சூரியக் குடும்பத்தில் சூரியன்தான் நாயகன். சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்துக் கோள்களின் கட்டுப்பாட்டாளர் என்றும்கூடச் சொல்லலாம். சூரியனைச் சுற்றி, 8 கோள்கள் சுற்றி வருகின்றன. கோள்களின் எல்லையைத் தாண்டி உள்ள குள்ளக் கோள்கள, குயூப்பியர் வளையம் மற்றும் அதைத் தாண்டி மிகத் தொலைவில் உள்ள ஊர்ட் மேகம், வால்நட்சத்திரங்கள் உள்பட அனைத்தும் சூரியக் குடும்ப உறுப்பினர்கள்தான்.
சுற்றி வரும் கோள்கள்
சூரியனைச் சுற்றி அதன் குடும்ப உறுப்பினர்களான 8 கோள்கள் சுற்றுகின்றன. சூரியனின் ஈர்ப்பு விசையால்தான் அவை எல்லாம் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. சூரியனைச் சுற்றி நீள்வட்டத்தில் தட்டாமாலை சுற்றுவதுபோல சுற்றி வலம் வரும் கோள்கள் ஒவ்வொன்றும், அதன் அடர்வு, நிறை மற்றும் அது சூரியனிலிருந்து உள்ள தொலைவு என்பதை எல்லாம் பொருத்தே அதன் சுற்று வேகம் உள்ளது என்றால் ரொம்பவும் ஆச்சரியமான விஷயம்தானே.
நாம் இதுவரை அறிந்துள்ள அறிவியல் தகவல்களிலிருந்து, புவியில் மட்டும்தான் உயிரினம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உயிரினத்தின் ஒன்றான மனித இனம்தான், சூரியன், கோள்கள் மற்றும் புவி போன்றவை உருவான விஷயங்களையும், அவை தொடர்ந்து இடைவிடாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்ற உண்மைகளையும் அறிவியல் மூலம் அறிந்து உலகுக்குத் தெரிவித்தனர்.
புவி தன் மைய அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுகிறது என்றும், அதனால்தான் புவி வாழ் உயிர்களுக்கு பருவகாலம் ஏற்படுகிறது என்பதும்கூட நமக்குத் தெரியும். புவி மட்டுமல்ல, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களும் சாய்ந்தே உள்ளன. சூரியனும்கூட தன் அச்சில் 7 டிகிரி சாய்மானத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.
புவியின் சுற்றுப்பாதை
வட துருவத்திலிருந்து அதற்கு மேலேயுள்ள வட துருவ நட்சத்திரத்திலிருந்து பார்த்தால், புவி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவது நன்றாகவேத் தெரியும். வடதுருவம்தான் புவியியல் வடதுருவம்(Geographic North Pole) /தரைப் பகுதி வடதுருவம் (Terrestrial North Pole) என்றும் சொல்லப்படுகிறது. இங்குதான் புவியின் மைய அச்சு அதனுடைய மேற்பகுதியை சந்திக்கிறது. ஆனால் இந்த இடம் வடபகுதி காந்தத் துருவத்திலிருந்து (North Magnetic Pole)வேறுபட்டது ஆகும். புவியின் தென்துருவத்தில், அதன் சுற்று மேற்பகுதியிலிருந்து பிரிக்கப்படுகிறது.
தன்னைத் தானே சுற்றும் நேரம்
புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம்/23 மணி, 56 நிமிடங்கள், 4 நொடிகள் ஆகின்றன. இதுவே ஒரு முறை சூரியனைச் சுற்றிவர, தன்னுடைய அச்சில்/சுற்றில் 365.26 முறை சுற்றுகிறது அதனால் 365.26 நாள்கள் ஆகின்றன. இதுவே புவியின் ஒரு ஆண்டு எனப்படுகிறது. ஆனால் புவியின் சுற்றுவேகம் எப்போதும் இதுபோலவே இருந்ததா? இல்லை என்பதே பதில்.
புவி ஏன் சுற்றுகிறது?
புவி அது உருவான தன்மையினால்தான் இன்னும் அப்படியே சுற்றிக் கொண்டிக்கிறது. நமது சூரியக் குடும்பம் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன், நெபுலா என்று கூறப்படும் ஒரு பெரிய வாயு மேகமாய் இருந்தது. அதுவும் அதனுடன் சேர்ந்த தூசுக்களும் அதனுடைய சொந்த ஈர்ப்புவிசையால் மிக வேகமாக உடைந்து நொறுங்கின. அப்படி நொறுங்கும்போது உருவானதுதான் நம் சூரியக் குடும்பம். அந்த மேகம் உடைந்து நொறுங்கிய சடுதியிலே, இந்த மேகக்கூட்டம் மிக வேகமாக அசுர கதியில் கற்பனைக்கு எட்டாத அளவில் சுற்றத் துவங்கியது. அப்போது இந்த மேகத்துகள் சுற்றும்போது, அவற்றுள் சில தனித்தனியாகி, சுற்றிக் கொண்டே சுழலும் "சுழல் காற்றாகி" விட்டது. அவையும்கூட தனித் தனியாகி சுற்றத் துவங்கி விட்டன. அவைகள்தான் "கோள்கள்".
சூரியக் குடும்ப கோள்கள் உருவான கணத்திலிருந்து, அவை தன்னைத்தானே சுற்றிக்கொள்கின்றன. இது எப்படி தெரியுமா? ஸ்கேட்டிங் செய்பவர்கள் சுற்றும்போது, தனது கைகளை உடலுடன் சேர்த்து வைத்து சுற்றும்போது வேகமாக அவர்களால் சுற்ற முடியும். அதுபோலத்தான் இதுவும். ஒரு கோள் உருவாக போதுமான பொருள்கள் இருந்துவிட்டால், அவை தனியாக சுற்றத் தொடங்கிவிடுகின்றன. அது தன்னால் ஈர்க்கப்பட்ட பொருளுடன் சேர்ந்து வேகமாகச் சுற்றுகிறது. தான் சுற்றுவதை/தன் சுற்றும் வேகத்தை தடை செய்யும் ஒரு பொருள் இல்லாவிட்டால், இது தடையின்றி சுற்றிக் கொண்டே இருக்கும். சூரியன் உள்ளவரை புவி சுற்றிக் கொண்டுதான் இருக்கும்.
குறைந்து வரும் புவியின் சுற்று வேகம்
புவியின் சுழற்சி வேகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதன் ஒவ்வொரு அட்சரேகைப் பகுதியிலும், அதன் வேகம் வேறு வேறாக இருக்கிறது. வடதுருவத்தில் புவியின் சுற்றுவேகம் சுழியன்தான். வடதுருவத்தில்தான் சுற்றலின் வேகம் தொடங்குகிறது.
மையக்கோட்டில்/ நிலநடுக்கோட்டில் புவியின் சுற்றுவேகம் மிக அதிகம். அதன் சுற்றளவு அதிகம் உள்ள இடத்தில், அதாவது நிலநடுக்கோட்டில்/புவி மையக் கோட்டில் மணிக்கு 1,670 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது.
புவியின் இப்போதைய சுற்று வேகம் என்பது நொடிக்கு 29.6 கி.மீ/ மணிக்கு 1,07,200 கி.மீ என்பதாக இருக்கிறது.
இப்போது சுற்றுவதைவிட மிக வேகமாக முன்பெல்லாம் சுற்றியிருக்கிறது. புவியின் சுற்று வேகம் முன்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. புவி காலப்போக்கில் அதன் துணைக்கோளான நிலவின் ஈர்ப்பு விசையால், வேகம் குறைந்து கொண்டே வருகிறது. நிலவு, தன் கோள் நாயகனான புவியிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 செமீ விலகிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும், புவியின் சுற்று வேகம் குறைந்து, அதன் நாளில் 1.2 மில்லி வினாடிகள் அதிகரிக்கின்றன. நாளின் நேரம் கூடினால் சுற்று வேகம் குறைகிறது என்றுதானே பொருள்.
புவி உருவான சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியின் ஒரு நாள் என்பது 4-6 மணி நேரம்தான். ஒரு ஆண்டு என்பது 500 நாள்களுக்கு மேல் இருந்தது.
வேகம் குறைவதைக் கணிப்பது யார்?
அது சரி. இப்படி புவியின் சுற்று வேகம் குறைகிறது என்ற செய்தியை அறிவியல் தகவல்கள் நமக்கு ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரகோஸ் (rugose) என்ற புதைபடிம பவளத்திலுள்ள வளர்ச்சி வளையங்கள் மூலம் தெரிய வருகிறது. அந்த பவளத்தின் வயது சுமார் 370 மில்லியன் ஆண்டுகள் என்று ரேடியோ கார்பன் முறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வளர்ச்சி வளையங்கள் மூலம், அப்போது ஒரு ஆண்டுக்கு 425 நாள்களாக இருந்தன. மேலும் ஒரு நாள் என்பது 20.6 மணி நேரம் மட்டுமே கொண்டதாக இருந்தது.
வெகு வேகமாக சுற்றிவரும் புவியின் உட்பகுதியின் புதிருக்கு இன்று விஞ்ஞானிகளால், விடை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆம், கடந்த 300 ஆண்டுகளாய் விடை கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த ஒரு புதிரின் திறவு கோல் 2013 செப்டம்பர் 17 ஆம் நாள் லீட் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புவியின் உள்பகுதி கிழக்கு நோக்கிச் சுற்றுகிறது. அதன் வெளிப்பகுதி மேற்கு நோக்கிச் சுற்றுகிறது. புவியின் உள்பகுதி, வெளிப்பகுதிக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கியும், வெளிப்பகுதி மேற்கு நோக்கியும் சுற்றுகிறது. (புவி மேற்கு நோக்கி சுற்றுகிறது என்பதை ஹாலி வால்நட்சத்திரம் கண்டுபிடித்த எட்மண்டு ஹாலிதான் 1692ல் கண்டுபிடித்தார்)
புவி சுற்றுவதை நிறுத்திவிட்டால்...
ஒருவேளை புவி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? இதுவும் நடக்கலாம், ஆனால் இன்னும் குறைந்தபட்சம் சில பில்லியன் ஆண்டுகளுக்குள் இது நிற்கும் வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி நின்றுவிட்டால் புவியிலுள்ள வளிமண்டல காற்றின் வேகம் பூஜ்யத்துக்கு வந்துவிடும். இதனால் புவி, இப்போது சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் அசுர வேகத்தில் சுற்றத் துவங்கும். கட்டடங்கள் நொறுங்கும். பெருங்கடல்கள் நிலப்பகுதிமேல் பாயும். வளிமண்டலத்திலிருந்து சூறாவளி விசிறியடிக்கும். நாம் புவியின் மேல் மணிக்கு 1670 கி.மீ வேகத்தில் சுற்றுவதால் அது நின்றதும் அனைத்தும் பயங்கரமாய் வளிமண்டலத்தில் தூக்கி அடிக்கப்பட்டு அங்கே மலைத்துகள்கள், நீர்த்துகள்களுடன் நாமும் துளித்துளியாக உடைந்து போய் சுற்றுவோம். புவியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், ஆழமான பிடிப்பில் உள்ள மரங்கள், கட்டடங்கள், பாறைகள், உயிரினங்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் தூக்கி விசிறி எறியப்படும்.
லூயிஸ்ட் புளூம்பீல்டு (Louis Bloomfield) என்ற வர்ஜீனியாவின் இயற்பியலாளரின் கருத்துப்படி இந்த புவியில் வாழும் அனைத்து மனிதர்களும் தரைப்பகுதிக்குள் சென்று, மூச்சுத் திணறி இறந்து போவார்கள் அல்லது உறைந்து போகலாம் என்று கூறுகிறார். ஆனால், இப்பொது இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. இது பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே நடக்கலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.