1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கதராடை அணிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கதராடை அணிய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்


நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும். அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை (Branding) உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த முதல்வர் அறிவுரை வழங்கினார்.




இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:


“முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளையும் தமிழக முதல்வர் வழங்கினார்.

துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது, கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை (Branding) உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த முதல்வர் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்

பாரம்பரியம் மாறாமல் கதர் பட்டு உற்பத்தியில் புதுமையான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த ஏதுவாகப் பட்டு நெசவாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், மேலுறைப் பெட்டிகளில் வடிவமைப்பு மற்றும் பல வண்ணக் கலவைகளில் புதுமைகளைப் புகுத்தி சோப்பு, தேன் மற்றும் இதர பொருட்களை மக்களைக் கவரும் வகையில் மாற்றம் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

கதர் கிராமப் பொருட்களைத் தீவிர சந்தைப்படுத்தும் விதமாகக் கல்லூரிகள் மற்றும் வர்த்தக மையங்களில் கண்காட்சிகள் (Sales Expo) அமைத்தல், சிறப்பு அங்காடிகள் (Super Market / Departmental Stores) மற்றும் பெரிய வணிக வளாகங்களில் (Shopping Mall) தனியே இருப்பு அடுக்கு அமைத்தல், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்துதல் மற்றும் தனிச் செயலியை (App) உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு பனைப் பொருள் வளர்ச்சி வாரியம்

கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பனை வெல்ல உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு, சந்தையில் தரமான பனை வெல்லம் கிடைக்கப்பெறும் வகையில் மாவட்ட பனைவெல்ல உற்பத்தி மற்றும் விற்பனைக் கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டு மையங்கள் நிறுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பட்டுவளர்ச்சித் துறை

தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பு தற்போது இலாபகரமான தொழிலாக உள்ளதால் பட்டுப்புழு உற்பத்திக்கு ஏதுவாக மல்பெரி பயிரிடும் பரப்பினை ஒரு இலட்சம் ஏக்கராக உயர்த்தப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கச்சா பட்டிற்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருவதால் கச்சா பட்டு உற்பத்தியினைச் சுமார் 3100 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், படித்த இளைஞர்கள் இதில் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

பட்டு விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கப்பெற ஏதுவாக அரசு பட்டுக்கூடு அங்காடிகளில் மின்னணு ஏல முறையினை அறிமுகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாட்டில் வெண்பட்டு உற்பத்தியினை விரிவுபடுத்த ரூ.1000 கோடி மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்திட வரைவுத் திட்ட அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்து அத்திட்டத்தினைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையங்கள் மூலம் நடைபெறும் விற்பனையை ரூ.35 கோடியிலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.100 கோடியாக உயர்த்துவதற்கு விற்பனை நிலையங்களைப் புதுப்பித்து, கைவினைஞர்களிடமிருந்து தரமான படைப்புகளைப் பெற்று காட்சிப்படுத்தி, நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கும், இந்நிறுவனம் கொண்டுள்ள இணைய வழிச் சேவையை மேலும் விரிவுபடுத்தி உலகத்தின் எந்த இடத்திலுமுள்ள வாடிக்கையாளரும் கொள்முதல் செய்யும் வண்ணம் செம்மைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், கைவினைஞர்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வண்ணம் விற்பனை நிலையங்களிலும், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களின் முக்கிய நகரங்களில் கண்காட்சி விற்பனை நடத்துவது குறித்தும், தமிழக மற்றும் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் கைவினைஞர்களுக்குக் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மகளிர் கைவினைஞர்களுக்குப் பயிற்சிகள் நடத்துவது, சிறந்த கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகக் கைவினைப் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பெறப்பட்ட மாமல்லபுரம் கற்சிற்பங்கள், சுவாமிமலைப் பஞ்சலோக சிலைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், நாச்சியார் கோவில் பித்தளைக் குத்து விளக்குகள் மற்றும் பத்தமடை பாய் போன்ற கைவினைப் பொருட்களின் சிறப்புகளை வாடிக்கையாளரிடம் எடுத்துச் சென்று, அந்தக் கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்புக் கண்காட்சிகள் நடத்திட முதல்வர் அறிவுறுத்தினார்.

மாமல்லபுரத்தில், கைவினைஞர்கள் சுற்றுலாக் கிராமம் அமைத்திட கைவினைஞர்களின் குடியிருப்புகளை அழகுபடுத்துதல், தொழிற்கூடங்களை மேம்படுத்துதல் மற்றும் நிரந்தர விளம்பரப் பதாகைகள் அமைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்து அவற்றைக் கைவினைஞர்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கவும், மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள கண்காட்சித் திடல்களை, கைவினைஞர்களுக்குப் பயன்படும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் புனரமைத்திடவும் முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிறுவனம் 2023 ஆம் ஆண்டு 50 ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாகப் பொன்விழாவினைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த கைவினைஞர்களைக் கௌரவப்படுத்திடவும், கைவினைஞர்களுக்கு நலம் சார்ந்த சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திடவும் வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, முதன்மைச் செயலாளர்/ கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் பீலா ராஜேஷ்.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் வெ.ஷோபனா, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சங்கர் பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags