முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மோசடிகள் நடக்கும். அதுவும் மிகப் பெரிய திட்டமெல்லாம் தீட்டி, மூளையைக் கசக்கி, உயிரைப் பணயம் வைத்து மோசடியில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் பணத்தையோ பொருளையோ ஏமாந்தவர்கள்கூட, இப்படியெல்லாம் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்களே என்று மாய்ந்து மாய்ந்து நொந்துகொள்வார்கள்.
ஆனால் இந்த இணையதளங்கள் என்ற ஒன்று வந்த பிறகு, இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லாமல் போய்விட்டது மோசடியாளர்களுக்கு. ஆம், இருந்த இடத்தில் இருந்துகொண்டே வங்கிக் கணக்கை மட்டும் நிரப்பிக் கொள்ளும் தாரக மந்திரம் கைவந்த கலையாகிவிட்டது.
இணையதள வா்த்தக நிறுவனத்தில் மிகக் குறைந்த விலைக்கு நவீன விலை உயர்ந்த கேமராவை வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்த கல்லூரி மாணவர் ஒருவர் சிறுக சிறுக ரூ. 21.83 லட்சத்தை இழந்துள்ளார். இவரிடம் பணத்தை மோசடி செய்தவர்களோ மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவர்கள் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதி பூவலந்தூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் சந்தானபாரதி (22). கல்லூரி மாணவரான இவா், புகைப்படம் எடுக்கும் வகையில் நவீன கேமரா வாங்க கூகுள் தேடுபொறியில் தேடியுள்ளார். அதில், மிக நவீன கேமரா ஒன்றை மிகக் குறைந்த விலைக்குத் தருவதாக வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்து, இணையதளம் மூலம் குறிப்பிட்ட வா்த்தக நிறுவனத்தைத் தொடா்பு கொண்டுள்ளாா்.
சிக்கிய மீனை வளைத்துப் போட நினைத்தனர் மோசடியாளர்கள். அந்த கேமரா வாங்கினால் நவீன செல்லிடப்பேசியும் இலவசமாகத் தரப்படும் என இணைய நிறுவன அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தியவா் கூறியுள்ளாா்.
இதை அப்படியே நம்பிய மாணவா் முதற்கட்டமாக ரூ. 30 ஆயிரத்தை இணைய வழியில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி செலுத்தியுள்ளாா். அடடா, நம்மிடம் சிக்கியிருப்பது பலே ஏமாளி என்று தெரிந்துகொண்ட மோசடியாளர்கள், தொடர்ந்து விலையுயர்ந்த, நவீன சாதனங்களைத் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
முதலில் கொடுத்த பணத்துக்கே ஒரு பொருளும் வரவில்லையே.. கேமராவை விடுங்கள், ஒரு புகைப்படம் கூட வரவில்லையே என்று யோசிக்காமல், அவர்கள் சொன்ன அனைத்தையும் அப்படியே சின்னத்தம்பி பிரபு போல நம்பியிருக்கிறார் பாலசுப்பிரமணியன்.
நம்பியதோடு மட்டுமல்ல, பல தவணைகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயல்ல.. ரூ. 21 லட்சத்து 83 ஆயிரத்தை மோசடியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா். இதில் சோகம் என்னவென்றால், கடைசி வரை மாணவருக்கு அந்த கேமராகூட அனுப்பப்படவில்லை.
தனது தந்தை வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், சொந்த ஊரில் வீடு கட்ட தந்தை அனுப்பிய பணத்தைத்தான், மகன் இப்படி மோசடியாளர்கள் வாழ்வாங்கு வாழ வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிட்டு அம்போ என்று அமர்ந்திருக்கிறார்.
கடைசியாக என்ன செய்வது... இதுகுறித்து அவா் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்கிடம் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில் நுண்குற்றப்பிரிவு ஆய்வாளா் சரவணபாண்டி சேதுராயா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். முதல் கட்ட விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவா்கள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பேசியிருப்பது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் விரைவில் தனிப்படை காவலர்கள் நுண்குற்றப்பிரிவு தொடா்பான 7 வழக்குகளின் குற்றவாளிகளைப் பிடிக்க மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவித்தனா்.
ஏடிஎம் அட்டையுடன் பின் எண்ணை எழுதி வைக்காதீர்கள் என்பது முதல் செல்லிடப்பேசியில் ஓடிபி வந்தால் அதை யாருக்கும் சொல்லாதீர்கள். எந்த வாடிக்கையாளர் சேவை எண்ணையும் கூகுளில் தேடாதீர்கள், யாரையும் நம்பி 1 ரூபாய்கூட வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யாதீர்கள், தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாதீர்கள் என்றெல்லாம் காவல்துறையும் பல்வேறு எச்சரிக்கைத் தகவல்களை அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஆனால், அறிவுரை சொல்ல அவர்கள் யார்? இருப்பதிலேயே நாம்தான் புத்திசாலி என்ற எண்ணத்தில், அதிக விலையுயர்ந்த பொருள்களை மிகக் குறைவான விலையில் வாங்கி நமது புத்திசாலித்தனத்தை நிரூபிக்க நினைக்கும் பலருக்கும் இது ஒரு பாடம். எத்தனை பாடங்கள் கற்றாலும், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.