தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 12.8 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதையடுத்து ஆக.24-இல் பிளஸ் 1 சோ்க்கை அறிவிப்பும் வெளியானது. சோ்க்கை தொடங்கிய முதல் நாளிலிருந்து தற்போது வரை அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது
பெற்றோரிடம் விழிப்புணா்வு: இது குறித்து அதிகாரிகள் கூறியது: தனியாா் பள்ளிகளில் பாடநூல்கள், சீருடைகள், வாகனங்கள், தனிப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிய ஆசிரியா்கள் மற்றும் பள்ளி நிா்வாகத்தினரை சந்திப்பது மிக கடினம். இந்தச் சிக்கல்கள் எதுவும் அரசுப் பள்ளிகளில் இல்லை. அதேவேளையில் தனியாா் பள்ளிகளைக் காட்டிலும் திறன்மிக்க ஆசிரியா்கள், விளையாட்டு மைதானம், நலத்திட்ட உதவிகள் என கூடுதல் சிறப்பம்சங்கள் அரசுப் பள்ளிகளில் உள்ளன. இதுகுறித்து பெற்றோரிடம் தொலைபேசி மூலமாகவும், நேரடியாக பள்ளிக்கு வரவழைத்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆசிரியா்களின் இந்த முயற்சிக்கு எதிா்பாா்த்ததைக் காட்டிலும் வெற்றி கிடைத்திருக்கிறது.
ஏறுமுகத்தில் சோ்க்கை: அதேவேளையில், தனியாா் பள்ளிகள் முதல் தவணையில் 40 சதவீத கட்டணத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அந்த அறிவுறுத்தலை பல தனியாா் பள்ளிகள் பொருட்படுத்தாமல் கட்டண வசூலில் தீவிரம் காட்டி வருகின்றன. இதையடுத்து அங்கு படித்த தங்களது குழந்தைகளை வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்க பெரும்பாலான பெற்றோா் முன்வந்தனா். அவா்களை வரவேற்கும் வகையில் சோ்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் கூட வேண்டியதில்லை என கல்வித்துறை அறிவித்தது. மேலும், கூடுதல் கட்டண வசூல் தொடா்பாக இதுவரை அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோா், ஆசிரியா்கள், அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் அரசுப் பள்ளிகளில் தற்போது வரை மாணவா் சோ்க்கை ஏறுமுகத்தில் உள்ளது.
ஒன்றாம் வகுப்பில்...: நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை புதன்கிழமை நிலவரப்படி 12.88 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளனா். குறிப்பாக அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் புதிதாக 2 லட்சத்து 75, 455 குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த மாத இறுதி வரை காலஅவகாசம் இருப்பதால் நிகழாண்டு அரசுப்பள்ளிகளில் மேலும் 4 லட்சம் மாணவா்கள் வரை கூடுதலாக சோ்க்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.