தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு, பணி நியமனத்தில் தாமதம் மற்றும் கொரோனா காரணமாக, பிஎட்., படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பல பிஎட் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்லூரிகள், 14 உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 756 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (பிஎட்.,), முதுகலை கல்வியியல் (எம்எட்.,) மற்றும் ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர பிஎட் கட்டாயம். எனவே, இளங்கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த பலர், பிஎட் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வந்தனர். ஆனால், தற்போதைய நிலையில் பல பிஎட் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து தனியார் பிஎட்., கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஓராண்டாக இருந்த பிஎட் படிப்பு காலம் இரு ஆண்டாக உயர்த்தப்பட்டது. அப்போது முதலே மாணவர் சேர்க்கை குறையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து, பிஎட்., முடித்தாலும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சியடைந்ததால், பிஎட் படிப்பு மீதான ஆர்வம் சரிந்தது. இதனிடையே, கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் ஆசிரியருக்கான படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இவர்களில், இடைநிலை ஆசிரியராக 1.70 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியராக 85 ஆயிரம் பேரும், முதுகலை ஆசிரியர் பணியை பெற 2.42 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போட்டித்தேர்வு மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதால், ஆசிரியர் பணியை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கருதுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் பல பாடப்பிரிவுகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். மேலும், கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக புதிய நியமனம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், பிஎட் முடித்தாலும் அரசுப்பணி வாய்ப்பு கேள்விக்குறி தான். கொரோனா காரணமாக, தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால், பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பல மடங்கு சரிந்துள்ளது. இதனிடையே பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததுடன், அங்கீகார கட்டணமாக பல லட்சம் செலுத்த வேண்டிய நிலைக்கு நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், கல்லூரிகளை நிரந்தரமாக மூடும் எண்ணத்திற்கு பலர் சென்றுவிட்டனர். இதேநிலை நீடித்தால், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வந்த நிலைமை, பிஎட் கல்லூரிகளுக்கும் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.