தென்மேற்கு வங்கக் கடலில் சென்னையிலிருந்து 410 கி.மீ தொலைவில் மையங் கொண்டுள்ளது நிவர் புயல். இந்த காலக் கட்டங்களில் நாம் அதிகம் கேள்விப்படும் புயல் எச்சரிக்கை சமிக்ஞைகள், புயல் நேரங்களில் நாம் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாதவையும் மிக முக்கியமானவை.
துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு புயல் எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கொடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். உலகின் பல்வேறு நாடுகளில் இதற்காக கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய துறைமுகங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களுக்கு தனித்தனியாக புயல் எச்சரிக்கை சின்னங்கள் சமிக்ஞைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பகல் நேரங்களில் உருளை மற்றும் வடிவிலான கூம்பு வடிவிலான கூண்டுகளும், இரவு நேரங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஒளி விளக்குகள் புயல் எச்சரிக்கை சமிக்ஞைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கொல்கத்தாவையும், மசூலிப்பட்டணத்தையும் மாறி மாறி தாக்கிய புயல்களைத் தொடர்ந்து கடந்த 1864-ஆம் ஆண்டு அப்போதைய அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான புயல் எச்சரிக்கை சின்னங்களை உருவாக்க முடிவெடுத்தது. அதன்படி இந்தியாவில் கடந்த 1865-ஆம் ஆண்டு கொல்கத்தா துறைமுகம் தான் முதன் முதலாக புயல் எச்சரிக்கை சின்னங்களைக் கொண்டிருந்தது. அந்த வகையில் இந்தியாவில் 1 ஆம் எண் எச்சரிக்கை முதல் 11 ஆம் எண் எச்சரிக்கை வரையிலான புயல் கூண்டுகள் ஏற்றப்படுகின்றன.
இந்திய வானிலை மையம் துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 4 முறை வானிலை குறித்த தகவல்களைப் பரிமாறும். புயல் காலங்களில் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல் பரிமாறப்படுகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் தற்போது வந்துள்ள நிவர் வரை தமிழகத்தில் பல்வேறு புயல்கள் அதன் கோரத்தை காட்டிச் சென்றுள்ளன. அவற்றுள் தானே, நடா, வர்தா, ஒக்கி, கஜா, ஃபானி போன்றவை ஏற்படுத்திய சேதங்களில் இருந்து மீள முடியாத நிலை இன்றுவரை உணரப்படுகிறது.
2010-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை கடந்து சென்ற புயல்களும், அப்போது வீசிய காற்றின் வேகங்களும்
ஆண்டு - புயல் பெயர் - காற்றின் வேகம்
2010 நவம்பர் - ஜல் - 100 கி.மீ
2011 டிசம்பர் - தானே - 140 கி.மீ
2012 அக்டோபர் - நீலம் - 85 கி.மீ
2013 நவம்பர் - மடி - 120 கி.மீ
2016 மே - ரோனு - 85 கி.மீ
2016 அக்டோபர் - கியான்ட் - 85 கி.மீ
2016 நவம்பர் - நடா - 75 கி.மீ
2016 டிசம்பர் - வர்தா - 130 கி.மீ
2017 டிசம்பர் - ஒக்கி - 155 கி.மீ
2018 நவம்பர் - கஜா - 128 கி.மீ
2019 ஏப்ரல் - ஃபானி - 170 கி.மீ
புயல் நேரங்களில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாதவையும் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இவை இயற்கை பேரிடர்களில் இருந்து நம்மை காப்பதுடன் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க உதவும். வதந்திகளை நம்பி பதற்றமடையக் கூடாது. செல்லிடப்பேசி உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை சார்ஜ் செய்து வைத்துக் கொண்டு, குறுந்தகவல் மூலம் தகவல்களை பரிமாற வேண்டும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளை தண்ணீர்புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களுடன், டார்ச் லைட், மெழுகுதிரி, மருந்துகள் உள்ளிட்ட அவசர கால பொருள்களை வைத்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அமைப்புகளின் வானிலை தொடர்பான செய்திகளை கவனமாக கேட்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
வீடுகளில் உள்ள சமையல் எரிவாயு மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை அணைத்து வைத்திருக்க வேண்டும். வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பக்கூடாது. சிதிலமடைந்த கட்டடங்களில் இருப்பதையும், உடைந்த மின் கம்பங்களின் கீழ் நிற்பதையும் , கீழே விழுந்து கிடக்கும் மின் வயர்களை மிதிப்பதையும் தவிர்க்க வேண்டும். கார் போன்றவற்றை மரங்களின் கீழ் நிறுத்தக்கூடாது. காய்ச்சிய குடிநீரை பயன்படுத்துவதுடன், புயல் நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லதாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.