நேரும் என்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.  நோயின் தாக்கம் ஆரம்பிக்கும் போதே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம் அளிக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறு நேரம் நிம்மதி இல்லாமல் போகும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். தம்பதியர் இடையே சச்சரவு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை இக்காலத்தில் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

பரிகாரம்; பைரவர், வராகி வழிபாடு செய்வதுடன் உணவு, உடை தானம் செய்வதால் நன்மை அதிகரிக்கும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags