சில தனியார் பள்ளிகள்
ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், சில பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பணம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தேர்ச்சியை நிறுத்தி வைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுப்பதாகவும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இவர்கள் தேர்ச்சி அறிவிப்பை எப்படி நிறுத்தி வைக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.நெய்வேலியில் உள்ள பிரபல தனியார் பள்ளியிலிருந்து, ஒப்பந்தத் தொழிலாளியான ஒரு பெற்றோரை தொடர்புகொண்டு பள்ளி அலுவலக பணியாளர், 3-ம் பருவக் கட்டணம் செலுத்தவில்லை எனவும், அதையும், நடப்பாண்டு கல்விக்கான முதல் பருவக் கட்டணம் மற்றும் பாடப்புத்தகம், சீருடை, காலணி உள்ளிட்டவற்றுக்கான தொகையாக ரூ.30 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் எனவும், இதை செலுத்தத் தவறினால், மாணவரின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் இருந்தும் இதுபோன்ற அழைப்புகள் சென்ற வண்ணம் உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது, "கரோனா காலத்தில் இவ்வாறு செயல்படுவது தவறு. மேலும் மாணவரின் தேர்ச்சி அறிவிப்பை நிறுத்துவேன் என அறிப்பது போன்ற மிரட்டல் தொனியில் செயல்பட்டால், அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அவ்வாறு கேட்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் எழுத்து மூலமாக புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் கடலூரில் ஏற்கெனவே இதுபோன்று தகவலின் பேரில் கிடைத்த புகார்கள் தொடர்பாக இரு பள்ளி நிர்வாகிகளை அழைத்து விசாரித்தபோது, அவர்கள் அதுபோன்று வசூலிக்கவில்லை என்று கூறியதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, "தற்போதைய சூழலில் அவ்வாறு கேட்பது தவறு. எல்லா பள்ளி நிர்வாகங்களும் அது போன்று கேட்பதில்லை. மத்திய, மாநில அரசுகளில் அதிகாரமிக்கவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று காட்டிக்கொள்ளும் கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடும். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உட்பட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 20 ஆயிரம் மெட்ரிகுலேசன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள், ஒரு லட்சம் வாகன ஓட்டிகள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியாளர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலானால் மட்டுமே ஊதியம் வழங்க முடியும் என, பள்ளி நிர்வாகங்கள் கூறுவதால், கடந்த இரு மாதங்களாக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கருணாநிதி கூறுகையில், "பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் 80 சதவிகிதம் பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக எங்கள் சங்க நிர்வாகிகள் பள்ளிகளை அணுகிய போது, முறையான பதிலளிக்காமல் அலைக் கழிக்கின்றனர். இதுதொடர்பாக கல்வித்துறைக்கு புகார் அளிக்கவுள்ளோம்" என்றார்.
இதையடுத்து தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்பி பள்ளிகளின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, "சில பள்ளிகளில் வழங்காமல் இருந்திருக்கலாம். அனைத்து தனியார் பள்ளிகளிலும் நிதி நெருக்கடி உள்ளது. கட்டணம் வசூலிக்கப்படவில்லை. சேர்க்கை தொடங்கப்படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி ரூ.500 கோடிக்கு மேல் உள்ளது. அதை வழங்கினால் ஊதியம் வழங்குவதில் பிரச்சினை எழாது. அரசு சிறு, குறு தொழிலுக்கு கடன் வழங்குவது போல், கல்வி நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை கடன் அளிக்கலாமே" என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.