உளவியல் படிப்பில் சேர்ந்தபோது எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாலபாடம் ஒன்று உண்டு. தனிநபர் வேறுபாடுகளைக் கற்பது உளவியலில் அடிப்படை நோக்கங்களில் ஒன்று என்று. இதை Individual Differences என்பார்கள். ஒருவரைப் போல மற்றொருவர் இல்லை என்பதுதான் இந்தக் கூற்று.
இரட்டைப் பிறவிகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதைத் தெரிந்தகொள்ள உளவியல் படிக்க வேண்டியதில்லை. “அஞ்சு விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு?” என்பது நம் சொல் வழக்கில் உள்ளதே! ஆனால், மனம் சலனப்படுகையில் முதலில் மறந்துவிடும் விஷயமும் இதுதான். எல்லாவற்றையும் சமன்படுத்தித் தட்டையாகப் பார்ப்பது மனத்துக்கு சவுகரியமான காரியம். “உன் வயசுதானே அவனுக்கு, அவனால முடியுது உன்னால முடியுதா?” என்று சுலபமாய்க் கேட்க வைக்கும்.
ஒப்பிடுதல் வன்முறை. அது சுய நிராகரிப்புக்குத்தான் வழிவகுக்கும். ஆனால், அதிகாரம் கையில் வந்தவுடன் இந்த ஒப்பிடுதல் அருமையான நிர்வாக ஆயுதமாக மாறிவிடுகிறது.
நிலைகுலையச் செய்த கேள்வி..
இது பற்றி ஒரு பள்ளியில் பேசியபோது ஆசிரியர் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்: “மாணவர்களை ஊக்குவிக்க ஒப்பிடுதல் உதவாதா, பிறரைப் போல நாம் ஆக வேண்டும் என்று தோன்ற வைக்காதா?” என்றார்.
“உங்க மாணவர் உங்களிடம் கேட்கிறார்: ‘அவரும் உங்களை மாதிரி எம்.ஃபில்தானே படித்திருக்கிறார். அவர் மட்டும் எம்.என்.சி.யில ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் இருக்கும்போது நீங்க மட்டும் ஏன் ஸ்கூல் மாஸ்டராய் இன்னமும் இருபதாயிரம் சம்பளம் வாங்குகிறீர்கள்?’ இதை நீங்கள் ஊக்குவிப்பாய் எடுத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டேன்.
அவர் முகம் கோபத்தில் சிவந்தது. வெகு நேரம் கழித்து அவரே தனியாக வந்து பேசினார். “கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும் அப்படி நீங்கள் கேட்டது என்னை நிலைகுலையச் செய்தது” நான் அமைதியாகச் சொன்னேன். “நீங்களும் மாணவர்களைக் கூட்டத்தில் வைத்துத்தானே ஒப்பிடுகிறீர்கள்!”. இம்முறை பொருள் விளங்கியவாறு மவுனமாக விலகிச் சென்றார் ஆசிரியர்.
நல்ல நோக்கத்துடன்தான், நாம் பல தீய செயல்களைச் செய்கிறோம். யோசித்துப் பாருங்களேன், நாம் யாரை அதிகம் காயப்படுத்துகிறோம் நம் மீது பெரிதும் அன்பு செலுத்துபவர்களைத்தானே!
ஆக்கிரமித்தல் ஆகாது..
தனிநபர் வேறுபாட்டை ஏன் மறக்கிறோம்? உணர்வு மேலிடும்போது அறிவு மங்கிவிடுகிறது. காதல் உணர்வு மேலிடும்போது “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று பாட வைக்கிறது. அற்புதமான கவி உணர்வுதான். ஆனால், தான் நினைப்பதையே தன் காதலி பேச வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய ஆக்கிரமிப்பு உணர்வு. இந்த எதிர்பார்ப்பின் பாரம் தாங்காமல் எத்தனை உறவுகள் நொறுங்கிப் போகின்றன?
“என் அம்மாபோல எனக்கு மனைவி வேண்டும்”, “சின்ன வயசில எனக்கு நடனம் கத்துக்க வாய்ப்பில்லை. நீயாவது கத்துக்கோ” - இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
தோற்றத்தால், அறிவால், குணத்தால், மன அமைப்பால் ஒருவருக்கொருவர் வேறுபட்டுள்ளோம். வாழ்க்கை முறைகளும் வாழ்க்கை அனுபவங்களும் இன்னமும் நம் பன்முகத்தன்மையை விரிவடையச் செய்து விடுகிறது. ஆனால், இந்த வேறுபாடுகளை மறந்து ஒப்பீடு செய்வதும், கட்டுப்படுத்த நினைப்பதும், உறவின் பல ஆதாரச் சிக்கல்களுக்குக் காரணமாகின்றன.
உங்கள் மூலமாக வந்ததால் மட்டும் உங்கள் குழந்தைகள் உங்கள் சொத்துகள் ஆகிவிட மாட்டார்கள் என்றார் கலீல் கிப்ரான். ஆக்கிரமிப்பு உணர்வு இல்லாமல் காதல் சாத்தியம் என்று எழுதியவர் ஜெயகாந்தன். எல்லாச் சேதாரங்களுக்குமான விதை ஒரு தவறான எதிர்பார்ப்பு. “நான் வேறு. நீ வேறு. அது உன் கருத்து. இது என் கருத்து. நாம் வேறுபடுதலில் தவறில்லை” என்று சற்று அறிவுபூர்வமாக யோசிக்க ஆரம்பித்தால் பல உணர்வுப் போராட்டங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.