சென்னையில் முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின் மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர்கள் ராமசுப்ரமணியம், குகானந்தம் அளித்த பேட்டி:
ஊரடங்கு எந்த இடத்தில் கடுமையாக்க வேண்டும், எந்த ஏரியாவில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும், தளர்வுகளை எப்படிக் குறைத்து நோய்ப்பரவலை எப்படித் தடுக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை அளித்துள்ளோம். அரசு அதைப் பரிசீலித்து முடிவெடுக்கும்.
“முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் 5-வது முறையாக எங்கள் நிபுணர் குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை காலை 11 மணியிலிருந்து நண்பகல் 12-30 மணிவரை நடந்தது.
இப்போதுள்ள நிலைமைகள், எண்ணிக்கை குறித்து அலசி ஆராய்ந்தோம். அமெரிக்காவிலிருந்து டாக்டர் சௌமியா சாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அருண், ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோர் காணொலி மூலம் ஆலோசனை கூறினர். நோய்ப்பரவலைத் தடுக்கும் வழிகள் குறித்துப் பேசினோம்.
எந்தவித நோய்த்தொற்றும் ஒரு உச்சத்துக்கு சென்றுவிட்டு பின்னர் குறையும். தற்போது உச்சத்துக்குச் சென்றுள்ளது. அது குறையத் தொடங்குவது குறித்து விவரித்தோம். உச்சம் போகும்போது அதிக அளவில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் வலியுறுத்தினோம். சென்னையில் மட்டுமே 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் உள்ளன.
12,500 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 5000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 4,5,6 மண்டலங்களில் நிறைய நோய்கள் காணப்படுகின்றன. இது உயர்ந்து பின்னர் குறையும் வாய்ப்புள்ளது.
நாங்கள் போன முறை சொன்னதை அரசு கடைப்பிடித்துள்ளது. இந்தத் தொற்று நோய் உலக நாடுகளை அதிகமாகப் பாதித்துள்ளது. தமிழகத்தில் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையை அதிகரிக்கும்போது எண்ணிக்கை அதிகமாகத் தெரியும். 60 வயதுக்கு மேலிருப்பவர்கள் இறப்பு அதிகரிக்கும் என்பதால் அவர்களைக் குறிவைத்து சிகிச்சை அளிக்க ஆலோசனை கூறியுள்ளோம்.
மக்கள் மத்தியில் அவர்கள் பங்கேற்பு குறித்துப் பரிந்துரைத்துள்ளோம். சென்னையில் வார்டு வாரியாக நோயின் நிலை குறித்து ஆராய்ந்தோம். அதைச் சரி செய்வதற்கான நிலையை ஆராய்ந்துள்ளோம். அதைச் சரி செய்வது குறித்து ஆலோசனை கொடுத்துள்ளோம். தளர்வுகளை ரத்து செய்து சற்று கடுமையாக்கி மக்கள் மத்தியில் நோய்ப்பரவலைத் தடுப்பது குறித்த ஆலோசனையை இன்று நாங்கள் கொடுத்தோம். அதை அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுப்பார்கள்.
நோய்த்தொற்று அதிகரிக்கும்போது மரணவிகிதமும் அதிகரிக்கும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரையை அரசு கடைப்பிடிக்கிறது. ஆனாலும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு அரசு மட்டும் நடவடிக்கை எடுப்பதால் தொற்று குறையாது. மக்களும் தங்கள் நிலையை உணர வேண்டும். மாஸ்க் அணிவது, எச்சில் துப்பாமல் இருப்பது, கை கழுவுவது, இடைவெளியைக் கடைப்பிடிப்பது முக்கியம். இந்த விஷயங்கள் மாறாத வரையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது கடினம்.
தற்போது முதல் அலை முடிந்து குறைந்தால் கூட இன்னொரு அலை 2, 3 மாதம் கழித்து மீண்டும் வர வாய்ப்புள்ளது. சீனாவில் தற்போது இரண்டாவது அலை ஆரம்பமாகியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களை எப்படிப் பார்ப்பது என்பது குறித்த அக்கறை முக்கியம்.
தற்போது பொதுமக்களுக்கு ஒருவித பயம் உருவாகியுள்ளது. இதைக் கவனிக்க நாங்கள் பரிந்துரை செய்தது நடமாடும் மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கலாம் என்பதே. நாங்கள் சொல்வது சின்ன அளவில் காய்ச்சல் இருந்தால்கூட, சிறிய அளவில் அறிகுறி இருந்தால்கூட கோவிட் -19 இருக்க வாய்ப்புள்ளது.
சாதாரண அறிகுறி காய்ச்சல், கடும் உடம்பு வலி, தலைவலி இருந்தால்கூட அதை அலட்சியப்படுத்தாதீர்கள். அது கரோனாவாக இருக்கலாம். இரண்டு நாளில் சரியான காய்ச்சல் மீண்டும் வரலாம். இதுபோன்றவர்கள் வெளியில் வரவே கூடாது. தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுமாதிரி அறிகுறி உள்ள நிறையப் பேர் பயப்படுகிறார்கள். எங்கே நம்மைக் கண்டுபிடித்து மருத்துவமனையில் தனிமைப்படுத்திவிடுவார்கள் எனப் பயப்படுகிறார்கள். அப்படி அவசியமே இல்லை. அவர்கள் வீட்டிலேயே பல்ஸ் ஆக்சி மீட்டர் வைத்துக்கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கிறோம்.
அதேபோன்று பல்ஸ் ஆக்சி மீட்டர் நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்குத் தேவை இல்லை. உடல் நலம் இல்லாதவர்கள் மட்டுமே பல்ஸ் ஆக்சி மீட்டர் பயன்படுத்தவேண்டும். ஆக்ஸிஜன் லெவல் 94 சதவீதத்துக்குக் கீழே சென்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். நிறையப் பேர் என்ன செய்கிறார்கள் என்றால் வீட்டிலேயே பயந்து இருந்துகொண்டு அதிக அளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அதனால் பயனில்லை. இந்த விஷயத்தை மக்கள் புரிந்துகொண்டு தங்களைச் சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
கரோனா உச்சத்தில் இருப்பது பற்றி கவலைப்பட வேண்டாம். இதே கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடித்தால் மட்டும்போதும். ஊரடங்கு எந்த இடத்தில் கடுமையாக்க வேண்டும், எந்த ஏரியாவில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும், தளர்வுகளை எப்படிக் குறைத்து நோய்ப்பரவலை எப்படித் தடுக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளோம். அதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.
முக்கியமான இடங்களில் மொத்தமாக ஒன்று கூடினாலும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அதிக அளவில் பயப்படுகிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருப்பதில்லை என்பதைக் குறிப்பிடுகிறோம்”.
இவ்வாறு நிபுணர் குழு உறுப்பினர்கள் மருத்துவர் ராமசுப்ரமணியம், குகானந்தம் ஆகியோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.