1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023

துலாம் : சனிப்பெயர்ச்சி பலன் 2023


சித்திரை; நெருக்கடி விலகும்

சகோதரகாரனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வித்யாகாரகனான புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு களத்திரக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
சனி பகவானின் சஞ்சார காலத்தில் அவர் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ற பலன்களை அவரவரின் கர்ம வினைகளுக்கேற்ப வழங்கக் கூடியவராகிறார். சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் 6 ம் இடத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கையும், முயற்சிகளில் வெற்றிகளையும், பகைவர்களை வீழ்த்தும் வலிமையையும், பணவரவையும், நினைத்ததை நடத்தும் ஆற்றலையும் வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளையும், பூர்வீக சொத்துகளில் வம்பு வழக்குகளையும், பிள்ளைகளால் சில சங்கடங்களையும், பணவரவில் நெருக்கடிகளையும் உண்டாக்குவார்.

அதிர்ஷ்ட காலம்
சதயம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 வரையிலும், நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும்  சனி பகவான் தாரா பலத்தால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் யோகபலன்களை வழங்குவார். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு யோகம், போகத்தை அதிகரிப்பார். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் தருவார். போட்டியாளர்களை எல்லாம் பின்வாங்க வைப்பார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். செயல்களை லாபமாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் அதற்கு முன்பிருந்த சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மைகளை அதிகரிப்பார். போராட்டமான நிலையிலிருந்து விடுதலை வழங்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க வைப்பார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்னைகள் உண்டாகும். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் சிலர் அவமானத்திற்கு ஆளாக நேரும். பொருள் இழப்பும் உண்டாகும். ஏப் 26, 2025 க்கு பிறகு இந்த நிலை மாறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஆரோக்கியம் மேம்படும்.  2,3ம் பாதத்தினருக்கு ஏப் 26, 2025 வரை நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலையும், புதிய முயற்சிகள் தொடங்கி அதில் வெற்றி அடையும் வாய்ப்பையும் தருவார். ஏப் 26, 2025க்கு பிறகு பணவரவில் இருந்த தடைகள் விலகும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். முயற்சிகள் யாவும் நிறைவேறும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நிறைவேறும்.

குரு சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப் 30, 2024 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை பாக்ய ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் ஜீவன ஸ்தானத்திலும் குருபகவான் சஞ்சரிப்பார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வேலைத் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின்  செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி பொறுப்புகள் வந்து சேரும். அஷ்டம, ஜீவன ஸ்தான காலங்களில் நெருக்கடிகள் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப் 30, 2024 வரை பார்வையின் மூலம் அதிகபட்ச யோகத்தை வழங்குவார். அந்தஸ்தையும் செல்வாக்கையும் உண்டாக்குவார். மே 14, 2025 முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தோன்றும், பணம், பதவி, பட்டம், செல்வாக்கு என்று வாழ்வை வளமாக்குவார்.

பொதுப்பலன்
இக்காலத்தில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.  சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தைரியமாக செயல்பட்டு வருவாயை அதிகரிப்பீர்கள்.

தொழில்
தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழிற்சாலை, தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்
உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சக ஊழியர்களும் ஆதரவு புரிவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நிலை உயரும். முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திறமை மதிக்கப்படும். ஊதியம் உயரும்.

பெண்கள்
குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணை உங்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவர். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் பங்கு அதிகரிக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். அவர்களின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவர்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். ஒரு சிலர் கல்வியில் அலட்சியமாக இக்காலத்தில் இருப்பீர்கள். எதிர்காலத்தை நினைத்து, ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் தேர்வில் வெற்றி உண்டாகும். ஒரு சிலர் வெளிமாநிலம் வெளிநாடு என்று மேற்கல்விக்காக செல்வீர்கள்.

உடல்நிலை
தொடர்ந்து இருந்து வந்த நோய்களில் இருந்து இக்காலத்தில் நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்களால் சங்கடம் உண்டாகும் என்றாலும் அவை மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெரிய அளவில் பயமுறுத்திய நோய்கள் இக்காலத்தில் நவீன சிகிச்சையால் குறைய ஆரம்பிக்கும். நடைபயிற்சி, யோகா போன்றவற்றால் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குடும்பம்
பெரியோரின் ஆதரவு இக்காலத்தில் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் சிலர் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். துணிந்து செயல்பட்டு குடும்பத்தில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் வசதிக்கேற்ப வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகள் விருப்பப்படி அவர்களுடைய மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்; குலதெய்வ வழிபாட்டால் உங்கள் குறை தீரும் நன்மை அதிகரிக்கும்.


சுவாதி; உழைப்பால் உயர்வீர்கள்

யோகக்காரகனான ராகுபகவான், களத்திரக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு டிச.20, 2023 முதல் உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார் சனிபகவான்.

கோச்சார ரீதியாக சனிபகவான் எந்த இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த இடத்திற்குரிய பலன்களை அவரவரின் கர்ம வினைக்கேற்ப அளந்து வழங்குபவர். சனிபகவான் உங்கள் ராசியில்தான் உச்சம் அடைகிறார். அவர் சஞ்சரிக்கும் கும்ப ராசியில் ஆட்சி பெறுகிறார் என்றாலும், இக்காலத்தில் குடும்பத்தில் இடையூறுகள், கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு, தொழிலில் சங்கடம். தடைகள், மேலதிகாரிகளின் விரோதம். நண்பர்கள் உறவினரிடம் கருத்து வேறுபாடு. வீண்செலவு அதிகம். கடன் தொல்லை, பிள்ளைகளால் மனம் வருந்தும் நிலை, கல்வியில் தடங்கல் ஏற்படலாம். குலதெய்வம் குடும்ப தெய்வம் என்று நாடிச் செல்லும் எண்ணம் உண்டாகும்.
இது பொதுவான பலன்தான். ஒருவரின் சுய ஜாதகத்தின் அடிப்படையில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையில், நடக்கும் திசா புத்திக்கேற்ப பலன்களில் மாறுபாடு இருக்கும்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 - பிப் 15, 2024 வரையிலும், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 29, 2025 -  ஜூலை 2, 2025 மற்றும் நவ 17, 2025 - மார்ச் 6, 2026 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் 5ம் இட சனி பகவானின் பலன்கள் மாறுபடும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.  சங்கடங்களிலிருந்து விடுபட்டு நிம்மதி காண்பீர்கள். ஆதாயம் கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். ஏப் 26, 2025 முதல் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் பிரச்னைகள் ஒவ்வொன்றாக விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பொறுப்பு, பதவியை அடைவீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, 2024 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். மே 1, 2024 - மே 13, 2025 ல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் முன்பிருந்த நிலைகளில் மாற்றம் உண்டாகும். நெருக்கடி அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வரவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. மே 14, 2025 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, பொறுப்பு என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்துச் சேர்க்கை உண்டாகும். சிலர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்கும்.

பொதுப்பலன்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் நிலையில் ராகு - கேது சஞ்சாரங்களும், குருவின் 9, 11 ம் இட சஞ்சார காலங்களும்,  நீண்ட நாளாக இருந்த பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். உங்கள் தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனமாக செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரங்களில் பிரச்னைகள் தோன்றினாலும் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.

தொழில்
பூர்வ புண்ணிய பலன் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. சனிபகவான் இக்காலத்தில் அங்கே சஞ்சரிப்பதுடன் உங்களுக்கு பூர்வ புண்ணியாதிபதியும் அவர்தான் என்பதால் உங்கள் கர்ம வினைக்கேற்ப பலன்களை வழங்குவார். இக்காலத்தில் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும்போது கவனம் தேவை. சினிமா, சின்னத்திரை, நவீன சாதனங்கள், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், கமிஷன் ஏஜன்சி போன்றவற்றில் ஈடுபடுவோர் முன்னேற்றம் காண்பர்.

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில சோதனைகள் ஏற்படும். மேலதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வர். என்றாலும் புத்திசாலித்தனத்தால் சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம் மூலம் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரன் வந்து சேரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும்.

கல்வி
இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பொதுத்தேர்வில் உங்களால் வெற்றி பெற முடியும்.

உடல்நிலை
வேலை பளுவின் காரணமாக உடலில் சோர்வு, சங்கடம் ஏற்படும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, பரம்பரை நோய்களால் சிலர் சங்கடத்திற்கு ஆளாவர். என்றாலும் மருத்துவ சிகிச்சையால் அவற்றிலிருந்து விடுபட முடியும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். பொருளாதார நிலை மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வீட்டிற்கு குடியேறுவீர்கள். உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை உண்டாகும். இக்காலத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். அதன் காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்; பிரத்யங்கிராவை அமாவாசையன்று வழிபட வளமும் நலமும் உண்டாகும்.


விசாகம்; நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்

தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு களத்திரக்காரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரகாரகனான செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். கோச்சார ரீதியாக சனிபகவான் சஞ்சரிக்கும் காலங்களில்  பலன்களை அவரவர் கர்ம வினைக்கேற்ப தரக் கூடியவராகிறார்.

விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் 5ம் இடத்திலும், 4ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு இடையூறுகள் தோன்றி அதையெல்லாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். குறிப்பாக குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு அதன் வழியாக குழப்பம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே பிரச்னைகள் தோன்றும், பூர்வீக சொத்துகளில் வழக்கு, வில்லங்கம் போன்றவை ஏற்படுவதுடன் பிள்ளைகளாலும் சங்கடங்களை அடைய வேண்டும் என்பது பொதுவான விதி. 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல், இழுபறி. தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு, மனரீதியாக நெருக்கடி, வீண் விரோதம், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையை ஏற்படுத்தலாம் என்பது பொதுப்பலன்.

அதிர்ஷ்ட காலம்
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான டிச 20, 2023 -  பிப் 15, 2024 வரையிலும், சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமான மார்ச் 16, 2024 -  ஜூன் 19, 2024 மற்றும் நவ 4, 2024 - பிப் 27, 2025 வரையிலும் தாரா பலனாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோகமான பலன்களை வழங்கி  முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஏப் 26, 2025 வரை ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மைகளை அதிகரிப்பார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். உடல் நிலையில் இருந்த சங்கடங்களை அகற்றுவார். எதிர்ப்புகளை விலக்கி வைப்பார். 4ம் பாதத்தினருக்கு 11ம் இட கேதுவால் தொட்டதெல்லாம் வெற்றியாகும். பட்டம், பதவி, செல்வாக்கு என்று அதிகரிப்பார். ஏப் 26, 2025க்கு பிறகு 1,2,3ம்  பாதத்தினருக்கு 11ம் இட கேது அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிப்பார். பணம் பலவழிகளிலும் வரும். அந்தஸ்து உயரும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப் 30, 2024 வரை சப்தம ஸ்தானத்திலும், மே 1, 2024 - மே 13, 2025 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 14, 2025 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருக்கிறார் குருபகவான். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்  நடைபெற அருள்புரிவார். வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். புதிய வீடு, வாகனம் என்ற கனவுகளை நினைவாக்குவார். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் நிலையில் முன்னேற்றத்தையும், அந்தஸ்தையும், பொன் பொருள் சேர்க்கையையும் உண்டாக்குவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 1, 2024 - மே 13, 2025 வரை நினைத்த காரியங்களில் வெற்றியையும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளையும், வேலை தேடுபவர்களுக்கு தகுதியான வேலையையும், இளம் வயதினருக்கு திருமண யோகத்தையும் உண்டாக்குவார். பண வரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்.

பொதுப்பலன்
சனி பகவானின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் ராகு, கேது, குரு பகவானின் சஞ்சாரங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.  வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பொன், பொருள், பூமி, வாகன சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றியை ஏற்படுத்தும்.

தொழில்
தொழிலில் போட்டி, பிரச்னைகள் என்று இருந்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் தரும் தொழில்களை கண்டறிந்து அதில் உங்கள் முயற்சியை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் லாபமாகும். மற்றவர்களால் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் இக்காலத்தில் உங்களை மட்டுமே நம்பி நடத்தப்படும் தொழில் ஆதாயத்தை அளிக்கும்.

பணியாளர்கள்
அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

பெண்கள்
அலுவலகப் பணியில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

கல்வி
படிப்பில் சில தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டால் தேர்வில் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் நினைத்த பாடத்தில் சேரும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை
நோய்களால் சங்கடப்பட்ட நிலை மாறும். குணமாகாது என நினைத்த நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோய்க்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் தொடர்ந்து தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தி வருவதும், சிகிச்சைப் பெருவதும் இக்காலத்தில் நன்மை தரும்.

குடும்பம்
குடும்ப நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் ஈடுபடுவீர்கள்.  சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.  பாதியில் நின்ற வீடு கட்டும் பணி தொடரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

பரிகாரம்; திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வு வளமாகும். நாளும் நலம் சேரும்.

Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags