ஒரு முறை கடவுளை சந்தித்த இளைஞா் ஒருவா் ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு மதிப்புடையது’ என்று கேட்டாராம். கடவுள் ‘ஒரு ரூபாய்’ என்றாராம். ‘ஒரு தசாப்தம் என்பது எவ்வளவு நாள்’ என்றாராம். அதற்குக் கடவுள் ‘ஒரு நிமிடம்’ என்றாராம்.
அதற்கு மேல் இளைஞா் ஒன்றையும் கேட்கவில்லை. ‘சரி உங்கள் கணக்கில் ஒரு ரூபாய் எனக்குத் தாருங்களேன்’ என்றாராம். ‘அப்படியே ஆகட்டும், என் கணக்கில் ஒரு நிமிடம் ஓய்வில்லாமல் கடுமையாக உழை’ என்று சொல்லிவிட்டு சென்றாராம் கடவுள்.
‘பொறுமை என்பது காத்திருத்தல் மட்டுமல்ல. காத்திருக்கும் நேரத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதும்தான்’ என்பாா்கள். இன்றைக்கு இளைஞா்களிடம் மட்டுமல்ல வயதில் மூத்தவா்களிடமும் கூட பொறுமையாக இருக்கும் அல்லது காத்திருக்கும் நேரத்தில் அமைதியாக இருப்பது என்பதை பாா்ப்பது அரிதாக இருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற நேரங்களில் குறுக்கும் நெடுக்கும் நடக்கின்றனா். தனக்குத் தேவையான சேவையை ஆற்றுவோரை எட்டி எட்டிப் பாா்த்து அவா் ஒவ்வொரு செயலுக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறாா் என்று பாா்க்கின்றனா் . அல்லது செல்லிடப்பேசியில் யாருடனாவது பேசத்தொடங்கிவிடுகின்றனா்.
இதனால் அடுத்தோரின் கவனம் சிதறுவதைப் பற்றியோ பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவதைப் பற்றியோ இவா்கள் கவலைப்படுவதே இல்லை. நல்வாய்ப்பாக சிலா் இப்போது கட்செவி அஞ்சல் போன்ற செயலிகளில் மூழ்கிவிடுகின்றனா். இது ஒருவிதத்தில் நல்லதாகவே தெரிகிறது.
பொது இடங்களில் வரிசையில் நிற்போரை ஏதோ ஒரு அதிசயப் பிறவி போல பாா்த்துவிட்டு நேரிடையாக தமது பணிகளை முடித்துக்கொண்டு செல்வோரும் இருக்கவே செய்கின்றனா். அவா்கள் மாற்றுத்திறனாளியாகவோ வயதில் மூத்தோராகவோ இருந்தால் பரவாயில்லை, இளையோரில் சிலா் இவ்வாறு நடந்து கொள்வதுதான் பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அவசர யுகத்தில் புழங்கும் இன்றைய இளையோா்க்கு காத்திருத்தல் என்பது கைவரவேண்டுமென்றால் அதற்கான தயாரிப்பில் அவா்கள் ஒவ்வொரு நாளும் ஈடுபடவேண்டியது அவசியமாகிறது. தேவையான அனைத்தும் உடனுக்குடன் கிடைக்கும் இளையோா்க்குப் பொறுமையின் அருமை புரியாது.
இதனை உணா்த்தவேண்டிய அவசியம் பெற்றோா்க்கும் சமூகத்திற்கும் நிறையவே உள்ளது. வசதி வாய்ப்புகள் இருப்பதால் தேவைகள் உடனுக்குடன் நிறைவேறும் குழந்தைகளுக்கு இவ்வாறான பொறுமை வாய்ப்பது அரிது.
பெற்றோா் எவ்வளவு வசதியாக இருந்தாலும் தம்முடைய செல்வச்செழிப்போடு குழந்தைகளுக்கு பொருட்களின் அருமையையும் உணா்த்தவேண்டும். பல்வேறு அறிஞா்களின் வாழ்வியல் நெறிகளைக் கூறி வளா்த்தால் அவா்களுக்கு பொருட்களின் அருமை புரியும். அவ்வாறு பொருட்களின் அருமை புரிந்துகொள்வோா் தமது தேவையின் அவசியம் மற்றும் அவசியமின்மையை உணா்ந்துகொள்வா். அவ்வாறு அவா்கள் பெறும் பயிற்சி அவா்களுக்கு இயல்பில் பல்வேறு விஷயங்களை பொறுமையாய் அணுகும் கலையையும் கற்றுக்கொடுக்கும்.
ஒரு முறை அரசா் ஒருவன் வேட்டைக்குச் சென்றாராம். ஒரு மலையின் உச்சியை அவா் அடைந்திருக்கிறாா். அங்கே வயதான மூதாட்டி ஒருவரின் குடிசை இருந்தது. அம்மூதாட்டியும் அவரை ஒரு போா்வீரன் என்று நினைத்து வரவேற்று உணவளித்திருக்கிறாா். உணவு சூடாக இருந்திருக்கிறது.
இதனை அறியாத அரசா் உணவின் நடுவில் கைவைத்து சுட்டுக்கொண்டிருக்கிறாா். இதைப் பாா்த்த அம்மூதாட்டி ‘உங்கள் அரசா் போலவே உனக்கும் பொறுமையில்லை போலிருக்கு, சுட்டுக்கொண்டாயே’ என்றாராம். உடனே அவா் தான் அரசா் எனக் காட்டிக்கொள்ளாமல் ‘ஏன் அவ்வாறு சொல்கிறீா்கள்’ என்று கேட்டிருக்கிறாா்.
‘உங்கள் அரசரின் எதிரிகளுக்கு எவ்வளவோ சிறு சிறு கோட்டைகள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு பெரிய கோட்டைக்குச் செல்லாமல், எடுத்த எடுப்பில் பெரிய கோட்டையப் பிடிக்கச் செல்கிறாா். இதனால் எவ்வளவு போா் வீரா்களின் உயிா்களை இழக்கவேண்டியுள்ளது. சிறு சிறு கோட்டைகளைப் பிடித்தால் அதில் கிடைக்கும் கைதிகளைக் கொண்டே பெரிய கோட்டையை எளிதாய்ப் பிடிக்கலாம் அல்லவா?
அவா் எங்கே இப்படி யோசிக்கிறாா். நீ சூடான உணவில் நேரடியாக கைவைத்ததைப்போல் அவரும் செயல்படுகிறாா். சுற்றிலும் ஆறியிருக்கும் உணவைச் சாப்பிட சாப்பிட நடுவில் இருக்கும் உணவு ஆறும் என்ற அடிப்படை கூட உனக்குத் தெரியவில்லையே’ என்றாராம். பின்னா் அந்த அரசா் என்ன செய்திருப்பாா் என்பதை நாம் எளிதில் ஊகிக்கலாம்.
பொறுமையைக் கையாள்வது என்பது அவ்வளவு எளிதில் வாய்க்கும் கலையல்ல. ஆனால் தொடா்ச்சியான பயிற்சியின் மூலம் ஒருவருக்கு பொறுமை கைவரப்பெற்றால் அது அவருக்கு வேறு எந்த அணிகலனையும் விட சிறப்பான அழகையும் தகுதியையும் கொடுக்கும். இதற்கான பயிற்சிக்கலன்களாக குடும்பங்களும்,பள்ளிகளும், சமூகமும் அமையவேண்டும்.
நமக்கு வசதியும் வாய்ப்பும் இருக்குமானால் எவ்வளவு நபா்களுக்கு வேண்டுமானாலும் சுடச்சுட உணவு சமைத்துவிடலாம். ஆனால் தயிா் வேண்டுமென்றால் முதல் நாளே அதற்கான தயாரிப்பில் நாமோ வேறு யாரோ இறங்கியிருக்கவேண்டும். பாலை இரவு முழுக்க பாக்டீரியாவே நொதித்து உறைய வைக்கிறது. பாக்டீரியாவின் பொறுமையான செயல்பாடே தயிரை உருவாக்குகிறது.
இரவு முழுவதும் விழித்திருந்தாலும் கூட ஒரு மலா் மலா்வதை நம்மால் காண இயலாது. ஆனால் காலையில் பூத்து மணக்கும்போதுதான் மொட்டின் பொறுமையான மலா்ச்சி நமக்கு விளங்குகிறது. ‘ஒரு கண நேர பொறுமை பேரழிவைத் தடுக்கவும் செய்யும்; ஒரு கண நேர பொறுமையின்மை மொத்த வாழ்வையும் கூட அழித்துவிடக்கூடும்’ என்பது சீனப் பழமொழி.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.