கரோனா இரண்டாம் அலை தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) மருத்துவா் வினோத் கே.பால் கூறியுள்ளார்.
கரோனா தொற்று மெல்ல குறைந்து வருவதுபோல தெரிந்தாலும், உண்மை அவ்வாறு இல்லை. ஆனால், உண்மையை உணராத மக்களோ, கரோனா மீண்டும் சீனத்துக்கே திரும்பிவிட்டதாக நினைத்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நீதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வினோத் புது தில்லியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது மிகவும் முக்கியமான தகவலாக உள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்றால் மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்தான், கரோனா மூன்றாம் அலை வருவது குறித்த கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்த நோய் எதிா்ப்புத் திறனை நாம் இன்னும் பெறவில்லை. தடுப்பூசி திட்டத்தால் மக்களுக்கு நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
எனவே, அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
கரோனா பாதிப்பு நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வந்த நிலையில், அது தற்போது குறையும் வேகம் குறைந்துள்ளது நமக்கான எச்சரிக்கையாகும். கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் முழுமையாகப் பின்பற்றினால், மூன்றாம் அலை தாக்குதலை தடுக்க முடியும். அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதே நிலைப்பாட்டைத்தான் உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது. அதன் செய்திக் குறிப்பில், உலகளவில் கரோனா பாதிப்பு 10 சதவீதமும், பலி எண்ணிக்கை 3 சதவீதமும் கடந்த வாரம் உயர்ந்துள்ளது. சுமார் 111 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கரோனா தொற்று பரவி வருவதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் வி.கே. பால் கூறுகையில், உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கரோனா பேரிடருக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது என்றார்.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியும், தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரம், ஒடிசா, கர்நாடகம் ஆகிய ஆறு மாநில முதல்வர்களையும் நேற்று காணொலி வாயிலாக சந்தித்து, கரோனா மூன்றாம் அலையைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
எத்தனைதான் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாண்டாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஏற்கனவே கடந்த வாரத்தில் ஸ்பெயினில் கரோனா பாதிப்பு 64 சதவீதமும், நெதர்லாந்தில் 300 சதவீதமும் உயர்ந்துள்ளது.
தாய்லாந்தில் இதுவரை நிலைமை கட்டுக்குள்தான் இருந்தது. ஆனால் தற்போது அது அப்படியே நீடிக்கவில்லை. ஆப்ரிக்காவிலும் 50 சதவீதம் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட நாடுகளில் மக்கள் தொகை குறைவு என்ற நிலையில், இந்தியாவில் மூன்றாவது அலை உருவானால் அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், முன்களப் பணியாளர்களில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா தீவிரமடைந்திருந்த போது ஏப்ரல் 29ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நாளில் 9 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த நிலை மாறி குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 5.63 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியிருப்பது, மூன்றாம் அலைக்கான ஆரம்பமாகவே நாம் பார்க்க வேண்டும்.
எனவே, அடுத்த 100 நாள்கள் முக்கியத்துவம் பெற்றது என்று கூறப்படுவது ஏன்?
கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்த பிறகு மக்களிடையே முகக்கவசத்தின் பயன்பாடும் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நிச்சயம் முகக்கவசத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
இயல்புநிலைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவசியமற்ற பயணங்களை மக்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதிகக் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மே 20ஆம் தேதி பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதை விட, தற்போது மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துச் சேவை அதிகரித்துள்ளது.
நாம் பழைய நிலைக்குத் திரும்பும் போது நிச்சயம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் எச்சரிக்கை. எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டிய தருணம் இது.
கண் எதிரிலேயே, உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருவது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனால், நமக்கு கரோனா வராது என்று நினைத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது.
தமிழகத்தை பொறுத்தவரை இது விழாக்கள் மற்றும் பண்டிகைகளின் தொடக்கமாகும். ஆடி மாதம் தொடங்கியிருக்கிறது. கோயில்களில் திருவிழாக்களும், வீடுகளில் பூஜைகளும் நடைபெறும் மாதம். இது நிச்சயம் கரோனா பரவலுக்கு ஒரு காரணமாகிவிடக் கூடாது. எனவே, மக்களே முன்வந்து, கரோனா கட்டுப்பாடுகளை கைக்கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம் ஒரு நாளைக்கு பல முறை கிருமிநாசினி கொண்டு கைரேகையே போகும் அளவுக்கு கைகளைக் கழுவினோம். இப்போது நினைத்துப் பாருங்கள். கடைசியாக கிருமிநாசினியைப் பயன்படுத்தியது எப்போது என்று.
பேருந்து, ரயில்களில் பயணிக்கும் போதும் கூட்டம் அதிகம் இருக்கும் கடைகளுக்குச் செல்லும் போதும் முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடியுங்கள்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, தி.நகரில் உள்ள மிகப்பெரிய துணிக் கடையில் ஏராளமான மக்கள் துணிகளை வாங்க கடை முழுவதும் குழுமியிருந்த விடியோ நிச்சயம் உங்கள் கண்களில்பட்டிருக்கும். ஆடி மாதம் கோயிலுக்குச் செல்வோரும், அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருப்பவர்களும் கவனமுடன் செயல்பட வேண்டும். முடிந்த அளவுக்கு அருகிலிருக்கும் சிறிய கடைகளில் உங்களது வாங்கும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
இது விழாக்களின் காலமோ, கொண்டாட்டங்களுக்கான காலமோ நிச்சயம் இல்லை. எனவே சுற்றுலா, உறவினர்களின் வீடுகளுக்கு விருந்து என்று கிளம்பிவிட வேண்டாம். அவ்வாறு செல்வதால், அடுத்த பொதுமுடக்கத்துக்கு நாமே அழைப்பு விடுப்பது போலாகிவிடும்.
கரோனா தீவிரமடைந்திருந்த போது எவ்வாறு விழிப்புணர்வுடன் நடந்து கொண்டோமோ அதையே பின்பற்றுங்கள்.
முக்கியமாக ஒரு விஷயம்.. கிராமங்களில் கரோனா பரவாது என்ற சித்தாந்தத்தை நிச்சயம் மறந்துவிடுங்கள். கரோனா இரண்டாவது அலையின் போது நகரப் பகுதிகளை விட, கிராமங்களில்தான் எண்ணற்றவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர், பலியாகினர்.
எனவே, கரோனாவுக்கு எந்த கொள்கையோ, எந்த நம்பிக்கையோ சாதிமத பேதமோ, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடோ, நல்லவன் கெட்டவன் என்ற புரிதலோ, இளைஞர், முதியவர் என்ற வேறுபாடோ இல்லை. அதற்கு ஒட்டி வாழத் தேவையானது ஒரு உயிர். அவ்வளவுதான். அதற்கிருக்கிருக்கும் வாழ வேண்டும் என்ற வீரியம் நமக்கிருந்தால் நிச்சயம் பிழைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.