பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ம் தேதி ரொக்கமில்லா, நேரடி தொடர்பில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான, டிஜிட்டல் பரிவர்த்தனைத் தீர்வான 'இ-ருபி'யைத் தொடக்கி வைத்தார்.
நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், நேரடி பயன்மாற்றத்தை (டிபிடி) மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுவதில் இ-ருபி மிகப்பெரிய பங்காற்றப்போவதாக அப்போது பிரதமர் கூறியிருந்தார்.
மேலும் டிஜிட்டல் ஆளுகையில் புதிய பரிமாணத்தையும் அது அளிக்கும். மக்களின் வாழ்க்கையுடன் தொழில்நுட்பத்தை இணைத்து எவ்வாறு இந்தியா முன்னேறி வருகிறது என்பதன் அடையாளம் இ-ருபி என்று மோடி கூறினார்.
இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்வதே இதன் சிறப்பம்சம். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெற்றுக் கொள்ளலாம். இது முன்கூட்டியே பணம் செலுத்திய ரசீது ஆகும். அதனை ஏற்றுக்கொள்ளும் எந்த மையத்திலும் அதைக்காட்டி பயனாளி பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அந்த பணத்துக்கான சேவையை பெறலாம்.
உதாரணமாக, ஒரு ஊழியருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று அரசு விரும்பினால், அது இ-ருபி ரசீதை ஒரு குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்டு பங்குதார வங்கி மூலமாக வழங்கலாம். இந்த ரசீது தொடர்பாக ஊழியருக்கு ஒரு குறுந்தகவலோ அல்லது அவரது போனில் கியூஆர் கோடோ அனுப்பப்படும். அந்த ஊழியர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று போனில் பெறப்பட்ட இ-ருபி ரசீது மூலமாக பணம் செலுத்தி சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு இ-ருபி ஒரே தடவையிலான, நேரடி தொடர்பில்லாத, ரொக்கமில்லா ரசீது அடிப்படையிலான பரிவர்த்தனை முறையாகத் திகழ்கிறது. இது எந்தவித அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை செயலி அல்லது இணையதள வங்கி அணுக்கம் ஆகியவற்றின் உதவியுமின்றி பயனாளிகள் பணம் பெறுவதற்கு உதவுகிறது.
ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிற டிஜிட்டல் கரன்சி முறையாக இ-ருபி-யை எண்ணி குழப்பமடையக்கூடாது. இ-ருபி என்பது ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டதுடன், குறிப்பிட்ட டிஜிட்டல் ரசீதை அடிப்படையாகக் கொண்டது.
நுகர்வோருக்கு இ-ருபி எவ்வாறு பயனளிக்கும்?
மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுகையில், இ- ருபியைப் பொறுத்தவரை பயனாளிக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது மிகப் பெரிய சிறப்பு அம்சமாகும். இது எளிமையான, நேரடி தொடர்பில்லாத பணம் பெறுவதை உறுதி செய்கிறது. இதற்கு தனிநபர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இதில் மற்றொரு பயனும் உள்ளது. சாதாரண போன்கள் மூலம் கூட இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம். அதனால், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும், இணையதள வசதி இல்லாத இடங்களில் உள்ளவர்களும் கூட இதனைப் பயன்படுத்தலாம்.
பணம் கொடுப்பவர்களுக்கு இ-ருபியின் பயன்கள் என்ன?
இ-ருபி நேரடி பணப்பரிவர்த்தனை முறையின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ரசீதுகளை நேரடியாக அளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், செலவைக் குறைக்கவும் இது வழிவகுக்கும்.
சேவை வழங்குவோருக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?
முன்கூட்டியே பணம் செலுத்தும் ரசீதாக இருப்பதால், இ-ருபி சேவை வழங்குவோருக்கு உடனடியாக தொகை கிடைப்பதை உறுதி செய்கிறது.
இ-ருபியை உருவாக்கியது யார்?
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ), ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரசீதுகள் அடிப்படையிலான இ-ருபி பரிவர்த்தனை முறையை உருவாக்கியுள்ளது. நிதித்துறை, சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் ஆகிவற்றின் ஒத்துழைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இ-ருபியை எந்த வங்கிகள் அளிக்கின்றன?
இ-ருபி பரிவர்த்தனைகளுக்காக என்பிசிஐ 11 வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. அவை ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஆகும்.
பாரத் பே, பீம் பரோடா மெர்ச்சன்ட் பே, பைன் லேப்ஸ், பிஎன்பி மெர்ச்சன்ட் பே, யோனோ எஸ்பிஐ மெர்ச்சன்ட் பே ஆகியவை இதற்கான செயலிகள் ஆகும். இ-ருபி முன்முயற்சியில் மேலும் அதிக வங்கிகள் மற்றும் செயலிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இ-ருபியை எங்கு பயன்படுத்தலாம்?
தொடக்கமாக என்பிசிஐ 1,600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை தொடர்பில் வைத்துள்ளது. இங்கு இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம். வரும் நாள்களில், தனியார் துறை ஊழியர்களுக்கு பயன்களை வழங்குவதற்கும், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொழில் பரிவர்த்தனைகளுக்கு பின்பற்றவும் ஏதுவாக இ-ருபி பயன்படுத்தப்படும், தளம் விரிவாக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.