கல்வியை ஒருவன் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் அதை இளம் வயது முதலே கற்றல் வேண்டும். இளம் வயதில் ஒருவன் கற்கின்ற கல்வி அவனது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் எளிதில் சென்று பதியும். எனவே 'இளமையில் கல்' என்று ஆத்திச்சூடியில் ஒளவையார் கூறியுள்ளார்.
வாசிப்பு என்பது வெறும் பாடப்புத்தகங்களின் வாசிப்பை மட்டும் கருதவில்லை. அறிவுக்கு, பொழுதுபோக்கிற்கான வாசிப்பையும் குறிக்கின்றது.
கல்வி என்பது பள்ளிப் புத்தகத்தோடு முடிவதல்ல, அது தொடக்கமே. அதைத் தாண்டி வாசிப்பு என்பதே சிறுவர்களையும், மாணவர்களையும் செம்மைப்படுத்தும்.
மனிதனின் ஆயுள் அவன் வாழும் நாள்களை வைத்து அளவிடபடுகிறது. அவனது செயல்கள் அவன் வாழ்ந்த நாள்களை மதிப்பிட வைக்கிறது. காலத்தின் அருமையும், பெருமையும் நம் உயிரைப் போல மதிப்பும் பெருமையும் கொண்டது, ஆம் போனால் வராதது உயிரும், காலமும் .
காலம் பொன் போன்றது என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. “ஒரு மருத்துவர் உங்களை நெடு நேரம் காக்க வைக்கிறார் என்றால் அந்த மருத்துவரை மாற்றுவது பற்றியும் யோசிக்க வேண்டியதுதான், மற்றவர்கள் நம் நேரத்தை வீணடிப்பதையும் நாம் தவிர்க்க வேண்டும்” என்கிறார் அமெரிக்காவின் பிரபல நிர்வாக ஆசான் மார்க்மெக்கார்மக் .
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள சிறந்த வழி புத்தகங்கள் வாசிப்பதே. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும்.
நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப்பிடித்த அணுகுமுறைகளை படிகளாக்கிக்கொள்ளுங்கள். அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும்.
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவையும் நூல்களே. விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியேதான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள்தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ. ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்கள். “நாளும் பொழுதும் என்னோடு நடமாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்கள்” என்றார் கவிஞர் ராபர்ட் கதே.
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும்.
"காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற பேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு முழுவதும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங்களின்பால் அச்சம் கொண்டவர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப்பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோராகவும் விளங்கினார்.
வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும்.
லண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
நேரு, தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது, புத்தகங்களைத் தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் ரஷியாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய ரஷியாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது.
ரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம், ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே, முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அனிமேஷன் புத்தகங்கள், வண்ணத் புத்தகங்கள் என வித்தியாசமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலே அவர்களுடைய வாசிக்கும் ஆர்வம் தானாக அதிகரிக்கும்.
முதலில் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கையாள எளிதான வகையில் சிறு,சிறு புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் புத்தகத்தை முதலில் வாசிக்கும்போது, சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். அப்போது ஏற்படும் பிழைகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்தச் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள்.
குழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களின் எண்ண ஒட்டம் சீராக இருக்கும் என்பதைத் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்படுதல் போன்ற பண்புகளும் தானே வளரும், மனோ பலத்தை அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறும் போது தவறாமல் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எல்லா புத்தகங்களையும் பார்வையிடச் சொல்லுங்கள். அவர்கள் விரும்பும் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். இது அவர்களுக்குப் புத்தகம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.
விடுமுறை நாள்களில் குழந்தைகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களின் முக்கியக் கடமையாகும். சிறுவர்களின் நடத்தைகள், அவர்களின் இயல்புகளை ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் சிறுவர்களுக்கான புத்தகங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
சிறுவர்களின் சிந்தனை, மனப்பாங்கு விருத்தி, தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் புத்தகங்களை நாம் கட்டாயப்படுத்தாமல் அன்பாக நட்புரீதியில் தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
படிக்கும் புத்தகங்கள் மாணவர்களையும், அவர்கள் வாழ்நாளையும் பொருள் உள்ளதாக மாற்ற வேண்டும். மாணவப் பருவம் முதலே வாசிப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் பிற்காலத்தில் சிறந்த தலைவர்களாக விளங்கினார்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.