1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கரோனா நிவாரணம்: ஓர் அரசுப் பள்ளியே சேர்ந்து கொடுத்த உண்டியல் நிதி

கரோனா நிவாரணம்: ஓர் அரசுப் பள்ளியே சேர்ந்து கொடுத்த உண்டியல் நிதி


கரோனா 2வது அலையில் தமிழகமே தடுமாறி நிற்கும் நிலையில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்குப் பல்வேறு மாணவர்கள் தனி நபர்களாக நிதி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.

ஆனால் ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் பணத்தை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கே.ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த நிதியை அளித்துள்ளனர்.

இதுகுறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.

''2008-ம் 

ஆண்டில் ஒரு நாள் மாணவர்களுக்கு நீதிநெறிக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது பிறருக்கு உதவி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சொன்னேன். ஒரு மாணவன் எழுந்து, 'நானும் இதுபோல உதவலாமா?' என்று கேட்டான். 'உன்னால் ஆன உதவிகளைச் செய்யலாம்' என்று கூறினேன். அன்றே மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் இணைந்து பேசி உண்டியல் திட்டத்தை ஆரம்பித்தனர்.

மைதானத்தில் கிடந்த பழைய தகர டப்பாவைச் சுத்தப்படுத்தி உண்டியலாக்கினர். 'எங்களுக்குக் கிடைக்கும் காசை மிச்சப்படுத்தி, அதை உண்டியலில் போடுகிறோம்' என்று தெரிவித்தனர். 'அந்தக் காசை இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம் டீச்சர்' என்றும் கூறினர். நன்னெறிக் கதைகளின் தாக்கம் இந்த அளவுக்கு உள்ளதை நினைத்து மகிழ்ந்தேன்.

அடுத்த நாள் முதல், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் உண்டியல் வைக்கப்பட்டது. மாணவர்களிடம் '50 காசு, 1 ரூபாய் என எவ்வளவாக இருந்தாலும் உண்டியலில் காசு போடுபவர்களுக்கு கைத்தட்டுங்கள், வாழ்த்துச் சொல்லுங்கள். உங்கள் வயதுக்கு இது மிகப்பெரிய தொகை' என்றேன். நாளடைவில் தினமும் மாணவர்கள் காசு போட ஆரம்பித்தனர்


இதை ஒழுங்குபடுத்த ஆசைப்பட்டோம். அதன்படி, வழிபாட்டுக் கூட்டத்தின் இறுதியில் வழிநடத்தும் மாணவர், ''உதவி செய்வோம் வாருங்கள் தோழர்களே!'' என அழைப்பார். காசு கொண்டுவந்த மாணவர்கள், ''என் நாட்டுக்காகவும் என் மக்களுக்காகவும்'' என்று கூறி அவருடைய பெயரையும் ‌கூறி உண்டியலில் காசு போடுவர். மற்ற மாணவர்கள் வாழ்த்துகளைக் கூறி, கைகளைத் தட்டி மகிழ்வர்.

அதைவிடப் பெரிய ஆச்சரியம், காசு கொண்டு வராத மாணவர்களின் பெயரையும் சேர்த்துக் கூறி, கொண்டுவந்த மாணவன் உண்டியலில் பணம் போடுவான். ஒரு வகுப்பில் ஒரு மாணவன் மட்டுமே கொண்டு வந்தால், வகுப்பு மாணவர்கள் அனைவரின் பெயரையும் சேர்த்துக்கூறி, காசு போடுவான். உதாரணத்துக்கு, ''4ம் வகுப்பு மாணவர்கள்- நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும்'' என்று கூறி உண்டியலில் போடுவான்.

இதன்மூலம் உதவி மனப்பான்மையும் பணத்தின் முக்கியத்துவமும் அவர்களுக்குத் தெரிய வந்தது. அந்த ஆண்டின் முடிவில் எண்ணிப் பார்த்தபோது ரூ.2,000 இருந்தது. மாணவர்கள், 'எங்களைப் போல ஏழைக் குழந்தைகளுக்கு உதவலாம்' என்று கூறினர். 'அன்னை இல்லம்' என்ற ஆதரவற்றோர் மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்தோம்'' என்கிறார் ஆசிரியர் வாசுகி.

உண்டியல் திட்டம் குறித்து நாளடைவில் பெற்றோருக்கும் குறித்துத் தெரிய வந்திருக்கிறது. அவர்களே தங்கள் குழந்தையின் பிறந்த நாளன்று சற்றே கூடுதல் தொகையைக் கொடுத்து உண்டியலில் போடச் சொல்ல ஆரம்பித்தனர். பள்ளிக்கு வரும் விருந்தினர்கள், மேசையில் இருக்கும் உண்டியலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு அவர்கள் விருப்பப்பட்ட தொகையையும் அதில் போட்டனர்.

இவ்வாறாகத் தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தப் பள்ளி மாணவர்கள் உண்டியல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். அந்தந்த ஆண்டின் இறுதியில், அப்போதைய தேவைக்கேற்ப உதவும் அவர்கள், கஜா புயல் நிவாரணத்துக்கு உதவியுள்ளனர். ஆதரவற்ற சிறுமியின் மருத்துவ சிகிச்சை, கேரள வெள்ளத்தின்போது முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணம் என இவர்களின் சேவை நீண்டுள்ளது.

தேவையற்ற சங்கடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க ஒவ்வோர் ஆண்டும் உண்டியலில் சேர்ந்த மொத்தத் தொகை, அதைச் செலவிட்ட விதம் ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து, ஒட்டி, ஆவணப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மேலும் பேசும் ஆசிரியர் வாசுகி, ''இப்போது கரோனா 2வது அலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1000 தொகையை ஆன்லைனில் அனுப்பியுள்ளோம். கடந்த ஆண்டு மாணவர்கள் உண்டியலில் சேமித்த பணம் இது. முந்தைய காலங்களில் தேவைப்படுவோருக்குப் பணமாக அனுப்பும் சூழலில், மாணவர்களையே நேரடியாக வங்கிக்கு அழைத்துச் செல்வோம். கரோனா காலம் என்பதால் ஆன்லைனிலேயே அனுப்பி விட்டோம்.

இதுவரை உண்டியல் மூலம் சுமார் 30 ஆயிரம் ரூபாயை எங்கள் ‌மாணவர்களே சேமித்து, உதவிகளைச் செய்திருப்பர். அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் வெறும் 41 பேர் மட்டுமே இதைச் செய்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

கிராமப்புறத்தில் இருந்து, ஏழ்மை நிலையில் வளர்ந்தாலும் என்னால் முடிந்ததை என் நாட்டுக்காகச் செய்வேன் என்ற எண்ணத்துடன் எங்கள் மாணவர்கள் வளர்வது ஓர் ஆசிரியராய் எனக்குப் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் மாணவர்கள் பிற பள்ளி மாணவர்களுக்கும் முன்னுதாரணமாய் இருக்கட்டும்'' என்று நெகிழ்கிறார் ஆசிரியர் வாசுகி.

பிஞ்சுக் கரங்களின் இந்தக் கொடை நாளை மீதான நம்பிக்கை விதை...

சக உயிர்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட இந்த இளந்தளிர்களுக்குத் தலை வணங்குவோம்!

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags