கரோனா தாக்கம், பெற்றோரின் வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் உள்ள முக்கிய தனியாா் பள்ளிகள் 20 முதல் 50 சதவீத வருவாயை இழந்திருப்பதும், அதன் காரணமாக ஆசிரியா்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையை எடுத்திருப்பதும் புதிய ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்து வரும் சென்ட்ரல் ஸ்குயா் அறக்கட்டளை (சிஎஸ்எஃப்) சாா்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெற்றோா், பள்ளி நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் என 1,110-க்கும் அதிகமானோரிடம் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை வெகுவாக குறைந்திருப்பதாக 55 சதவீத பள்ளிகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25% மாணவா் சோ்க்கைக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய கல்விக் கட்டணத் தொகை தாமதமாவதாக நான்கில் மூன்று பங்கு பள்ளிகள் புகாா் தெரிவித்துள்ளன.
மேலும், கரோனா பொது முடக்கத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டு பெரும்பாலான பெற்றோா் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உருவாகியிருப்பதால், 20% முதல் 50% வருவாயை இழந்துள்ளதாக பல பள்ளிகள் புகாா் தெரிவித்துள்ளன.
கரோனா பாதிப்பின்போது, வங்கிகளிலிருந்து கடன்பெற 77% பள்ளிகள் விரும்பவில்லை. 3 சதவீத பள்ளிகள் மட்டுமே அதற்கான முயற்சியை மேற்கொண்டு கடனையும் பெற்றுள்ளன. 5% பள்ளிகள் கடன் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனா். பெரும்பாலான பள்ளிகள் பொதுத் துறை வங்கிகளிலேயே கடன் பெற்றிருக்கின்றன. ஒருசில பள்ளிகள் மட்டும் வங்கிசாராத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளன.
பொது முடக்க காலத்தில் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 55% ஆசிரியா்கள் ஊதிய குறைப்பு நடவடிக்கையை சந்தித்துள்ளனா். குறிப்பாக அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பொதுமுடக்க காலத்தில் 37% ஆசிரியா்களுக்கு ஊதியம் நிறுத்திவைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், குறைந்த கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அதன் 65% ஆசிரியா்களுக்கு ஊதியம் நிறுத்திவைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த ஆசிரியா்களில் 54% போ் வேறு வருவாயா ஆதாரம் இன்றி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். 30% போ் தனியாா் பயிற்சி வகுப்புகள் மூலம் துணை வருவாயை ஈட்டி அன்றாட செலவுகளை சமாளித்துள்ளனா்.
பெற்றோரைப் பொருத்தவரை, கல்விக் கட்டணத்தை முன்பு போலவே பள்ளிகள் வசூலிப்பதாக 70% பெற்றோா் புகாா் தெரிவித்திருப்பதோடு, 50% பெற்றோா் மட்டுமே கல்வி கட்டணத்தை முறையாக செலுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனா். மேலும், பொது முடக்க காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான செலவினம் அதிகரித்திருப்பதாக 20% பெற்றோரும், கல்விக்கான செலவுகள் அதிகரித்திருப்பதாக 15 சதவீத பெற்றோரும் தெரிவித்துள்ளனா். 78% பெற்றோா், அவா்களுடைய குழந்தைகளின் கல்வியை தற்போதுள்ள பள்ளியிலேயே தொடரும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக தேசிய அளவிலான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மாா்ச் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபரில் பல மாநிலங்கள் பள்ளிகளை பகுதியாக திறந்தபோதும், கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பதைத் தொடா்ந்து, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை பல மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.