1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அறிவுத் தேனீக்களின் இஸ்ரோ பயணம்..! - அரசு பள்ளி ஆசிரியரின் சுவாரஸ்யப் பகிர்வு



மாணவர்கள்



விண்வெளித் துறையில் உலகமே வியந்து போற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (Indian Space Research Organisation - ISRO) ராக்கெட்டுகள் ஏவப்படுதலை இந்திய மக்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பை கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

மாணவர்களுக்கு வெறுமனே கற்றுக் கொடுப்பதைவிட, அவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கவே பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவர்


அவ்வாறே வகுப்பறையினுள் கற்றுக் கொள்வதைவிட, வகுப்பறைக்கு வெளியே கற்றுக்கொள்வதே மாணவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக எப்போதும் இருக்கிறது. ஆகவேதான் இந்தக் கற்றல்-கற்பித்தல் என்னும் இருவழிப்பாதைப் பயணத்தை மேம்படுத்துவதில் களப்பயணங்கள் என்றுமே அளப்பரிய பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலையில் எமது திருப்பூர், மேட்டுப்பாளையம், மாநகராட்சிப் பள்ளியின் நான்கு மாணவர்களை சந்திரயான் - 2 ராக்கெட் ஏவுதலைக் காண இஸ்ரோ களப்பயணம் அழைத்துச் சென்ற மறக்க முடியாத பயணத்தின் மலரும் நினைவுகள் இதோ...


ஒளிரும் இஸ்ரோவின் வெற்றியைக் காண ஒரு பரபரப்பற்ற ஞாயிறு காலை 6.30 மணியளவில் மாணவர்கள் நால்வரும் தம் பெற்றோருடனும், மிகுந்த ஆர்வத்துடனும் திருப்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். தங்கள் குழந்தைகளை இதுவரை தனியே வெளியே அனுப்பாத பெற்றோர் சற்று பதற்றத்துடன் குழந்தைகளுக்குத் தங்களது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மற்றொரு முறை நினைவூட்டினர். நாம் இரண்டு நாள் பயணத்திட்டத்தை விவரித்ததும், மாணவர்களது ஆர்வம் பன்மடங்கு அதிகரித்ததை அவர்களின் முகங்களின் பிரகாசங்களில் இருந்து உணர முடிந்தது.


பயணங்கள் என்றுமே இனிமையானவை. அதிலும் நண்பர்களுடன் கல்விச்சுற்றுலா என்னும்போது குதூகலம் கும்மாளமிடுவது இயல்பே. அதற்கு நம் மாணவர்களும் விதிவிலக்கு இல்லை. மனதுக்குள் மத்தாப்புடன், ஒளிவட்டம் இல்லாத தேவ தூதர்களாக ரயில் நிலையத்தில் நடைபோட்டனர் மாணவர்கள்.

ரயில்நிலைய அமைப்பு, ரயில்களின் வருகை - புறப்பாடு மற்றும் பெட்டிகளின் நிறுத்தம் (கோச் பொஸிஷன்) உள்ளிட்டவை குறித்து மாணவருடன் நாம் பகிர்ந்துகொண்ட ரயில் குறித்த நேரடித் தகவல்கள் மாணவர்களுக்குப் புதுமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன.


ஆவலுடன் எதிர்பார்த்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தது. அந்த 10 நிமிடங்களும் ஒருவித திக்திக் மனநிலையிலேயே கடந்தது. கோச் பொஸிஷனில் கூறிய இடத்தில் ரயிலின் பெட்டி சரியாக நின்றது மாணவர்களுக்கு ஆச்சர்யம் அளித்தது. மனதினுள் பரபரப்பு இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் பொறுமையாக ரயிலில் ஏறி உரிய இருக்கையில் அமர்ந்தனர். மாணவர்கள் வகுப்பில் பேசிக்கொண்டே இருப்பது ஆசிரியருக்கு பெரும் சிக்கல்தான்.

ஆனால், தனியான பயணங்களில் அது வேறு விதமாக, ரசிக்கக் கூடியதாகவே அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்பயணமும் அதற்கு விதிவிலக்கல்ல.



ரயிலின் இருக்கையில் அமர்ந்ததும் உலகக் கோப்பை முதல் உள்ளூர் செய்திகள் வரை அனைத்தையும் மாணவர்கள் தங்களுக்குள் விவாதித்தனர். கலந்துரையாடி விமர்சனங்களை முன்வைத்தனர்.

சத்தமாகப் பேசுவது பிறருக்கு தொல்லையாக இருக்கும் என அவ்வப்போது அறிவுறுத்த வேண்டி இருந்தது!

மாணவர்களின் மகிழ்ச்சியான உரையாடலால் அடுத்த அரை மணியில் அந்தப் பெட்டியில் உள்ள அனைவருக்கும் எங்களைப் பற்றித் தெரிந்துவிட்டது. ரயில் - ஜன்னலோர இருக்கை - கையில் புத்தகம் சொர்க்கம் வேறு உண்டோ! கிடைத்த ஒரு ஜன்னலோர இருக்கையை மணிக்கு ஒருவர் என மாணவர் நால்வரும் பகிர்ந்து பயன்படுத்தியது உள்ளபடியே மாண்புக்குரிய ஒன்றுதான்.

ஆக்கபூர்வமாய் பேசுவதில் மட்டுமல்ல, அமைதியாய் அறிவைச் சேகரிப்பதிலும் தாங்கள் வல்லவர்கள் என்பது மாணவர்களால் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டது. ஆம், தொடர்ந்து அரட்டைகளில் இறங்காமல் தாம் கொண்டு வந்திருந்த நூலக புத்தகங்களை அமைதியாய் வாசிக்க ஆரம்பித்தனர்.

வாசிப்பினூடே சந்திரயான் 2 பற்றியும், தாம் காண உள்ள விண்வெளி மையம் குறித்தும் அவ்வப்போது அறிவுபூர்வமான அலசல் நடந்தது. மாணவர்களை நூலகங்களில் உறுப்பினராக்கி, வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தது வீண் போகவில்லை. கண் முன்னே அதன் விளைச்சல் விளைந்து நின்றது. உண்மையிலேயே ஓர் ஆசிரியருக்கு இது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே. நூலகமும் இணையமும் இணைந்த டிஜிட்டல் தலைமுறைகளாக தம் மாணவர்கள் வளர்ந்து வருவது ஓர் ஆசிரியருக்கு பெரும் திருப்தி அளிக்கக்கூடிய ஒன்று.


ரயில் பயணத்தை மாணவர்கள் பெரிதும் அனுபவித்தனர் என்பதில் ஐயமில்லை.

1,000 வகுப்புகளில் கற்க முடியாதவற்றை ஒரு ரயில் பயணம் கற்றுக் கொடுத்துவிடுகிறது. பார்க்க மட்டுமல்ல பயணிக்கவும் திகட்டாதது ரயில். அறிவுத் தேனீக்களாய் ரயிலில் வந்திறங்கிய நம் மாணவர்களை இளவெயிலுடன்கூடிய தூறலுடன் வரவேற்றது சென்னை.

சென்னையில் ஞாயிறு இரவு ஓய்விற்கு என்று ஒதுக்கப்பட்டது. மறுநாள் பொதுத்தேர்வு முடிவுகள் என அறிந்த மாணவன் முந்தின இரவு உறங்காமல் இருப்பது போல, சந்திராயன் 2 வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர் மாணவர்கள்.

திங்கள் அதிகாலை சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள 'சூலூர்பேட்டை' என்னும் இடத்திற்கு அடுத்த ரயில் பயணம் தொடர்ந்தது.

சூலூர்பேட்டையில் இறங்கி முன்பதிவு செய்யப்பட்ட அறையில் மாணவர்கள் சிறிது ஓய்வு எடுத்தனர். "தான் எடுத்த பணியினை முழுமூச்சாய் செய்வோருக்கு அடுத்த வேலைதான் ஓய்வு" எனும் மொழிக்கேற்ப தாம் தயாரித்த கட்டுரைகளை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்து அதில் ஏற்பட்ட சிறு சிறு சந்தேகங்களுக்கு நம்மிடம் விளக்கம் பெற்றனர்.


காலை 10 மணியளவில் இஸ்ரோ செல்ல மாணவர்கள் தயாராகினர். ஆந்திர அரசின் சிறப்புப் பேருந்து சூலூர்பேட்டையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட 18 கி.மீ தொலைவு கொண்ட இப்பயணம் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. இருபுறமும் வங்காள விரிகுடா வழிவிட, இடையில் பாதை சென்றது. கடலன்னையின் எழிலை அள்ளிப் பருகியபடி நமது மாணவர்கள் பயணத்தை அனுபவித்தனர்.

ஆய்வு மையத்தின் வாயிலில் பேருந்து நின்றது. வாயிலின் உள்ளே நாம் நுழைய, முதற்கட்ட ஆந்திர மாநில உள்ளூர் காவலரின் சோதனை ஆரம்பித்தது. நமது அனுமதிக் கடிதம் மற்றும் அடையாள அட்டையினை அணுஅணுவாகச் சோதித்து, உரிய நபர்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னர், ஆய்வு மைய முதன்மை வாசலில் நுழைய அனுமதித்தனர்.


அங்கிருந்து இஸ்ரோ ஆய்வு மையத்தின் பேருந்து நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ராணுவ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் சோதனை நடக்கிறது.

ஆட்களையும்,பொருள்களையும் மெட்டல் டிடெக்டரில் சோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

இஸ்ரோ
இஸ்ரோ
File photo

இரண்டாம் கட்ட சோதனைக்குப் பின் ஒரு 500 மீட்டர் நடை பயணமாகச் செல்ல வேண்டியுள்ளது. 500 மீட்டரைக் கடந்தவுடன் இஸ்ரோ அதிகாரிகள் நமது ஆவணங்களைச் சோதித்து உறுதிப்படுத்திய பின் நுழைவிற்கான அனுமதிக் கடிதத்தில் சீலிட்டு நம்மை Launch View Gallery இன் உள்ளே அனுமதிக்கின்றனர். அனுமதிக் கடிதத்துடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் பல்வேறு சுவரொட்டிகள் (Wall posters), சந்திரயான் 2 குறித்த விளக்க கையேடு மற்றும் சந்திரயான் 2 படம் அச்சிடப்பட்ட தொப்பிகளை அன்பளிப்பாக வழங்கியது சிறப்பு.

பல்வேறு சோதனைகளுக்கு தாமதம் ஆன போதும், அவற்றை ஒவ்வொன்றாகத் தாண்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி, விருந்திற்குப் பின் சமையற்கலைஞருக்கு கிடைக்கும் பாராட்டு போன்று எல்லையற்றது. அதனை நம் மாணவர்கள் நேரில் உணர்ந்தனர்.

விண்வெளி மையத்தில் நமது மாணவர்கள் மூன்றுவித இடங்களைக் கண்டு இரசித்தனர்.

1. Rocket Garden.

2. Launch View gallery.

3. Space museum.

Rocket garden இல் 1:1 உள்ளிட்ட பல்வேறு அளவிலான, SLV முதல் இன்றைய GSLV Mk3 வரையில் அனைத்து வித ராக்கெட்டுகளையும் அவை குறித்த விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்துள்ளனர். அவற்றின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். நமது மாணவர்கள் ராக்கெட்டுகளைத் தொட்டும், அவற்றுடன் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஸ்பேஸ் மியூசியம்
ஸ்பேஸ் மியூசியம்

ஆறு பிரிவுகளைக் கொண்ட ஸ்பேஸ் மியூசியத்தில் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி கண்முன்னே நிழலாகிறது. தாம் படித்துத் தெரிந்தவற்றுடன் மியூசியத்தில் உள்ளவற்றை ஒப்பிட்டு மகிழ்ந்தனர் நம் மாணவர்கள். ஸ்பேஸ் மியூசியத்தினைக் கண்டுகளிக்க ஒரு நாள் போதவே போதாது. இதற்காகவே தனியாகப் பயணம் வர வேண்டும். அத்தனை அற்புதமாய் மிளிர்கிறது Space Musium.

இறுதியாக Launch View Gallery.

இதற்காகத்தான் இத்தனை மைல்கள் தாண்டி வந்தோம் நாம். கிரிக்கெட் ஸ்டேடியம் போன்று படிக்கட்டு அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது Launch View Gallery. உரிய இடத்தில் அமர்ந்து, கவுன்ட் டவுனை மாணவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தனர். இங்கு அமர்ந்து பார்க்கும்போது சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் இரு Launch Pad களும் தெளிவாகத் தெரிவதில்லை. ஆனால், சந்திரயான் 2 GSLV Mk 3 இல் பொருத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதைப் பெரிய திரைகளில் காண முடிகிறது.

அங்கு என்ன நடக்கிறது என்பதை மூன்று பெரிய திரைகளிலும் தெளிவாகக் காண முடிகிறது. ஆங்கிலத்தில் நிகழ்வுகளை அழகாக விவரிக்கின்றனர்.


நேரம் ஓட ஆரம்பிக்கிறது. கவுன்ட் டவுன் ஓடுகிறது. மாணவர்களின் இதயத்துடிப்பும் வேகமாக ஓடுவதை உணர முடிகிறது.

கவுன்ட் டவுனில் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. Gallery இல் அறிவிப்பு உச்சக்கட்டத்தை எட்டுகிறது. 10,9,8......... 2,1,0 கண்முன்னே சீறிட்டுக் கிளம்புகிறது ராக்கெட்...

அந்தக் கனத்தின் உணர்வுகளை விவரிக்கவே முடியாது. மனம் முழுமையான நிறைவடையும் கனம். சுற்றி எங்கெங்கு காணினும் உற்சாகக் கூச்சல்கள், வெற்றி முழக்கங்கள். நாமே ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு. "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என விண்ணியலை அறிந்து கொள்ளுதலின் முதற்படியை முற்றாய் கடந்த முழு நிறைவுடன் விண்வெளி மையத்திலிருந்து மாணவர்கள் தம் இருப்பிடம் திரும்பினர்.

இஸ்ரோவில் மாணவர்கள்
இஸ்ரோவில் மாணவர்கள்

மாணவர்கள் இஸ்ரோ உடனான தங்களது அனுபவங்களை இத்துடன் முடித்துக்கொள்ளாமல் மேலும் தொடர்ந்ததுதான் இந்தப் பயணத்தினை அர்த்தமுள்ளதாக மாற்றியது எனலாம். சந்திரயான் 2 இன் லேண்டர் சந்திரனில் தரையிறங்காமல் போன சோகம் இந்தியாவை பலமாகத் தாக்கியபோது "நமது இலக்கு வலிமையானதாக இருப்பின் தோல்விகளை முற்றிலும் தவிர்க்க முடியாது" என்ற ஐயா அப்துல்கலாம் அவர்களின் வரிகளை மேற்கோள் காட்டி தமது பயண அனுபவங்களை இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுடன் கடிதம் மூலமாக நமது மாணவர்கள் நால்வரும் பகிர்ந்துகொண்டனர்.

ஆச்சர்ய நிகழ்வாக மாணவர்களை வாழ்த்தியும், சில ஆலோசனைகளை வழங்கியும் இஸ்ரோ தலைவர் அவர்களும் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இது அரசுப்பள்ளி மாணவர்களின் விண்வெளி குறித்த ஆர்வத்தையும் தேடுதலையும் ஊக்குவிப்பதாகவும், அடுத்தகட்டத்திற்கு நகர்த்தச் செய்வதாகவும் அமைந்திருந்தது.

ஒவ்வொரு முறை ராக்கெட்டுகள் ஏவும்போதும் எமது பயணங்கள் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. இதுவரை வெவ்வேறு மாணவர்களுடன் இஸ்ரோவிற்கு ஐந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராக்கெட் ஏவுதலை நேரடியாகக் காண்பது இந்தியர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக நமது மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய ஓர் அற்புதமான நிகழ்வு! ராக்கெட்டுகள் செல்வதை நாம் கழுத்து வலிக்கும் அளவு அண்ணாந்து பார்க்கும்போது விண்வெளி ஆய்வில் இஸ்ரோ தொட்ட உச்சம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் நிச்சயம் நிழலாடும்.


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags