குழந்தைப் பருவத்தில் சாப்பிடும் உணவுகள் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இக்கால குழந்தைகள் பெரும்பாலும் சத்தான உணவுகளை விரும்புவதில்லை. உணவு பார்ப்பதற்கு நிறமாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அப்படி இருந்தால் மட்டுமே உண்ணுகின்றனர். பெற்றோர்களும் இதற்கு பழக்கப்படுத்துகின்றனர். அந்தவகையில் துரித உணவுகளையே குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். ருசிக்காக இவற்றை சாப்பிடும் குழந்தைகளின் உடல்நலத்தில் நாளடைவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதை பெற்றோர்கள் மறந்துவிடுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான ஆய்வொன்றில், குழந்தைப் பருவத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நம்முடைய வாழ்க்கையின் இறுதி வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, சிறு வயதில் ஒரு குழந்தை அதிகப்படியான கொழுப்பு மற்றும் சர்க்கரையை சாப்பிடுவது உடலில் நுண்ணுயிரிகளின் அழிவை ஏற்படுத்தும் என்றும் அதன்பின்னர் பிற்காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறது இந்த ஆய்வு. எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.
இன்று கொழுப்பு அல்லது சர்க்கரை நிறைந்த ஒரு உணவை சாப்பிடும்பட்சத்தில் அது குறைந்தது ஆறு மாதத்திற்கு உடலில் எதிர்மறை விளைவுகளைக் கொண்டிருக்கும். இதனால் சிறுவயதில் சாப்பிடும் உணவுகளில் உள்ள சில நுண்ணுயிரிகள் வாழ்நாள் முழுவதும் பயணிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதில், நுண்ணுயிர் என்பது அனைத்து பாக்டீரியாக்களையும், பூஞ்சை, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை குடலில் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை உடல் இயக்கத்திற்கு உதவியாக இருக்கின்றன. நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. உணவு செரித்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முக்கிய வைட்டமின்களை ஒருங்கிணைக்க உதவுகின்றன.
ஆரோக்கியமான உடலில் நோய்க்கிருமிகள் மற்றும் நன்மையளிக்கும் நுண்ணுயிரிகள் சம அளவில் இருக்கும், இதனால் உடலுக்கு பிரச்னை ஏற்படாது. ஆனால், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உடல் சமநிலை பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படுகிறது.
எனவே, எதிர்கால நலன் கருதி, சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை அளிக்க முயற்சி செய்யுங்கள். துரித, பொருந்தா உணவுகளை கொடுத்து அவரின் ருசிக்கு குழந்தைகளை பழக்கப்படுத்தாதீர்கள். மாறாக, சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்தவாறு கொடுக்க முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.