லாக் டவுன் காலத்தில் பல புதிய அனுபவங்களை சந்தித்தோம். அவற்றில் ஒன்று… அடிக்கடி மருத்துவமனை க்கு ஓடியவர்கள், சின்ன பிரச்னை என்றாலும் கவனத்துடன் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், தொடர்ச்சியாக பரிசோதனை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர்கூட மருத்துவமனை பக்கம் போகவில்லை.
எப்படியோ சமாளித்தார்கள்.
மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்தன. பெரும்பாலான க்ளினிக்குகள் திறக்கப்படவில்லை. சொந்த மருத்துவமனை வைத்திருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களில் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் குறிப்பிட்ட சதவிகிதம் மருந்து விற்பனையும், மருத்துவமனைக்கான வருமானமும் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் வெளியாகின.
இவை உண்மைதானா? லாக் டவுன் காலத்தில் ஏன் வழக்கமான சிகிச்சைகள் தேவைப்படவில்லை?
பொது நல மருத்துவர் அருணாச்சலம் பதிலளிக்கிறார். ‘‘லாக் டவுன் காலத்தில் மருத்துவமனைகள் இயங்கினாலும், நோயாளிகள் வரவில்லை என்பது உண்மைதான். மருந்துகள் விநியோகம் குறைந்ததும் உண்மைதான். நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனா பயம் காரணமாக ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் குறைந்தது.
வீட்டை விட்டு வெளியே சுற்றாததால் வெயிலின் தாக்கத்துக்கு ஆளாகவில்லை. போதுமான தண்ணீர் குடித்ததால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர். ஏதேனும் பிரச்னைகள் வந்தாலும் நம் பாரம்பரியத்தில் சொல்லப்பட்டிருந்த பாட்டி வைத்தியமுறையை முயற்சி செய்து பார்த்தார்கள்.
ஆரோக்கியமான உணவு, போதுமான ஓய்வு, நல்ல தூக்கம், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட்டது என்று ஆரோக்கியமான வாழ்வுக்குத் தேவையான அம்சங்களை இந்த லாக்டவுன் காலம் தந்தது. வாகனப் போக்குவரத்து இல்லாததால் விபத்து குறைந்தது. அதனால் இறப்பு விகிதமும் குறைந்திருந்ததை பார்க்க முடிகிறது. இவையெல்லாமே முக்கிய காரணங்கள்.’’
இவையெல்லாம் மருந்து விற்பனையில் எதிரொலித்ததா?!
‘‘லாக் டவுன் காலத்தில் எல்லா நோயாளிகளும் மருத்துவமனைக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால், அனைத்து மருந்தகங்களும் இயங்கியது. பழைய மருந்து சீட்டைக் காட்டி, மருந்து வாங்கிப் பயனடைந்தார்கள்.
நோயாளிகள் தொலைபேசி, Whatsapp, Telemedicine மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு மருந்துகளை வாங்கி பலனடைந்துள்ளனர். முழுக்க எந்த சிகிச்சையுமே தேவையில்லாமல் இருந்தது என்று சொல்ல முடியாது.’’
இதுபற்றி ஏதேனும் புள்ளிவிவரங்கள் உண்டா?!
‘‘துல்லியமான கணக்குகள் சொல்ல முடியாது. தோராயமாக சில விவரங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு மருத்துவமனை மருந்தகங்களில் மூன்றரை லட்ச ரூபாய் என்ற அளவுக்கு விநியோகம் செய்த இடத்தில், இரண்டரை லட்சம் அளவில் விற்பனையாகியிருந்தது.
ஒரு நாளைக்கு 30% நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த லாக் டவுன் காலத்தில் மருத்துவமனைகள் இயங்கவில்லை என்றாலும் மருந்து கடைகள் இயங்கின. 70% மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது 30% மருந்துகள் விற்பனையாகவில்லை என்பதுதான் உண்மை.’’லாக் டவுன் காலத்தில் நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை தேவையும் குறைந்ததா?
‘‘நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை முழுமையாக குறைந்தது என்று கூற முடியாது. மன அழுத்தத்தினால் வரக்கூடிய சில நோய்கள் இந்த லாக்டவுன் காலத்தில் வரவில்லை. நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் தொடர் சிகிச்சையிலும், கண்காணிப்பிலும்தான் இருக்கின்றனர்.
மருத்துவமனைக்கு வர முடியாவிட்டாலும், மருத்துவர்களிடம் கேட்டு மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதன் அடையாளமாக லாக்டவுன் காலத்தில் நீரிழிவு நோய், இதய நோய் மாத்திரைகளின் விற்பனைவிகிதத்தில் வீழ்ச்சி எதுவும் இல்லை. ஆன்டிபயாடிக், காய்ச்சல், தலைவலி மருந்துகள் 11% விற்பனை குறைந்துள்ளது. புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற மருந்துகளின் விலையும் குறையவில்லை.’’
- அ.வின்சென்ட்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.