நீட் தேர்வு தேவையா?- 42 ஆயிரம் பேர் பங்கேற்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில், "நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா?" என்ற தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்ற கருத்துக்கணிப்பு அறிக்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதை மூத்த கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி வெளியிட, மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார். இந்த ஆய்வினை வழக்கறிஞர் பிரிட்டோவும், கா.கணேசனும் ஒருங்கிணைப்பு செய்தனர்.
இந்தக் கருத்துக்கணிப்பில் 42,834 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் ஒன்பது முக்கியக் கேள்விகள் முன்வைக்கப்பட்டன:
1.நீங்கள் நீட் தேர்வை விரும்புகிறீர்களா?
2.தமிழக மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிப்படைகிறார்களா?
3.மாணவர்கள் தற்கொலைக்கு நீட் தேர்வு வழி வகுக்கிறதா?
4.நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படுகிறதா?
5.சமச்சீரற்ற கல்விமுறைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு முறை சரிதானா? (State Board, CBSE, ICSE, International)
6.நீட் தேர்வு முறையால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா?
7.நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் - நலனில் தலையிடுகிறதா?
8.நீட் தேர்வு மூலம் யாருக்கெல்லாம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது?
9.இன்றைய தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்குப் பெறும் என்று நம்புகிறீர்களா?
இதில், பெரும்பாலானோர் அதாவது 87.1% மக்கள் நீட் தேர்வை அவர்கள் விரும்பவில்லை என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். வெறும் 11.9% மக்கள் மட்டும் நீட் தேர்வை விரும்புவதாகக் கூறினர். நீட் தேர்வினால் தமிழக மாணாக்கர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக 90.5% மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
நீட் தேர்வு மாணாக்கர் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்களிடத்தில் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்று 86.9% மக்கள் பதிவு செய்தனர். சமச்சீரற்ற கல்வி முறையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஒரே தேர்வு முறை சரியல்ல என்று 67% மக்கள் கருத்துத் தெரிவித்தனர். 24.2% பேர் தேர்வு முறை சரியென்ற கருத்தையும் முன் வைத்தனர்.
நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சத்தை 83.2% மக்கள் வெளிப்படுத்தினர். 9.1% மக்கள் இல்லை என்கின்ற கருத்தை முன் வைத்த வேளையில், இதுபற்றித் தெரியவில்லை என 7.7% மக்கள் தெரிவித்தனர். இதனால் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக 89.7% மக்கள் கூறினர். பாதிப்பு இல்லை என்று 7.1% மக்களும், தெரியாது என்று 3.2% மக்களும் கூறினர்.
நீட் தேர்வு மாநில உரிமைகள் மற்றும் நலனில் தலையிடுகிறது என்ற கருத்தை மிக அழுத்தமாக 79.6% மக்கள் முன்வைத்தனர். 11.1% மக்கள் நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் தலையிடவில்லை என்ற பதிலை முன்வைத்த வேளையில் 9.3% மக்கள் தெரியவில்லை என்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயில்வதோடு, தனியார் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும், வசதி வாய்ப்பு மிகுந்த மாணாக்கர்கள்தான் நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற கருத்தை மக்கள் பெருவாரியாக பதிவு செய்தனர். கிராமப்புற, ஏழை எளிய மாணாக்கர்கள், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை வெறும் 2- 3 விழுக்காடு மக்களே கூறினர்.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்களில் 75.8% மக்கள் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்குக் கட்டாயம் விலக்குப் பெறும் என்ற நம்பிக்கையைப் பதிவு செய்தனர். இந்த 75.8 விழுக்காட்டில், 36.5% மக்கள் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்கு பெறும் என்ற முழுமையான நம்பிக்கையை முன்வைத்தனர்
மக்களின் நம்பிக்கையை காக்கும்பொருட்டு தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் விரைவாக எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டே தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெற வேண்டும்.
இவ்வாறு கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.