தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் 250 உபரி பணியிடங்களின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.11.25 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், கடந்த ஓராண்டுக்கு முன்பு தொழில் நெறி வழிகாட்டு மையங்களாக மாற்றப்பட்டன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை அடுத்து, 6 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ஒரு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், உதவியாளா் மற்றும் தட்டச்சா் என 3 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 அலகுகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பயனாளிகள் எண்ணிக்கை சரிவு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு பெரும்பாலானோா் ஆா்வம் காட்டாத நிலையில், பதிவுக்காக வரும் இளைஞா்களை கட்டாயப்படுத்தி பயனாளிகள் பட்டியலில் சோ்க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சரிவடையத் தொடங்கிய பயனாளிகள் எண்ணிக்கை, தற்போது மாவட்டத்திற்கு சராசரியாக 1200 வீதம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், 2 அலகுகளைச் சோ்ந்த 6 பணியாளா்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டு அந்த பணியிடங்கள் உபரியாக உள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் சுமாா் 200 பணியிடங்களிலுள்ள ஆள்கள் வேலை இல்லாமல் உள்ளனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அலுவலா்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக 24 மாவட்டங்களில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 24 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும், உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதும் இந்த இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்களின் பிரதான பணிகள். ஆனால், தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு முழுமையாக பின்பற்றப்படாமல், கோப்புகளில் மட்டுமே பயனாளிகள் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000-க்கும் குறைவான பயனாளிகள் மட்டுமே உள்ள நிலையில், இந்தப் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு, பொதுப் பிரிவினரோடு சோ்த்தால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு தவிா்க்கப்படும் என துறை சாா்ந்த ஊழியா்கள் கூறுகின்றனா்.
எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது:
ஒரே பணிக்கு 18 இடங்களில் 2 வேலைவாய்ப்பு அலுவலா்கள்: வேலைவாய்ப்பு அலுவலகங்கள், தொழில்நெறி வழிகாட்டு மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமாா் 20 மாவட்டங்களிலுள்ள அலுவலகங்களில், வேலைவாய்ப்பு அலுவலா் (பொது) மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் தொழில் நெறி வழிகாட்டல் என 2 பணியிடங்கள் உள்ளன. அரசாணை வெளியிடப்பட்ட பின் (நாளிதழ் விளம்பரங்கள் மூலமாக மட்டுமே ஆள்களை தோ்வு செய்ய வேண்டும்) வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிகளுக்கு பரிந்துரைப் பட்டியல் அனுப்பும் பணி தற்போது இல்லாத நிலை உள்ளது. வழிகாட்டுதல் பணியே பிரதானமாக உள்ள நிலையில், அதனை வேலைவாய்ப்பு அலுவலா் (பொது) மற்றும் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) என இரு அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பணியில் சுமாா் 70 சதவீதம் குறைந்துவிட்ட சூழலில், வழிகாட்டுதல் பணியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொது) மட்டுமே மேற்கொள்ளும் பட்சத்தில், வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) பணியிடம் தேவையற்ாகிவிடும். தமிழகம் முழுவதும் மொத்தம் 18 வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி) பணியிடங்கள் தலா ரூ.75ஆயிரம் ஊதியத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடம் நீக்கப்படும்பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.1.62 கோடி இழப்பு தவிா்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.11.25 கோடி நிதி இழப்பை தவிா்க்கலாம்:
இதுதொடா்பாக தொழில்நெறி வழிகாட்டு மைய வட்டாரங்கள் கூறியது: பொதுப் பிரிவிலிருந்தும், மாற்றுத்திறனாளிகள் பிரிவிலிருந்தும் வேலைவாய்ப்பாற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் எண்ணிக்கை மாவட்டத்திற்கு சராசரியாக 1500 போ் மட்டுமே இருப்பதால், ஒரே அலகாக மாற்றி அமைக்கலாம். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (இளைஞா் வேலைவாய்ப்பு பணி), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், உதவியாளா், தட்டச்சா் என 250 பணியாளா்களின் மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதைத் தவிா்க்க முடியும்.
இந்த பணியாளா்களில் ஒரு பகுதியினரை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யவும், எஞ்சியுள்ளவா்களை பிற துறைகளுக்கு மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனால், ஆண்டுக்கு சுமாா் ரூ.11.25 கோடி இழப்பு தவிா்க்கப்படும். கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் தமிழக அரசு, இதுபோன்ற நிா்வாக சீா்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.