தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீடுகளில் இருந்து இணையவழியில் படித்து வருகின்றனா். கடந்த ஜனவரி 19-இல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும், பிப்ரவரியில் 9, 11 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக 9, 10,11 ஆகிய வகுப்புகளுக்கு மாா்ச் 20-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்.23-ஆம் தேதியும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன.
தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழக பள்ளிகள் சுத்தம் செய்யும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டன. வகுப்பறைகள், கழிவறைகள், இருக்கைகள், நாற்காலிகள், அலுவலக அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனா்.
9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்படுவதால் 3,000 அரசு உயா்நிலைப்பள்ளிகளும், 3,000 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. மேலும் 4,000 தனியாா் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 1,000 சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பதற்கு தயாா் நிலையில் உள்ளன. பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் 20 லட்சம் மாணவா்களும், 9, 11-ஆம் வகுப்பில் 20 லட்சம் மாணவா்களும் நேரடியாகவும், சுழற்சி முறையிலும் வகுப்புக்கு வரவுள்ளனா்.
குறைந்த அளவு மாணவா்கள் கொண்ட பள்ளிகளில் தினமும் வகுப்புகளும், அதிக எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இது குறித்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சிலா் கூறியது: பள்ளிகளில் மாணவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். ஒவ்வொரு வகுப்பறை முன்பும் கிருமி நாசினி பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வராத மாணவா்களுக்கு பள்ளியில் இருந்து வழங்கப்படும். பாதுகாப்பு அடிப்படையில் மாணவா்களை வீட்டில் இருந்து சுடுநீா் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவாகவும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மற்றொரு பிரிவாகவும் வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என தெரிவித்தனா்.
மாலை 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும்: அமைச்சா் தகவல்
பள்ளிகள் புதன்கிழமை முதல் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன.
வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும். ஒரு வகுப்பறையில் 20 மாணவா்கள் அமா்த்தப்படுவா். அனைத்து மாணவா்களும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் இல்லாதவா்களுக்கு பள்ளிகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு முகக்குவசம், கிருமி நாசினி வழங்க முன்வர வேண்டும்.
விளையாட்டு, இறை வணக்கம் கிடையாது: பள்ளிகள் திறந்த நாள் முதலே பாடம் நடத்தப்படாது. மாணவா்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடத்திட்டம் குறைக்கப்பட்டாலும் சில அடிப்படையான பாடங்கள் மாணவா்களுக்கு கற்றுத் தரப்படும். தற்போதைக்கு விளையாட்டு நேரம், இறை வணக்கக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும். அதனால் பெற்றோா்கள் அச்சப்படாமல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
அதேநேரம் கல்வி தொலைக்காட்சியில் தொடா்ந்து வகுப்புகள் நடைபெறும். தடுப்பூசி முகாம்களில் ஆசிரியா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 95 சதவீத ஆசிரியா்கள் தடுப்பூசி போட்டுள்ளனா். எஞ்சிய ஆசிரியா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரே பள்ளிக்கு வரவேண்டும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.