தேர்தலை முன்னிட்டு வரும் அறிவிப்புகளின் ஊடாக, ‘ஒன்பது, பத்து, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வின்றித் தேர்ச்சி வழங்கப்படும்’ என்ற அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், அதையொட்டி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருப்பதாக வெளிப்படும் சித்தரிப்புகளும் கல்வியை நாம் என்னவாக அணுகுகிறோம் என்கிற தீவிரமான கேள்வியை எழுப்புகின்றன. ஒரு முழு ஆண்டையும் அர்த்தமற்றதாக ஆக்கும் முடிவு இது.
சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் உலகம் அதுவரை கேள்விப்பட்டிராத கரோனா தொற்றை எதிர்கொள்ளத் தலைப்பட்டபோது கல்விக்கூடங்கள் மூடப்படுவது தவிர்க்க முடியாதது ஆனது. பின்னர், தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டன. சமூகம் ஒட்டுமொத்த முடக்கத்துக்கு ஆளாகும்போது இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவது இயல்பானது. அதற்குப் பிறகு நாம் சுதாகரித்துக்கொண்டிருக்க வேண்டும். தமிழகக் கல்வித் துறைக்கு எல்லா வகைகளிலும் அவகாசம் இருந்ததுடன், பல விஷயங்களில் முன்னுதாரணமாக மத்திய பள்ளிக் கல்வி வாரியம் இருந்தது. கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பாடத்திட்டக் குறைப்பு தொடங்கி போதிய அவகாசத்துடன் கூடிய முன்கூட்டிய தேர்வு கால அட்டவணை வெளியீடு வரை முறையான திட்டமிடலை அதன் செயல்பாட்டில் கவனிக்க முடிந்தது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையோ தானும் குழம்பி மாணவர்களையும் குழப்பியது. இப்போது உச்சகட்டமாகத் தேர்வுகளே இன்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருப்பதானது தன்னுடைய பொறுப்புகளிலிருந்து அது தப்பித்துக்கொள்வதே ஆகும். இதே அரசு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை அவசர அவசரமாகப் போதிய அவகாசம் இன்றி நடத்தி முடிக்க எத்தனிப்பதும் இந்தத் தப்பித்துக்கொள்ளுதலின் இன்னொரு பகுதியே ஆகும்.
அது எந்த வகுப்பாக இருந்தாலும் சரி; ஏற்கெனவே இந்தக் கல்வியாண்டின் பெரும் பகுதிக் கற்றல் செயல்பாடு ஒழுங்காக நடைபெறாத சூழலில், மிச்சமுள்ள நாட்களில் அது முறையாக நடைபெறுவதற்கான சூழலை மேற்கண்ட இரு முடிவுகளுமே குலைக்கும் என்பதே உண்மை. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் அடுத்துவரும் மூன்று மாதங்களை முழுமையாகக் கற்றலுக்கு ஒதுக்கி, ஜூன் இறுதியில் தேர்வு முடிவுகள் வருவதுபோல போதிய அவகாசத்துடன் தேர்வுகளை நடத்தி முடிக்கத் திட்டமிடுவதே சரியான முடிவாக இருக்க முடியும். அடுத்த கல்வியாண்டிலிருந்து ஒரு மாதத்தை இந்தக் கல்வியாண்டின் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் அதில் எந்தத் தவறையும் யாரும் கண்டிருக்க முடியாது. மாறாக, அரசின் இப்போதைய முடிவு எல்லாவற்றையும் தொலைத்திருக்கிறது. இதைக் காட்டிலும் மோசம் எதுவென்றால், இதை ஒரு கொண்டாட்டமாக அணுகும் நம்முடைய பொதுப்புத்தி.
அரசு தன்னுடைய தவறுகளுக்கான பரிகாரமாக இரு காரியங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த ஆண்டில் நடக்கவிருப்பது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மட்டுமே என்றாகிவிட்ட நிலையில், ஆசிரியர்கள் வலியுறுத்துகிறபடி ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று நாட்கள் இடைவெளி என்று போதிய அவகாசத்துடன் தேர்வு கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும். ஏனைய வகுப்புகளுக்கு அடுத்த இரு மாதங்களேனும் தீவிரமாகக் கற்றல் பணி நடப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.