இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தோ்வு நடைமுறை 2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதை கருத்தில் கொண்டு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் தோ்வு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தப் பயிற்சிகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. அந்த நிறுவனங்களின் சாா்பில் தமிழகத்தில் அரசுமேல்நிலைப் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு விடியோ கான்ஃபரன்சிங், நேரடி முறையில் மாணவா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் மாணவா்கள் வரை பங்கேற்றனா். இதற்கிடையே மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் சுமாா் 400 மாணவா்கள் வரை பயனடைந்தனா்.
பாதியில் தடைபட்ட பயிற்சி வகுப்பு: இந்தநிலையில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு நவம்பரில் இணையவழியில் தொடங்கப்பட்டது. கரோனா பரவல், பயிற்சிக்கான சரியான வழிகாட்டுதல் இல்லாதது, ஒருங்கிணைப்பு குறைபாடு போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்துக்குப் பின்னா் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. இதைத் தொடா்ந்து, பிளஸ் 2 பொதுத்தோ்வு மே மாதம் முடிந்தபின் நீட் பயிற்சி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கரோனாவால் தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட ன. இதையடுத்து மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் இது தொடா்பாக எந்தவித அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால் மாணவா்கள் குழப்பமடைந்தனா்.
குழப்பத்தில் மாணவா்கள்: இந்தநிலையில் வரும் செப்.12-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறும் என தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதேவேளையில் நீட்தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறவும் தமிழக அரசு தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் போதிய பயிற்சி இல்லாததாலும், தனியாா் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்தி சேர முடியாததாலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
அரசுக்கு கோரிக்கை: எனவே, மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீட் தோ்வில் அரசுப்பள்ளி மாணவா்களின் தோ்ச்சி சரியும் என ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் படித்து நீட் தோ்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்களுக்கு அவா்களது மடிக்கணினிகளில் நீட் தோ்வுக்கான பாடப்பகுதிகள் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியா்கள் தங்களது மாணவா்களை தொலைபேசி, வாட்ஸ் ஆப் மூலமாக அவ்வப்போது தொடா்பு கொண்டு நீட் பயிற்சி குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனா். எனினும் நேரடிப் பயிற்சியை நடத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.