1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஓய்வு பெற்றார் - அதிரடி கேள்விகள், 'பஞ்ச்' கருத்துகள் - ஒரு தொகுப்பு

விவசாயம், இயற்கை, ஏழை மாணவர்களுக்கான கல்வி வேலை வாய்ப்புகள், தமிழ் அடையாளங்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், அகழ்வாராய்ச்சிகள், மதுவிலக்கு போன்றவற்றில் வலுவான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார் நீதிபதி கிருபாகரன்.
 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், மத்திய, மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி 62 வயது பூர்த்தியாவதையொட்டி நாளை ஓய்வு பெற்றார்.  

 
நீதிபதி கிருபாகரன் என்றாலே கேள்விகளுக்கும், செய்திகளுக்கும் குறைவே இருக்காது. மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களும் கூட இவரது வழக்கு விசாரணைகளில் வழிந்தோடும். விவசாயம், இயற்கை, ஏழை மாணவர்களுக்கான கல்வி வேலை வாய்ப்புகள், தமிழ் அடையாளங்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், அகழ்வாராய்ச்சிகள், மது விலக்கு என பல்வேறு சமூக நலன் சார்ந்த விஷயங்களில் வலுவான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார் நீதிபதி கிருபாகரன்.
 

* சமூகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க அடிப்படை காரணம் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடின்மையே. ஒழுக்கமும், கட்டுப்பாடுமின்றி அமைதியாக மகிழ்ச்சியாக வாழ இயலாது.
 
* தேசப்பிதா மகாத்மா காந்தி தன் வாழ் நாள் முழுவதும் மது விலக்கை கடைபிடித்தார். அவரது கொள்கைகளை பின்பற்றாமல் மகாத்மா காந்தியை தேசப்பிதா என்றழைப்பதில் அர்த்தம் இல்லை
 
* சமூகத்தின் நலன் கருதி இளைஞர்கள் மதுவை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு மது விருந்து வழங்குவதை தவிர்த்து அனைவருக்கு முன்னோடியாக விளங்க வேண்டும்.
 
* சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்.
 
* விவசாயிகள் இரவு பகல் பாராது கண்விழித்து உழைத்தாலும், வீட்டுக்கு செல்லும் போது வெறுங்கையுடன் தான் செல்கின்றார்கள். பிற பொருட்களுக்கு உற்பத்தியாளர்களே விலை நிர்ணயம் செய்யும் பொழுது, விவசாயிகளுக்கு மட்டும் அந்த உரிமை இல்லை.
 
* கேரளா எல்லைக்குள் மருத்துவக் கழிவுகள் செல்ல முடியாதவாறு அம்மாநில காவல்துறையினரும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படுகின்றனர். ஆனால் தமிழக காவல்துறையினரும் அதிகாரிகளும் அவ்வாறு அக்கறையோடு இல்லை.
 
* மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அம்மாநில மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அப்பகுதி மொழியை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றில் தேவையற்ற பல அரசியல் நகர்வுகள் உள்ளன.
 
* அனைவருக்கும் உணவூட்டும் விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல. நாள் முழுவதும் ஒட்டிய வயிறுடன் உழைக்கும் விவசாயிகள், தங்களின் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை உள்ளது வேதனையானது
 
* இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர். இது தவறான நடைமுறையாகும்.
 
* அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்.
 
* லஞ்சம் வாங்குவது சாதாரண விசயமாகவும், லஞ்சம் வாங்காதவர்களை பிழைக்கத் தெரியாதவர்களாக பார்க்கும் நிலையும் உள்ளது. தமிழகத்தில் ஊழல் என்பது புற்றுநோய் போல வளர்ந்து வருகிறது. போதிய அறுவை சிகிச்சை செய்யப்படாததால், அது அடுத்தடுத்த கட்டத்தை எட்டுகிறது.
 
* இப்போதாவது நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் வருங்கால தலைமுறையினர் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் அல்லாடும் நிலை உருவாகும்.
 
* ஏழ்மை நிலை காரணமாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், பல வலிகளுக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், மீண்டும் பொருளாதார சூழலால் கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை மிகுந்தது
 
* குடும்பம் ஒருவகையில் அழுத்தங்களை உள்வாங்கிக்கொள்ளும் வடிகாலாக அமைகிறது. ஆனால் காவல்துறையினர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ, போதுமான அளவு தூங்கவோ கூட வாய்ப்பு கிடைப்பதில்லை.
 
* மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், முதலில் தங்களின் பணியை முறையாக செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் யாராகினும், அது அரசியல்வாதிகளானாலும் சரி அமைப்புத் தலைவர்களானாலும் சரி அரசு ஊழியர்களானாலும் சரி அவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்கள்.
 
* வாக்குக்காக மட்டுமல்ல வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும்.
 
* தமிழகத்தோடு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏறத்தாழ முடியும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பணிகள் அவ்வளவு துரிதமாக நடைபெற்றதாக தெரியவில்லை போன்ற கருத்துக்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தின.
 
இதுபோன்று பல்வேறு கருத்துக்களால் மட்டுமல்லாமல் கேள்விகளாலும் பல தீர்வுகளைக் கண்டவர் நீதிபதி கிருபாகரன். யார் இந்த கிருபாகரன் என சாதாரண மனிதன் உள்ளிட்ட அனைவரையும் அவரது கேள்விகள் திரும்பி பார்க்க வைத்துள்ளன.
 
* அரசு இணையத்தில் சாதாரண மனிதனுக்கு மணல் இலகுவாக கிடைக்கவில்லை எனில், அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடி விடலாமே?
 
* குட்கா, பான்மசாலா போன்றவற்றிற்கு நிரந்தரமாக தடை விதிக்காமல், ஒவ்வொரு ஆண்டும் தடையை நீட்டித்து அரசாணை வெளியிடுவது ஏன்?
 
* இந்தியமுறை மருத்துவ படிப்புகளுக்கு என தமிழக அரசு தனி பல்கலைக்கழகத்தை எப்போது அமைக்கும்?
 
* கேரளாவில் நடைபெறுவது போல் தமிழகத்திலும் தனியார் விவசாயப் பணிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஏன் பயன்படுத்த கூடாது?
 
* தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்?
 
* தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனி துறையையோ அல்லது அமைப்பையோ அமைக்கக்கூடாது?
 
* பட்டாசு தயாரிப்பு தொழில் நடைபெறும் மாவட்டங்களில் வேறு ஏதேனும் தொழில்களில் முன்னெடுக்க திட்டம் உள்ளதா?
 
* பிரியாணி, குவாட்டர் பாட்டிலுக்காகவும், சில ஆயிரங்களுக்காகவும் தங்களது வாக்குகளை விற்பனை செய்துவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?
 
* ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளக்கூடாது?
 
* அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்?அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை?
 
கேள்விகளோடும், கருத்துக்களோடும் மட்டுமின்றி மைல் கற்களாக இவரின் பல உத்தரவுகளும் அமைந்துள்ளன. அவற்றில் சில...
 
* பிராங் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை.
 
* டிக்டாக் செயலிக்கு தடை.
 
* ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை
 
* சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் (பேக்கிங் செய்யாமல்) விற்பனை செய்ய இடைக்கால தடை.
 
* 1 முதல் 10 ஆம் வகுப்பு 11,12ஆம் வகுப்பு மற்றும் பட்டம் அல்லது பட்டயம் போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 % இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவு.
 
* கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரண்டு குழுக்கள் அமைத்து, கோவில் நிலங்கள் தொடர்பான சொத்துக்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
 
* அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய அனைத்து ரயில் நிலையங்களிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.
 
* தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளிலும்,2021-22 ஆம் கல்வி ஆண்டில் தலா 150 மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
 
* 36 மாதங்களுக்குள்ளாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க அறிவுறுத்தியது.
 
* சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, லக்னோவின் சமஸ்கிருத கிளை, நாக்பூரின் அராபிக்- பெர்சிய கிளை போல தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்யவும், தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற உத்தரவு.
 
* ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதை மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. மத்திய அரசு இதனை முறையாக பின்பற்ற உத்தரவு.
 
இவற்றையெல்லாம் தாண்டி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற வழக்கு வந்தபோது பல காரசாரமான கருத்துக்களை முன்வைத்து விசாரணைகள் நடைபெற்றாலும், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கினார் நீதிபதி கிருபாகரன். உடனே அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதோடு, அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் பெரும் வரமாக கிடைத்தது அந்த 7.5% உள் ஒதுக்கீடு.
 
இது போல பல வழக்குகளில் உத்தரவு ஏதும் பிறப்பிக்காமலேயே, கேள்விகள் வாயிலாகவே வேள்விகளை நிகழ்த்திய பெருமையும் இவரைச் சாரும். அந்த வகையில் நாளை ஓய்வு பெறுகிறார் கேள்விகளின் நாயகன் கிருபாகரன். 
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags