முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய கல்விக்கொளைகை குறித்த அரசின் நிலைப்பாடு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அரசின் நிலைப்பாடு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரைவு அறிக்கையிலேயே கடும் எதிர்ப்பை சந்தித்த, புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக் கொள்கையை உடனடியாக அமல்படுத்தும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர்தர கற்பித்தலை வழங்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பன்முகத்தன்மை உடைய கல்வி நிலையங்களாக மாற்றம் அடையப் போவதால், கல்வியில் B.Ed., M.Ed., Ph.D., போன்ற பட்டங்களை வழங்குவது கட்டாயம் என்றும் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், புதிய கல்விக்கொள்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகே கருத்து தெரிவிக்கப்படும் என்றார்.
புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் குஷ்பு, புதிய கல்விக் கொள்கையை வரவேற்றிருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த குஷ்பு, தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக இருக்கமாட்டேன் என்றும், தலைமையின் கருத்துக்கு மாறாக கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். இந்நிலையில், நாட்டின் GDP-ல் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆனால், தொடக்கத்தில் இருந்தே புதிய கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக உள்ளிட்ட கட்சிகள், தன்னுடைய நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக மீண்டும் முன் வைத்துள்ளன. 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில், ஆக்கப்பூர்வமாக எதுவும் இல்லை என குற்றம் சாட்டியுள்ள நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளா? என்று கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கூட்டாட்சி கோட்பாட்டை சீர்குலைக்கும் புதிய கல்விக்கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என, விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்டோரும் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.