25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.20-ல் மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம்: ஆசிரியர் மன்றம் அறிவிப்பு
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் பிப்.20-ம் தேதி திருச்சியில் மாநில அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கூறியது:
''ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள பண பலன்களைத் திரும்ப வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தமிழக அரசின் உச்ச வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஆசிரியர் தகுதிச் சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 80 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும். ஆசிரியர்களின் பண பலன்கள் சார்ந்த தணிக்கைத் தடைகளை விதிகளின்படி விலக்கிக் கொள்ளத்தக்க வகையில் மண்டலத் தணிக்கை ஆய்வுக் கூட்டங்கள் முறையாக நடைபெற வேண்டும்.
'கற்போம் எழுதுவோம்' திட்டப் பணிகளில் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அலுவலக அடிப்படைப் பணியாளர், எழுத்தர், கணினி இயக்குபவர், இரவு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்டோர், தொடர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். பெண் ஆசிரியர்களைத் தொலைதூர, மலைப் பகுதிகளில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத் தலைவர்களோடு தமிழக முதல்வர் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிப்.20-ம் தேதி திருச்சி கண்டோன்மென்ட், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ள வேண்டும்''.
இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.