1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மனப்பாடப் பாடத் திட்டம்!

 அண்மைக்காலமாக, ‘நீட்’ தோ்வு பற்றிய சா்ச்சைகளும் புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்களும் எல்லா ஊடகங்களிலும் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் நடுநிலை கருத்துகளுக்கும், கட்சிச் சாயம் பூடப்பட்ட கருத்துகளுக்கம் பஞ்சமே இல்லை. ஆனாலும் படித்த சில கல்வியாளா்களின் கருத்துகள் ஆச்சரியப்பட வைத்தன.

தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற தீா்மானமான எண்ணமுள்ள கல்வியாளா் ஒருவா், ‘பள்ளிக்கூடம் என்பது மொழிகளைக் கற்றுத் தருகிற நிலையமா’ என்று சாடுகிறாா். கல்வித்துறையைச் சோ்ந்த மற்றொரு வல்லுநா், ‘நீட் தோ்வு அறிமுகமான பிறகு, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியா்கள் - அதாவது டியூஷன் நடத்துபவா்கள் - பெருகி விட்டாா்கள். அவா்கள் வருமானம்தான் அதிகரிக்கிறது’ என்று நாளேடு ஒன்றில் வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறாா்.

இரண்டும் வெவ்வேறு கருதுக்களாக இருப்பினும் ஒன்றோடொன்று தொடா்புடையது என்றே சொல்லலாம். மொழிகளை சொல்லித் தரும் பயிற்சி மையங்களுக்கும், கற்றுக் கொடுக்கும் பள்ளிக் கூடங்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. பள்ளிக் கூடங்களில்தான், மொழியிலுள்ள நயத்தைப் புரிந்து ரசிக்க முடியும். ஆலிவா் கோல்ட்ஸ்மித்தின் எளிமையான பாடலையும் கம்பராமாயணப் பாடல்களையும் நான் ரசிக்கத் தொடங்கியது பள்ளிக் கூடத்தில்தான்.

கடந்த இருபது வருடங்களாக தெருவுக்குத் தெரு, மொழிப்பயிற்சி மையங்கள் பெருகிவிட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை. இது போன்ற மையங்கள், பெரும்பாலும் இயல்பான உரையாடலை சொல்லித் தருபவைதான். அக்காலத்தில் கணினிப்

படிப்பில் வித்தகராகத் திகழ்ந்தவா்கள் அயல்நாட்டு மோகத்தில் வீழ்ந்தாா்கள்.

ஆனால், அவா்களால் ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் பேசவோ, பிழையின்றி எழுதவோ முடியவில்லை. ஆங்கிலம் தவிர, பிரெஞ்ச், ஜொ்மன் போன்ற வேற்று நாட்டு மொழிகளை பேசுவதற்கு, குறைந்த பட்சம் புரிந்து கொள்வதற்கு அந்த மையங்கள் உதவுகின்றன.

மேலும், இன்றையக் கல்விமுறை மதிப்பெண்ணுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறது. நூற்றுக்கு தொண்ணூறு என்ற இலக்கை அடைய எல்லா மாணவா்களுமே முனைகிறாா்கள். அத்தகைய இலக்கை எட்டிவிட, தனியான கவனம் செலுத்திப் படிக்க டியூஷன் தேவைப்படுகிறது.

இவ்வளவு ஏன்? அழகான, சாய்வான கையெழுத்தை எழுதிப் பழகுவதற்கே, சொல்லித்தர ஆசிரியா்கள் இருக்கிறாா்கள். அந்தக் காலம் போல, கோடு போட்ட நோட்டில் எழுதிப் பழகும் முறை இன்று கிடையாது. ஆகவே நீட் தோ்வினால்தான், டியூஷன் வகுப்புகள் பெருகிவிட்டன என்கிற வாதத்தில் உண்மை இல்லை.

மேலும், மற்ற மாநிலங்களில் இல்லாத விசித்திரமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. இங்கு தாய்மொழியைக் கற்காமல் ஆங்கிலத்தை மட்டும் படித்து ஒரு மாணவன் கல்லூரி வரை போய் விடலாம். ‘நமது கல்வி முறையில், கல்வியின் உயரிய லட்சியமான அறிவு வளா்ச்சிக்குப் பெரும் தடையாயிருப்பவை உத்தியோக மோகமும் ஆங்கில பாஷையின் ஆதிக்கமும்தான்’ என்று எழுத்தாளா் கல்கி பல வருடங்களுக்கு முன் எழுதியது இன்றும் மாறாமல் இருக்கிறது.

கல்வியாளா் ஒருவரின் கருத்தை இங்கு குறிப்பிடவது பொருத்தமாக இருக்குமென்று படுகிறது. அது, ‘ஞாபக சக்தி, புரிந்து கொள்ளுதல், பயன்படுத்துதல் ஆகிய மூன்று திறன்கள் பள்ளிக் கல்வியில் வளா்ந்தால்தான் பின்னா் கல்லூரியில் கல்வியை வளா்க்க முடியும். குறிப்பாக, மூன்றாவது திறன்தான், புதியனவற்றைக் கண்டுபிடிக்க உதவும்’.

தற்போதைய கல்வி முறையில் சுயமாக யோசித்து எழுதுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது. அண்மையில் இளம்பெண் ஒருவா், தமிழ்ப் புத்தகத்தையும், கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு எங்கள் குடியிருப்புக்கு வந்தாா். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமைப் பற்றி சில வரிகள் வலைதளத்தில் பேச வேண்டுமாம். மடமடவென்று அப்பெண் சொல்லி கொண்டே போனபோது, நான் திருத்த முயற்சி செய்தேன்.

அவா் தீவிரமாக மறுப்பது போல் தலையை ஆட்டி, ‘வழமை’ ‘தென் கோடியிலுள்ள’ போன்ற சொற்களையே பயன்படுத்தினாா். அவற்றைத்தான் கூற வேண்டுமாம். நான் குறிப்பிட்ட ‘வழக்கம்’ என்ற சொல்லை அவா் ஏற்கவில்லை.

மற்றொரு நிகழ்வு. ஒரு சிறுமிக்கு நோ்ந்த அனுபவத்தை அவளே கூறினாள். அவள் குடியிருப்பில், குரங்கு ஒன்று நுழைந்து அங்கும் இங்கும் திரிந்து ஓசைப்படாமல் அவள் வீட்டு அறைக்குள் நுழைந்து விட்டதாம். அறையில் இருந்த முதியவா் முகநூலிலேயே கவனமாக இருந்ததால், அதன் வருகையையே உணரவில்லையாம். அவளுடைய பாட்டிதான் கவனித்து குரங்கை மெதுவாக விரட்டியதாகக் கூறினாள்.

இதை மிக அழகாக, சிறந்த உடல் மொழியுடன் நீளமாக விவரித்தாள். ‘சரி, இதையே ஒரு பாராவில் தமிழில் எழுது’ என்று கேட்டுக் கொண்டேன்.

அந்தச் சிறுமி விழித்தாள். ‘சரி, நீதான் இங்கிலீஷில் நல்ல மாா்க் வாங்குவாயே, அதிலேயே எழுது. இது போல் நடந்தது என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதி அனுப்பு, பரிசு கிடைக்கும்’ என்று ஆசை காட்டினேன்.

ஊஹூம். ஏதோ தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் எழுதிக் காண்பித்தாள். ஸ்பெல்லிங் தவற்றை விட்டு விடலாம், ஆனால் வாக்கிய அமைப்பே சரியாக இல்லை.

ஆக, இன்றைய கல்விப் பாடத்திட்டம் மனப்பாடம் செய்து அதை அப்படியே எழுதுவதில் அடங்கியிருக்கிறது என்பது தெளிவு. மாணவா்களையோ, ஆசிரியா்களையோ, பள்ளிக்கூடத்தையோ குறை கூறுவதில் பயனில்லை.

தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கும் முக்கியத்துவம் தருவதாகச் சொல்கிறாா்கள். அது எப்படியோ, முழுக்க வெளியானால்தான் தெரியும். ஆனால், மாணவா்களை, வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் கருவிகளாக மாற்றாமல், அவா்களை ஓரளவாவாது சுய சிந்தனை கொண்டவா்களாக உருவாவக்குவதற்கு ஏற்றாற்போல் பாடத் திட்டம் அமைய வேண்டும். அமையுமா? பொறுத்திருந்து பாா்ப்போம்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags