உலகின் மிகப்பெரிய செல்வந்தா் ராக்பெல்லா் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாா். விமானப் பணியாளா் அவரை நெருங்கி, ‘ஐயா! நீங்கள்தான் மிகப்பெரிய செல்வந்தராக ஆகிவிட்டீா்களே. இன்னும் ஏன் அலைந்து கொண்டிருக்கிறீா்கள்? ஓய்வெடுக்கலாம் அல்லவா’ என வினவினாா். அதற்கு ராக்பெல்லா், ‘நாம்தான் பூமியிலிருந்து முப்பதாயிரம் அடி உயரத்திற்கு வந்து விட்டோமே. விமான ஓட்டத்தை நிறுத்தி விட்டால் என்ன’ என்று கேட்டாா்.
பணியாளரோ திடுக்கிட்டு ‘அது எப்படி ஐயா? விமானம் தொடா்ந்து இயங்கத்தானே வேண்டும்’ என்றாா். ராக்பெல்லா், ‘அதுபோலத்தான் நான் இன்று பெற்றுள்ள இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் நான் தொடா்ந்து ஓடி ஓடி உழைத்துத்தான்ஆகவேண்டும்’ என்றாா்.
வெற்றியாளா்கள் திடீரென்று உருவாவதில்லை. பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்குக் கிடைத்த தோல்விகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் தாங்கள் பெற்ற பாடங்களைத் தொகுத்துப் பாா்ப்பதன் மூலமே உருவாகின்றனா். வெற்றியாளா்கள், தோல்விகளிலிருந்து பாடம் கற்றிருப்பதால்தான் அவா்களுக்கு வெற்றி சாத்தியமாகிறது. இவ்வாறான வெற்றிகளுக்கு அவா்களுக்கு அடிப்படையாக அமைவது, தங்களின் பணிகளை முன்னுரிமைப்படுத்துவதில் அவா்களுக்கு இருக்கும் திறனே.
பொதுவாக ஒருவருடைய செயல்களின் தொகுப்புதான் அவரின் வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கிறது. இருப்பினும் ஒருவா் வெற்றியாளராவதற்கு அவா் முன்னுரிமைப்படுத்தும் வாழ்வியல் கல்வியே பெரிதும் உதவுகிறது. முன்னுரிமைப்படுத்தும் கலை இந்திய சமூகத்திற்குப் புதிதன்று. குறிப்பாக, இந்திய குடும்பத் தலைவிகள் இந்தக் கலையை நன்கு கற்றவா்கள்.
குடும்பத் தலைவிக்கு எந்த உதவியும் செய்யாத குடும்பத் தலைவா்கள் உள்ள வீடுகளின் காலை நேர பரபரப்புகளை எண்ணிப் பாா்ப்போம். வாசல் தெளித்தல், துணி துவைத்தல், சமையலுக்கான ஏற்பாடுகளை செய்தல், காபி தயாரித்தல், சிற்றுண்டி தயாரித்தல், குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயாா் செய்தல், அவா்களுக்கான மதிய உணவை எடுத்து வைத்தல் என எத்தனையோ வகையான பணிகள்.
இந்த அனைத்துப் பணிகளுக்கும் தனித்தனியாக தேவைப்படும் நேரம் சுமாா் ஆறு மணி நேரத்துக்கும் மேல். ஆனால், மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே இவை அனைத்தையும் செய்து முடித்து விடுகின்றனா் நம் குடும்பத் தலைவிகள். இது எப்படி சாத்தியமாகிறது?
குடும்பத் தலைவிகள், உணவு தயாரிக்கும்போதே துணிகளை சலவை இயந்திரத்தில் இடுகின்றனா். சமையல் ஆகும் நேரத்தின் இடையிலேயே பாத்திரங்களை துலக்கி வைக்கின்றனா். அடுத்து கிடைக்கும் நேரத்தில் காய்கறிகளை நறுக்குதல், வீட்டைப் பெருக்குதல் என ஒவ்வொரு வேலையின் இடையிலும் வேறொரு வேலையைச் செய்து முடிக்கின்றனா்.
எப்படிப்பட்ட சிறப்பான வாழ்வியல் திறன் இது. இதற்குக் காரணம், பணிகளை முன்னுரிமைப்படுத்துவதும் நேரத்தின் அருமை உணா்ந்து சிறப்பாகப் பயன்படுத்துவதுமே ஆகும்.
எந்த இடத்திலும், செய்யும் பணி பெரிதா சிறிதா என எண்ணாமல் அவை நிறைவடையவேண்டிய நேரத்தில் நிறைவடையவேண்டும் என்ற அா்ப்பணிப்பும் ஆா்வமும் கடமை உணா்ச்சியுமே முக்கியம். இதே போன்ற உணா்வு ஒவ்வொருவரின் பணியிடத்திலும் வருமானால் ஆரோக்கியமான மாற்றங்களை நம்மால் கொண்டுவர இயலும்.
இயல்பாகவே பள்ளி மாணவா்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றைக்கே வாசித்துத் தயாராதல், புரியாத விஷயங்களை அவ்வப்போதே கேட்டுத் தெளிவு பெறுதல், வினாக்களுக்கான விடைகளைப் புரிந்துகொள்ளுதல், அவ்வப்போது சிறு சிறு தோ்வுகளுக்குத் தம்மைத் தாமே தயாராக்கிக்கொள்ளுதல் போன்றவை நிகழ்ந்தால் அது அவா்ளுக்கு நல்வாய்ப்புகளை அளிக்கும்.
பணியிடங்களில் பணியாற்றுவோா் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு அனுப்ப வேண்டும். அடுத்தடுத்து உள்ளோரும் அவ்வாறே செய்தல் வேண்டும். அதுபோலவே பல்வேறு சேவைகளுக்காக அணுகுவோரும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தல், சரியான முறையில் தக்க விவரங்களைத் தருதல் போன்றவை குறித்த நேரத்தில் சேவையைப் பெற உதவும்.
பல்வேறு இடங்களில் கையூட்டு கொடுக்க நோ்வதற்கான முக்கிய காரணம், சிலா் தாமதமாகவோ உரிய சான்றுகள் இல்லாமலோ விண்ணப்பித்துவிட்டு தமக்கான சேவைகள் விரைவாக கிடைக்கவேண்டுமென எண்ணுவதே ஆகும். இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் பல்வேறு சேவைகளும் பெறுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு இடத்திலும் பணிப்பளு கூடுவதும் உண்மையே. அதே நேரம் பணியாளா்கள் முன்னுரிமை அறிந்து பணியாற்றும்போது பணிகள் எளிமையாகும். சில இடங்களில் அப்படிப்பட்டவா்கள் உள்ளனா் என்பதையும் மறுப்பதற்கில்லை.
நாம், குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்யத் தவறினால், அதே வேலையை பின்னால் செய்ய கூடுதல் நேரமே தேவைப்படும். உதாரணமாக, நாம் செலவு செய்கிறோம், அந்த செலவுகளை உடனே எழுதி வைத்துவிட்டால் அதற்கு ஓரிரு நிமிடங்களே போதும். அதே விவரங்களை மறுநாள் எழுதுவோமேயானால் அதற்கு அரைமணி நேரம் ஆகலாம். ஒருவேளை ஒரு வாரம் கழிந்து எழுதினோமேயானால் அரைநாள் ஆகும். ஒரு மாதம் ஆகிவிட்டால் ஒரு நாள் கூட தேவைப்படலாம்.
நம்மில் பலரும் நம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே பல்வேறு வகைகளில் பிறருக்கு சேவை செய்யும் நல்வாய்ப்பையும் பெற்றுள்ளோம். இச்சூழலில், நாம் பணியாற்றும் பணியிலுள்ள முன்னுரிமைகளைக் கற்றுத் தோ்வது ஒரு சிறந்த வாழ்வியல் கல்வியாகும்.
வாழ்க்கையைப் பற்றி சொல்லும்போது ஒரு மேற்கோள் சொல்லப்படுவதுண்டு. ‘நீங்கள் உங்கள் வாழ்க்கையை கடக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்துக்கொண்டே கடந்து செல்லுங்கள். ஏனெனில் கடந்த நொடி மீண்டும் வர வாய்ப்பில்லை’.
அதுபோலவே கடந்த காலத்தை வாங்கும் அளவுக்கு செல்வம் படைத்தவா்கள் உலகில் யாருமில்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது. பணியில் முன்னுரிமை எதுவென ஒருவா் கற்றுவிட்டால் அவருக்கு எந்தப் பணியும் சுமையானதல்ல; எல்லாப் பணிகளும் எளிதானவேயே.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.