மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அமலாகியும், நேரடி கற்றல் பாதிப்பு, முறையான பயிற்சியின்மை போன்ற காரணங்களால், பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இத்தேர்வை தேசியதேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13-ம் தேதி தொடங்கிநடந்து வருகிறது. விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, தமிழக அரசால் கடந்தஆண்டு 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அதற்கு மாறாக, தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த அளவிலேயே நீட் தேர்வுக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2மாணவர்களுக்கு 3 மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்பு நடைபெற்றது. இதனால், விரைவாக பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு முழுமையான புரிதல் கிடைக்கவில்லை.
அதேபோல, நீட் பயிற்சி வகுப்புகளும் இணையவழியிலேயே நடத்தப்பட்டன. முதல்கட்ட பயிற்சிஜனவரி 12-ம் தேதியுடன் முடிக்கப்பட்டது. அதன்பிறகு பிளஸ் 2மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. 12-ம் வகுப்புபொதுத் தேர்வு முடிந்த பிறகுநேரடி முறையில் நீட் பயிற்சிவழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.
அதே நேரம், கரோனா பரவலால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி தரப்பட்டது. மேலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, நீட் பயிற்சி வகுப்புகள் தொடரப்படவில்லை. பயிற்சி காணொலிகள் மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்களுக்கு பயிற்சி வழிமுறையும், ஊக்கமும் மிக அவசியம். தனியார் பள்ளி மாணவர்கள் அதிக செலவு செய்து முழுமையாக 2 ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். மறுபுறம், முறையான பயிற்சி இல்லாததால், தகுதியான அரசுப்பள்ளி மாணவர்கள்கூட நீட் தேர்வில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே, ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் தலா 5 மாணவ, மாணவிகளையாவது தேர்வு செய்து சிறப்புநீட் பயிற்சி அளிக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
2019-20 ஆண்டு நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 8,132 பேர் விண்ணப்பித்தனர். அதில் 6,692 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 1,633 பேர் தேர்ச்சி பெற்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக, அதில் சுமார் 400 பேர்மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்குஇதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கணிசமான மாணவர்கள் பள்ளிகள் மூலம் இல்லாமல் நேரடியாக தேர்வுக்கு பதிவு செய்கின்றனர். தவிர, இன்னும் ஓரிரு நாட்கள் அவகாசம் இருப்பதால், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு பிறகே முழுமையாக கிடைக்கும்.
அதே நேரம், 7.5 சதவீத ஒதுக்கீட்டால் இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வுஎழுதுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அந்த இலக்கை எட்டாதது வருத்தமாக உள்ளது.
எனவே, தகுதியான மாணவர்களை கண்டறிந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.