மும்பையில் தாராவி தனித்தீவாய்த்தான் இருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்பு மும்பைக்கு உண்டென்றால், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைகளின் தொகுப்பு என்ற பெருமை தாராவிக்கு இருக்கிறது. அதுவும் வெறும் 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள் என்பதுவும் தாராவியின் அதிசயம்தான்.
தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்ற தமிழர்களுக்கு இரண்டாவது தாய்வீடு என்றால் அது தாராவிதான். அங்கு மக்கள் அடர்த்தி என்றால் அப்படியொரு அடர்த்தி. பத்துக்கு பத்து என்று வேடிக்கையாக சொல்கிற அளவில் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையில் சர்வ சாதாரணமாக 10 பேர் வாழுவது இந்தியாவிலேயே தாராவியில் மட்டும்தான்.
சின்னச்சின்ன சந்துகள் ஏராளம். அவற்றில் வசித்துக்கொண்டு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது. தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வீடுகளில் சமைப்பது இல்லை. அவர்கள் உணவுக்கு வெளியேதான் செல்வார்கள்.
அந்த தாராவியின் பாலிகா நகரில் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏப்ரல் 1-ந் தேதி பாதித்தபோது, மும்பை அதிர்ந்துதான் போனது. தாராவியில் ஒருவருக்கு தொற்று என்றால் அது என்ன வேகத்தில் மற்றவர்களுக்கு பரவும் ஆபத்து உண்டு என்று உணர்ந்தவர்கள் அச்சப்பட்டார்கள்.
வீட்டுக்கு ஒரு கழிவறை போதாது என்றுதான் குறைந்தபட்சம் நமது வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு, மூன்று கழிவறைகள் இருக்கின்றன. ஆனால் தாராவியில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு ஏறத்தாழ 450 முதல் 500 கழிவறைகள்தான். ஒரு கழிவறையை நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகிறபோது, இந்த கொரோனா அதிவிரைவில் பெரும்பாலோருக்கு பரவிவிடும் அச்சம் உருவானது.
ஆனால் 3 மாத காலத்தில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத்தான் தொற்று பாதித்து இருக்கிறது. பலி எண்ணிக்கை 80-க்கு கொஞ்சம் அதிகம். தொற்று பாதித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். கடந்த மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 43 பேருக்கு தொற்று பாதித்தது. இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இது 19 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு வீதம் இரட்டிப்பு ஆவதற்கு 18 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்ற வைத்து தீவிரமாய் கண்காணித்தது, அதிகளவிலான பரிசோதனைகள் நடத்தியது, தினக்கூலி தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கியது என கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கு பல காரணங்களை சொல்கிறார்கள் அதிகாரிகள்.
மும்பை மாநகராட்சி நிர்வாகத்தினர் என்ன சொல்கிறார்கள் என அறிய முயற்சித்தபோது அவர்கள் சொல்வது - கொரோனா தொற்று நோய் பரவலை தடுத்தாக வேண்டும் என்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினோம். சந்தேகத்துக்குரியவர்களை தனிமைப்படுத்தினோம். பாதிக்கப்பட்டவர்களின் தடம் அறிந்து பரிசோதனைகள் நடத்தி அவர்களை தனிமைப்படுத்தினோம். ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தினோம். வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்திலும் யாருக்கேனும் தொற்று பாதிப்பு, அறிகுறிகள் இருக்கிறதா என அறிந்தோம்.
காய்ச்சல் முகாம்களில் மட்டுமே 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி இருக்கிறோம். ஒவ்வொரு முகாமிலும் 5, 6 டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் பணியாற்றினார்கள். இதிலும் ஒரு சிறப்பம்சம், அரசு மருத்துவர்களுடன் தனியார் மருத்துவர் களும் இணைந்து சேவையாற்றியதுதான்.
இந்த முகாம்களில் பொதுமக்களின் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. இன்ப்ராரெட் தெர்மா மீட்டர்களையும், பல்ஸ் ஆக்சி மீட்டர்களையும் பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட்டோம். ஒவ்வொரு நாளும் சராரியாக 80 பேருக்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அந்த இடத்திலேயே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதென்றால், உடனடியாக அங்கே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாம் களுக்கு அனுப்பினோம். பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், விளையாட்டு வளாகங்கள் எல்லாவற்றையும் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றினோம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை தனிமைப்படுத்தி இருக்கிறோம். இந்த முகாம்களில் யாருக்கேனும் உடல்நிலை மோசமானால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அரசு அல்லது 3 தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்து சிகிச்சை அளித்தோம்.
-இப்படி அடுக்கிக்கொண்டேபோகிறார்கள்.
மக்கள் முன்வந்து சோதனை...
தாராவி குடிசைப்பகுதியில் பணியாற்றி வருகிற ஒரு மருத்துவர் சொல்லும்போது, “ நாங்கள் நடத்திய காய்ச்சல் முகாம்கள் கொரோனா தொற்று பரவலைத்தடுப்பதற்கு நல்ல பலன் அளித்தன. மக்கள் எல்லோரும் தாமாக முன்வந்து சோதித்துக்கொண்டார்கள். சில நேரங்களில் பரிசோதனை செய்து கொண்டு விட வேண்டும் என்று கருதி தங்கள் வயதைக்கூட அதிகமாக சொன்னவர்களும் உண்டு. அதிக வயதானவர்களுக்கு பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்தினோம். மக்களிடம் பயமும் இருந்தது. அதே நேரத்தில் நல்ல விழிப்புணர்வும் இருந்தது. அதனால் அவர்களிடம் இருந்து ஒத்துழைப்பும் வந்தது” என்கிறார்.
தாராவியில் ஏப்ரல் முதல் 11 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மற்ற ‘ஹாட்ஸ்பாட்’களில் நோய்த்தொற்று தீவிரமாகிற நிலையில் தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் சொல்கிறார் கள்.
தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் மிக முக்கிய அம்சம், தனி மனித இடைவெளியை பராமரிக்க இயலாத நிலையில்கூட, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்திருக்கிறது என்றால் அது அதிகார வர்க்கத்துக்கு அங்குள்ள மக்கள் அளித்த ஒத்துழைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
ஊரடங்கில் பொதுமக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படக்கூடாது என மும்பை மாநகராட்சி மட்டுமல்ல, அரசியல்வாதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல தரப்பினரும் உணவுப்பொட்டலங்கள் வழங்கி மக்களின் பசிப்பிணி போக்கினர்.
டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு உடைகள், கருவிகள், சிகிச்சைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், முக கவசங்கள், மருந்துகள், வென்டிலேட்டர்கள் என இந்திப்பட உலகினரும், தொழில் அதிபர்களும் வாரி வழங்கி இருக்கிறார்கள்.
இதெல்லாம் இங்கேயும் சாத்தியப்பட்டால், கொரோனாவை சென்னையிலும் கட்டுப்படுத்தி விட முடியும்.
தாராவி, தமிழ்நாட்டுக்கு உணர்த்தும் பாடம் ஒன்று உண்டு. அது, கொரோனாவை கூட்டு முயற்சியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதுதான்.
- ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் அதிசயம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.