1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கரோனா இரண்டாம் அலை: சிறிய மாற்றத்தால் வெல்லலாம்!

 கரோனா இரண்டாம் அலை: சிறிய மாற்றத்தால் வெல்லலாம்!



கரோனா தீநுண்மியை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றால் அது அச்சமும், கவலையும் தான். கரோனா பெருந்தொற்று நமது உடல், தொழில், நிதி, உறவுகள் ரீதியாகப் பாதிப்பை  ஏற்படுத்துகிறது.





நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களுக்கு நமது உடல் அச்சத்தையும், கவலையையும் இயற்கையாக வெளிப்படுத்தும். ஆனால், அதையும் மீறி இந்த கொடிய தீநுண்மியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், உயிர் வாழவும் எதிர்ப்புத் தன்மைக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற நிச்சயமற்ற தகவல்களால் மன அழுத்தம், கவலை உணர்வு அதிகரிப்பது இயற்கை. மன அழுத்தமும், கவலையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தும், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்தும், ரத்த அழுத்தத்தை அதிகரித்தும், சுவாசத்தைக் குறைத்தும் பல பாதிப்புகளை அளிக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட நாள்களாக அச்சத்துடன் வாழ்ந்தால் நோயை எதிர்ப்பதில் செயலிழந்துவிடுவோம்.  

அச்சத்தை சரியான பாதையில் கொண்டு சென்று பயன்படுத்தவில்லை என்றால் அது இழப்பை ஏற்படுத்தும் உணர்ச்சியாகவே இருக்கும்.

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களில் நோய் அறிகுறிகள் பெருமளவில் இல்லாத ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு குணமடைந்துள்ளனர். கடுமையான நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சாதாரணமாக குணமடைந்த ஏராளமானோர் தங்களின் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைக் கடைப்பிடித்தவர்களாவர். அவர்கள் செய்ததை நீங்களும் பின்பற்றினால் சிறந்த பலன்களைப் பெறலாம்.  அவர்கள் அப்படி என்ன செய்தார்கள்?

 

1. வீட்டிலிருப்பது

கரோனா பாதிப்பு தொடரை உடைப்பதோ அல்லது கூட்டுவதோ நம்மிடமே உள்ளது. ஆகையால், தற்போதைய உடனடித் தேவை வீட்டிலேயே இருப்பதுதான் முக்கியமானது. 


2. நிம்மதியான உறக்கம்

கரோனா தீநுண்மி தொற்றை எதிர்கொள்ள தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எத்தனை விதமான பானங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டாலும்,  உடலுக்கு தேவை நிம்மதியான உறக்கம்.

உறக்கமும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவும்தான் கரோனா நோயாளிகளை குணமடைவதில் இருந்து தாமதப்படுத்துகின்றன என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால், கரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரவு நேர உறக்கத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

3. வைட்டமின்கள் தேவை

நோய் எதிர்ப்பு சக்திக்காக இந்த வகை மருந்துகள் உலகம் முழுவதும் வழங்கப்படுகின்றன. இவை பாதிப்பில் இருந்து மீளவும், மேம்படவும், நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் இருந்து தடுக்கவும் உதவுகின்றன. இவை உணவுகளில் இருந்தும் கிடைக்கும். எனவே அவற்றை கூடுதலாக சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

வைட்டமின் சி - எலுமிச்சம் பழம், ஆரஞ்சு பழம், அன்னாசிப்பழம், நெல்லிக்காய், கொய்யா, குடைமிளகாய், பப்பாளி பழங்களில் கிடைக்கும்.
துத்தநாகம் (ஜிங்க்) - பூசணிக்காய் விதைகள், டபுள் பீன்ஸ், சுண்டல், சூரியகாந்தி விதைகள், இறால், சிப்பிகள், நண்டு, முந்திரி, பாதாம், முட்டை, சிக்கன், மட்டன் ஆகியவற்றிலும் கிடைக்கும்.

செலினியம் -  காளான், முட்டை, சீஸ்களில் கிடைக்கும்.
வைட்டமின் டி3 - சூரிய ஒளி, காளான், முட்டை


4. மஞ்சள் பூசணிக்காய் சூப்

வெங்காயம், சிறு கேரட், சிவப்பு பயிறு, பட்டாணி, மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்), இஞ்சி -பூண்டு, உப்பு, மிளகு, மஞ்சள், புதினா, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து சுமார் 30 நிமிடம் கொதிக்க வைத்து சூடாக சாப்பிடவும். இத்துடன் கருஞ்சீரகத்தை சேர்த்து கொள்வது நல்லது.


5. புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுதல்:

புரதச் சத்து உணவுகள் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களை கட்டமைக்கக் கூடியதாகும்.

சைவ உணவுகள் - பச்சைப் பட்டாணி, பயறு - பருப்பு வகைகள், பீன்ஸ், சுண்டல்.அசைவ உணவுகள் - முட்டை, மீன், சிக்கன், மட்டன்


6. மூச்சுப் பயிற்சி செய்தல்


உடல் சோர்வு இல்லாமல் இருந்தால் வீட்டில் நடைப்பயிற்சி செய்துவிட்டு, யோகா, மூச்சுப் பயிற்சி அல்லது பிராணாயாமம் ஆகியவற்றை செய்ய வேண்டும். இதன் மூலம் உடலுக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும். பலூன்களை வாயால் ஊதி வெடிக்கச் செய்வதாலும் நுரையீரல் வலுவடையும்.

7. மூளைக்கு வேலை கொடுங்கள்

மனதை உற்சாகப்படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவுவது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். பணம், நிதி உதவிகள் அளிப்பது மட்டுமல்லாமல் பிற வழிகளிலும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். உங்கள் சொந்தங்களின் நலனுக்காக பிரார்த்தித்து அவர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம்.


8. இஞ்சி டீ 
 

தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை, கற்பூரவள்ளி இலை, மிளகு, ஏலக்காய், இடித்த பூண்டு, பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இந்த வகை டீ, நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவும்.


9. உடல் வலியைப் போக்க 

கரோனா தொற்று பாதிப்பால் உடல் வலி வழக்கமாக இருக்கும். மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளைத் தவிர உணவு முறையில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள்.

-மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், மிளகு,  தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை தினசரி உணவு சமைக்கும்போது சேர்த்து கொள்ள வேண்டும்.

-எலுமிச்சை அல்லது சாத்துக்குடி பழரசத்தை எடுத்து கொள்ளலாம். (நீரிழிவு பாதிப்பு இல்லாதவர்களுக்கு)

-ஆலிவ் ஆயிலை பச்சை காய்கறிகளுடன் (சாலட்) சேர்த்து சாப்பிடலாம்.

- உப்பில் ஊற வைக்காத பாதாம், அக்ரூட், முந்திரி

-ஆளி விதைகள், மீன், சியா விதைகள் (ஓமேகா 3 கொண்டவை)

-பச்சை அல்லது சிவப்பு மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

-சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், ரீபைண்ட் ஆயில், சிகரெட், மதுபானங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

-ஆழ்ந்த உறக்கம். 

-தேங்காய், எள், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சமமாக சேர்த்து சற்று சூடாக்கி மூட்டு மற்றும் உடல் இணைப்பு பகுதிகளில் தூங்குவதற்கு முன்பு தேய்க்கவும்.


10. நீராவி பிடித்தல்

இப்படி செய்வதால் மார்பு, நாசி பகுதிகள் விரிவடைவதுடன், உடலில் இருக்கும் சளியும் வெளியேறும். ஓமம், மஞ்சள் தூள், 2-3 துளி நீலகிரி தைலத்தைச் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்களுக்கு நீராவி பிடிக்க வேண்டும். அதிகமாக சளி இருந்தால் பால் பொருள்களை தவிர்க்கலாம்.


11. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பும், பின்பும்

செலுத்துவதற்கு முன்: இரவில் நன்றாக உறங்கிவிட்டு, நன்றாக தண்ணீர் பருக வேண்டும். டீ, காபி, மதுபானங்களை நான்கு நாள்களுக்கு முன்பு நிறுத்திவிட வேண்டும். துத்தநாகம் நிரம்பிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைத்து எடுத்து கொள்ள வேண்டும். 

செலுத்திக் கொண்ட பின்பு: உடலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டால் தடுப்பூசி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தி உற்பத்தியாக ஆரம்பித்துவிட்டது என்றும் கருதலாம். சற்று காய்ச்சல், குளிர், சோர்வு, தலைவலி, மயக்கம், மூட்டு அல்லது தசை வலி ஆகியவை ஒன்று அல்லது மூன்று நாள்களுக்கு இருக்கும்.

* முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை சாறு, தர்பூசணி, ஆரஞ்ச், பப்பாளி ஆகிய பழங்களை எடுத்து கொள்ளலாம்.

* காய்ச்சல் இருந்தால் உடலை சூடாக வைத்து கொள்ள இஞ்சி டீயை பருகலாம்.

* சுவாசப் பயிற்சியும், நிம்மதியான உறக்கமும் இயற்கை மருந்துகளாக உதவும். 

* பசிக்கு ஏற்ப உண்ண வேண்டும். வீட்டில் உருவாக்கிய உணவுகளையே சிறிது சிறிதாக இடைவெளிவிட்டு உண்ணலாம். 

* தேங்காய், எள், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சமமாக சேர்த்து சற்று சூடாக்கி உடல் வலிக்கு பயன்படுத்தலாம்.

* தலைவலிக்கு சூடான நீரில் மிளகை சேர்த்து குடிக்கலாம்.

* வெறும் வயிற்றில் நோய் கஞ்சியை சாப்பிடலாம். 10 நாள்கள் வரை சிகரெட், மதுபானங்களை உட்கொள்ளக் கூடாது.


12. மன அமைதியுடன் இருக்க வேண்டும்

இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிமிக்க செய்திகளைக் காணுவதைத் தவிர்ப்பது நல்லது. மனம் அமைதியுடன் இருக்க வேண்டும். 

கரோனாவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அதேவேளையில் லட்சக்கணக்கானோர் குணமாகிறார்கள். இதில் நல்லதும், கெட்டதும் உள்ளது. இதில் நாம் எதை எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்பது முக்கியம். கவலையும், அச்சமும், மன உலைச்சலும் நமக்கு உதவப் போவதில்லை. ஆகையால், நமது அன்றாட வாழ்க்கை முறையில் சிறிதாக மாற்றினால் வெற்றி பெறலாம்.

அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனிதர்களுக்கு உள்ளது. முதலில் நாம் அதற்கு உள்பட வேண்டும். ஆகையால், வாழ்க்கை முறையில் இதுபோன்ற சற்று மாறுதல்களை செய்து உங்கள் உடல் வலுப்பெற அனுமதியுங்கள்.  

அமைதி காப்போம்.... 

அனைவரையும் பாதுகாப்போம்...

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags