பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும், 7,000 பள்ளிகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தவிர அனைத்து வகுப்புகளுக்கும், பொதுத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், மே 5ல் பொதுத் தேர்வு துவங்குகிறது.
அதற்கு முன்னதாக, கணிதம், அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, அக மதிப்பீடு வழங்குவதற்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமித்து, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
கொரோனா பரவல் உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, செய்முறை தேர்வுகளுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.'சானிடைசர்' பயன்பாடு, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்கள், 'மைக்ராஸ்கோப்' பார்க்கவும், 'பிப்பெட்' என்ற குடுவையை பயன் படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு துவங்கிய நிலையில், விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின், அவர் அளித்த பேட்டி:
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி துவங்கியுள்ளன. மாநிலம் முழுதும், 7,000 பள்ளிகளில் படிக்கும், இரண்டு லட்சம் மாணவ - மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்றுள்ளனர்.பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் உத்தரவின்படி, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் 17 உயர் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு, தேர்வு பணிகளை கண்காணித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு கட்டுப்பாடு
* செய்முறை தேர்வுக்காக, நேற்று முன்தினம் முதலே, ஆய்வகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைக்கப்பட்டன
* ஆய்வகங்களின் கருவிகள், மாணவர்கள் செய்முறை மேற்கொள்ளும் மேடைகளும் சுத்தம் செய்யப்பட்டன
* மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்த பிறகே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது
* காய்ச்சல் உள்ள மாணவ - மாணவியர் யாரும், செய்முறை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கு வேறு நாட்களில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.