1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பெண்களின் சொத்துரிமை பற்றிய விரிவான தகவல்

பெண்களின் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வு



1. ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

2. ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

3. கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

4. அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

5. பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

6. பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

7. 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

8. ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

9. இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

10. இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

11. இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.

12. பெண்களுக்கான சொத்துரிமை, பெண்ணின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமைகள் என இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகலாம். இதைத் தெளிவாக தெரிந்துகொண்டால் குழப்பங்கள் இருக்காது.

13. முதலில், பெண்களுக்கான சொத்துரிமை குறித்து பார்ப்போம். இந்த உரிமை அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. 1937 வரை இந்து பொதுக் குடும்ப சொத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லாமலே இருந்தது. அதாவது, பங்குரிமையானவர்களாக ஆண்கள் மட்டுமே இருக்க முடியும். கணவர் இறந்துவிட்டால் அவருடைய பங்கு, அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள மற்ற ஆண்களுக்குச் சேர்ந்துவிடும். ஆனால், ஆண்களைப்போல, மனைவிக்கோ, மகளுக்கோ எந்தப் பங்கும் கிடைக்காது.

14. இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, சொத்தில் பெண்களுக்கான உரிமைச் சட்டம் 1937-ல் கொண்டுவரப்பட்டது. அதன்படி, கூட்டுக் குடும்ப அமைப்பில் கணவரின் சொத்து மனைவிக்கு வந்தடைய வழி செய்தது. ஆனால், முழுமையான உரிமை வந்தடையவில்லை. அதன்பிறகு, 1956-ல் இந்து வாரிசு உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோதுதான் பெண்களுக்கு சொத்துரிமை மேலும் பலப்படுத்தப்பட்டது. அதன்படி, ஓர் ஆணின் சொத்து, அவரது காலத்திற்குப் பிறகு, பொதுக் குடும்ப சொத்து என்றும், தனிப்பட்ட சொத்து என்றும் இரண்டு வகையாகப் பிரிக்க வழி செய்தது. இதில், தனிப்பட்ட சொத்தில் வாரிசு அடிப்படையில் மனைவிக்கும், மகள்களுக்கும் சமபங்கு வழங்க வகை செய்யப்பட்டது. ஆனால், பொதுக் குடும்பச் சொத்து, பரம்பரை சொத்தில் உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

15. 1989-ல் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த சட்ட நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொதுக் குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கோரலாம் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, 25.03.1989-க்கு முன்பாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்தச் சட்ட திருத்தம் பொருந்தாது. மேலும், அன்றைய தேதி வரை பொதுக் குடும்பச் சொத்து பாகம் பிரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று இந்தச் சட்ட திருத்தம் சொன்னது.

16. 2005-ம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெண் என்பவர் குடும்பத்தின் பங்குரிமையானவராக கருதப்படுவார் என்றது. அதன் விளைவாக, பொதுக் குடும்பச் சொத்து என்றாலும், ஆணின் தனிப்பட்ட சொத்து என்றாலும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை உள்ளதோ, அந்த உரிமை பெண்ணுக்கும் உள்ளது.

17. ஆண்கள் பெயரில் உள்ள சொத்து அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைப் பொறுத்து அவர்களின் உரிமை தீர்மானிக்கப்படும். அதாவது, மூதாதையர் வழியாக ஓர் ஆணுக்குக் கிடைக்கும் சொத்தில் அவருடைய மகனுக்கும், பேரனுக்கும் பங்குரிமை உண்டு. அதேபோல, ஒரு பொதுக் குடும்பத்தில், ஓர் ஆண் பெயரில் சொத்து இருந்தாலும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் பொதுக் குடும்ப உறுப்பினர்கள் என்கிற அடிப்படையில் பாகம் கேட்க உரிமை உண்டு. அதே ஆண் அவருடைய சுயசம்பாத்தியத்தில் அல்லது அவருடைய தனிப்பட்ட பாகமாகக் கிடைக்கும் சொத்துகள் அவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட சொத்தாகும். இப்படி சொத்து வந்த முறையைப் பொறுத்து சொத்தின் உரிமை தீர்மானிக்கப்படுகிறது.

18. ஆனால், பெண்கள் பெயரில் உள்ள சொத்துகளை பொறுத்து இவ்விதமான நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.

19. கணவன் தன்னுடைய வருமானத்தைக் கொண்டு மனைவி பெயரில் ஒரு சொத்தை வாங்குகிறார். இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில் கணவன் அந்தச் சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், முடியாது எப்படியென்றால், ஒருவர் தன்னுடைய பணத்தைக்கொண்டு வேறொருவர் பெயரில் சொத்துகளை கிரயம் செய்வது, பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே, யார் பெயரில் சொத்து இருக்கிறதோ, அவரே அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார். சட்டப்படி, வேறு யாரும் அந்தச் சொத்தின் உரிமையாளராகக் கோர முடியாது. அப்படிக் கோருவது குற்றம்.

20. மேற்படி, இந்த நடைமுறையிலும் விதிவிலக்கு உள்ளது. அதாவது, ஒருவர் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணமாகாத மகள் பெயரிலோ சொத்துகளை வாங்கியிருந்தால், அந்தச் சொத்து வாங்குவதற்கான பணம் தன்னால் மட்டுமே செலுத்தப்பட்டது என்பதையும், மனைவி / மகளுக்கு வருமானம் ஏதுமில்லை அல்லது கிரயத்தொகை அவரால் செலுத்தப்படவில்லை என்பதை நிரூபித்தால் மட்டுமே அந்தச் சொத்தை அவருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும்.

21. ஒரு பெண்ணின் சொத்திற்கு யார், யார் வாரிசுகளாக இருக்க முடியும் என்பது முக்கியமான கேள்வி. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 15-ன்படி, ஒரு பெண் இறந்தபிறகு அவருடைய கணவன் மற்றும் மகன், மகள்கள் வாரிசுகளாகின்றனர். அவர்கள் இல்லாதபோது கணவனுடைய வாரிசுகளுக்கு அந்தச் சொத்து போய் சேரும்.

22. கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்துவிட்டால், விவாகரத்து வழங்கப்படும்வரை கணவன் - மனைவி என்கிற பந்தம்தான் கணக்கிலெடுக்கப்படும். ஆகவே, வாரிசு உரிமைச் சட்டப்படி, பிரிந்து வாழும் மனைவியின் சொத்து கணவனுக்குச் சென்றடையும்.

23. திருமணம் ஆகாத பெண் இறந்தால், அவரது பெற்றோரே வாரிசாக இருப்பார்கள். அவர்கள் இல்லாதபட்சத்தில் தந்தையின் வாரிசுகள் இறந்துபோன பெண்ணின் வாரிசுகளாகக் கருதப்படுவார்கள்.

24. ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு பெண் தனிப்பட்ட முழுமையான உரிமையாளர் என்கிறபோது, அவர் அந்தச் சொத்தை தன் விருப்பப்படி அனுபவிக்க முடியும். அதாவது, அவர் அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றித் தரலாம். அது தானமாகவோ / உயிலாகவோ அல்லது விற்கவோ எந்த வகையிலும் பாராதீனம் செய்யலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

25. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 26-ன்படி, இந்து மதத்திலிருந்து விலகி மதம் மாறிய ஒருவர் மற்றும் அவரின் வாரிசுகள், வாரிசு உரிமையின் அடிப்படையில் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது. இருந்தாலும், ஜாதிக் குறைபாடுகள் அகற்றுதல் சட்டத்தின்படி ஒருவர் சாதி இழப்பதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சொத்தில் உள்ள உரிமையை அவர் இழப்பதில்லை. இதையே உயர்நீதிமன்ற சமீபத்திய தீர்ப்புகூட உறுதி செய்துள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags