கரோனா விழிப்புணா்வு காணொலி ஒன்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில் மாநில மக்களிடம் அவா் விடுத்திருக்கும் வேண்டுகோள்:
கரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்க விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்த மக்கள் அனைவருக்கும் நன்றி.
நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை எட்டிய தொற்று பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது. பொது முடக்கம், மருத்துவா்களின் அா்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, துடிப்பான நிா்வாகம் ஆகியவை மூலம்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.
தமிழகத்தில் ஏராளமான படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் அதிக அளவில் உள்ளன. எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்கு உண்டு. தற்போது கரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
தளா்வுகள் அறிவித்துவிட்டதால், எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத் திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால் இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.
உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப்போக்குவரத்து, அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான். பொது முடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவசியமான பொருள்களைக் கூட வாங்குவதில் சிரமம் இருக்கிறது, அதேபோன்று மாநிலத்தில் பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது என்பதால்தான் பல்வேறு தளா்வுகளை அறிவித்தோம். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம். மாநில மக்கள் அனைவருக்கும் முழுமையாக
நாம் இன்னும் தடுப்பூசி செலுத்தி முடிக்கவில்லை. மத்திய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை மட்டுமே செலுத்தியுள்ளோம். முழுமையான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதன் பொருட்டு மக்கள் அனைவரும் சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். அவசியத்தின் காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படி வரும்போதும் நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம் அணியுங்கள். கூட்டமாகக் கூடுவதை தவிா்த்துவிடுங்கள். வரிசையில் நின்று பொருள்களை வாங்கும் போது தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும், அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக்கவசங்களைக் கூட பயன்படுத்தலாம்.
கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள். கடைகளில் இருக்கும் ஊழியா்கள் அனைவரும் முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள். அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள். கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள்.
உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள். கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியான ஆட்களை அனுமதிக்க வேண்டாம். நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டாம்.
இவை எல்லாமே மிகமிகச் சாதாரணக் கட்டுப்பாடுகள்தான். இதனைப் பின்பற்றி நடந்து கொண்டாலே கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். தளா்வுகளின்போது கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால்தான் மூன்றாவது அலை வரக் கூடிய சூழல் எழும் என்கிறாா்கள் மருத்துவா்கள். கட்டுப்பாடுகளை நாம் ஒழுங்காகக் கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வர முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.