1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

குரு பெயர்ச்சி 2020 - 2021--மகரம்







உத்திராடம் 2, 3, 4ம் பாதம் : முகூர்த்தநாள் குறிக்கலாம் 65/100

பொது : 12ம் வீட்டில் இதுநாள் வரை சஞ்சரித்து அதிக அலைச்சலைத் தந்த குரு இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு வர உள்ளார். பொதுவாக ஜென்ம குருவினால் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேர்ந்தாலும், மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு வழிகளைப் பின்பற்ற மனம் ஒப்பாது என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண்பீர்கள். குரு நீச பலம் பெற்றாலும் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது நடக்கும். ராசிநாதன் ஆக சனியையும், நட்சத்திர நாதனாக சூரியனையும் கொண்டிருக்கும் உங்களுக்கு மனதில் சஞ்சலம் இருந்து வருவதைத் தவிர்க்க இயலாது.

நிதி : பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு வியாஜ்ஜியங்கள் விரைவாக முடிவிற்கு வரும். தான, தருமம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும். வரவில் பெரிய முன்னேற்றத்தைக் காண இயலாது என்றாலும் செலவினங்களும் கட்டுக்குள் இருந்து வரும். சிக்கன முயற்சிகள் பலன் தரும். கடன் பிரச்னைகள் முடிவிற்கு வராமல் இழுபறியைத் தந்தாலும் அதனை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்.

குடும்பம் : குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு குருவின் இந்த ஒரு வருட சஞ்சாரத்திற்குள் நல்ல வரன் அமையும்.

கல்வி : மாணவர்களின் கல்வித்தரமானது இந்த வருடத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருந்து வரும். ஆராய்ச்சித்துறையில் இருக்கும் உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி, மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அவசரப்படாமல் நிதானமாக விடையளித்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியும் என்பதனை மனதில் கொள்ளுங்கள்.
பெண்கள் : குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீர குலதெய்வ வழிபாட்டினை வற்புறுத்தி செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண்வம்பு பிரச்னைகள் விலகும். முக்கியமாக இவ்வருடத்தில் கணவரின் முன்னேற்றத்தில் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களின் வெற்றியிலும் உங்களது பங்கு பிரதானமாக இருக்கும்.
உடல்நிலை : காது, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு ஆகிய பகுதிகளில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி அவதிக்குள்ளாக்கும். ஒரு சிலருக்கு உடற்தோலில் குறைபாடு தோன்றலாம். அதிகப்படியான டென்ஷனின் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொழில் : உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். வண்டி, வாகனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகத்தினைக் காண்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் லேசான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் அவர்களை விட்டுக்கொடுக்காது நடந்துகொள்வதால் அவர்களது ஆதரவினையும் பெற்று நற்பெயரினை அடைவீர்கள். உத்யோக ரீதியாக இருந்து வந்த மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். சுயதொழில் செய்பவர்கள் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருந்தாலும் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள். தொழில்முறையில் நல்ல பெயரை அடைந்தாலும், எதிர்பார்க்கும் தனலாபத்தினைப் பெறுவதில் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரம் : ஞாயிறு தோறும் சரபேஸ்வர வழிபாடு செய்து வாருங்கள்.

திருவோணம் : மழலைக்குரல் கேட்கும் 60/100

பொது : 3, 12ம் பாவகங்களுக்கு அதிபதி ஆகிய குரு ஜென்ம ராசியில் இடம் பெறும் நேரத்தில் மன சஞ்சலம் அதிகரிப்பதில் வியப்பேதும் இல்லை. கோவில்களுக்குச் செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றின் மூலம் மனதில் திருப்தி காண இயலும். சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்கள் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு வந்து சேரும். சனியை ராசி அதிபதி ஆகக் கொண்டிருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவீர்கள். சந்திரனை நட்சத்திர அதிபதி ஆகக் கொண்டிருப்பதால் நினைத்த காரியங்களை அமைதியான முறையில் சாதித்து வருவீர்கள். பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு தத்துவார்த்தமாக பதிலளித்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். மற்றவர்களை கவரும் வகையிலான பேச்சும் சிரிப்பும் உங்களுடைய மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. சிக்கலான  நேரத்தில் வார்த்தை ஜாலத்தினால் பிரச்னையிலிருந்து வெளியே வருவீர்கள்.

நிதி : பொருளாதார நிலையில் லேசான சிரமத்தினைத் தவிர குறிப்பிடத்தக்க சிரமமான சூழ்நிலை ஏதும் வராது. நேரம் நன்றாக இருந்தாலும் கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. கையிருப்பில் பணம் ஏதும் நிற்காது என்பதால் வங்கிக்கடன் உதவியுடன் சொத்துசேர்ப்பில் ஈடுபடலாம். ஆன்லைன் வர்த்தகம், நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு முதலான எளிய வகை பரிமாற்றங்களின் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

குடும்பம் : புத்ர காரகனான குருவின் அருட்பார்வை ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் நெடுநாட்களாக பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள். உடன்பிறந்தோர் உதவி நாடி வரக்கூடும். அவர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். அவர்கள் வகையில் நடைபெற உள்ள சுபநிகழ்ச்சிகளுக்கு மூலகாரணமாக நீங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து சேரும். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

கல்வி : 2021ம் வருடத்தின் முற்பாதியில் உங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு போட்டியாக இருக்கும் மாணவர்களை உங்களது ஞாபக சக்தியின் துணையுடன் எளிதாக வெற்றி கொள்வீர்கள். உயர்கல்வி மாணவர்கள் சிறப்பான நிலையினை உணர்வார்கள். ஆய்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான சூழ்நிலை தொடரும். கம்ப்யூட்டர் துறையில் பயிலும் மாணவர்கள் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.


பெண்கள் : பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதோடு அவற்றின் உபயோகம் குறித்து தோழியர் மத்தியிலும் விவரிப்பீர்கள். கணவர் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாய் இருப்பார். அவரது நண்பர்களில் நல்லவர், தீயவரைப் பிரித்தறிந்து தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையைச் சொல்வீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் இவ்வருடத்தில் உண்டாகும். குடும்ப விசேஷங்களில் உறவினர்களை அதிகம் நம்பாது தனித்து செயல்படுவீர்கள்.


உடல்நிலை : சர்க்கரை வியாதிக்காரர்கள், உடலில் கொழுப்புசத்து மிக்கவர்கள் தங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பிரதி மாதந்தோறும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உடல்நிலையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் முகத்தினில் நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. முருங்கைக் கீரையும், அகத்திக்கீரையும் உங்கள் உடல்நிலைக்கு மேலும் வலு சேர்க்கும்.

தொழில் : அலைச்சலுக்கு ஏற்ற தனலாபம் கிட்டுவதோடு உங்கள் நிர்வாகத்திறனும் மேம்படும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். கடைநிலைப் பணியாளர்கள், தொழிலாளர் வர்க்கத்தினர் போன்றோர் முன்னேற்றம் காண்பார்கள். பதவி உயர்விற்காகக் காத்திருந்த அரசுப் அலுவலர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். சுயதொழில் செய்வோரில் டிரை கிளீனர்ஸ், ப்யூட்டி பார்லர், சுத்தம், சுகாதாரம் சார்ந்த தொழில்கள் சிறக்கும். டிரை ப்ரூட்ஸ், விலையுயர்ந்த பழ வகைகள், அளவில் சிறிய பர்னிச்சர் சாமான்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் சில்லறை வணிகர்கள் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காது சிறிது நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம் : திங்கட்கிழமையில் அருகிலுள்ள சிவாலய பிரகாரத்தை 11 முறை பிரதக்ஷிணம் செய்து வணங்கி வாருங்கள்.

அவிட்டம் 1, 2ம் பாதம் : வெளிநாடு செல்லும் யோகம் 65/100

பொது : குரு ஜென்ம ராசியில் அமர்வதால் குருபலமும் வந்து சேர்கிறது. நண்பர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். ‘துஷ்டரைக் கண்டால் துார விலகு’ என்னும் பழமொழியை மனதில் கொண்டு பிரச்னைக்குரிய மனிதர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. தொலைதுாரப் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். உங்களை இதுநாள் வரை எதிரியாக எண்ணியவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு உங்களை நாடி வருவார்கள். இன்டெர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். ராசி அதிபதி ஆக சனியையும், நட்சத்திர அதிபதி ஆக செவ்வாயையும் கொண்டிருக்கும் உங்களுக்கு ஜென்ம ராசியில் குருவின் இணைவு நல்லதையே செய்யும்.

நிதி : முன்னோர்களின் சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உள்ளாகும். வழக்கு வியாஜ்ஜியங்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே சமாதானத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்னைகள் தீர்வடையும். வண்டி, வாகனங்களால் உண்டான செலவுகள் குறையும். அதே நேரத்தில் வெளியூர் பயணத்தின்போது ஞாபக மறதியின் காரணமாக பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

குடும்பம் : குடும்பத்தில் லேசான சலசலப்பு இருந்து வரும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். குடும்பப் பிரச்னைகளில் அதிகமாகப் பேசுவதைத் தவிர்ப்பீர்கள். குடும்ப விவகாரங்களிலும், இதர பணிகளிலும் அமைதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்களது மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
கல்வி : மாணவர்களைப் பொறுத்த வரை கிரஹ சஞ்சார நிலை சிறப்பாக உள்ளது. ஞாபகமறதி முற்றிலும் காணாமல் போகும். பாடங்களை வேகமாகப் படித்து முடித்துவிடுவீர்கள். அதே நேரத்தில் அவசரத்தை கைவிட்டு கேட்கப்படும் கேள்வியினை சரியாகப் புரிந்துகொண்டு சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் துணையோடு மாணவர்கள் கல்வியில் முதன்மை பெறுவர்.

பெண்கள் : குடும்பத்து பிரச்னைகளை வெளியே சென்று பேசுவதால் தொல்லைகள் உண்டாகும். முன்பின் தெரியாத மாற்றுமொழி பேசும் பெண்மணியின் நட்பு அநாவசிய பிரச்னைகளை உருவாக்கும். அவ்வப்போது கணவரோடு கருத்து வேறுபாடு கொண்டாலும் அவரது அனுமதியின்றி எந்த ஒரு பணியையும் செய்யமாட்டீர்கள். கணவரது உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குருவின் பலத்தினால் குடும்பத்தினை மிகுந்த பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள்.
உடல்நிலை : சரியான நேரத்திற்கு சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமே உங்களது ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல்நிலையில் தோன்றும் சிறிய மாற்றத்தினைக்கூட பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இராமல் உடனுக்குடன் கவனித்துக்கொள்வது நல்லது. நரம்புத் தளர்ச்சி, தைராய்டு பிரச்னை ஆகியன உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தொழில் : அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனி வட்டத்தை உருவாக்குவதாக நினைக்கும் மேலதிகாரியோடு மோதல்போக்கு உண்டாகலாம். சுயதொழிலில் குளிர்பான பொருட்கள், உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத் தொழில் செய்பவர்கள்,  ஜவுளி, வாசனாதி திரவியங்கள், பேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டுகள் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். அலைச்சல் கூடினாலும் லாபம் கிட்டும்.

பரிகாரம் : செவ்வாய் தோறும் வேல்வழிபாடு செய்து வாருங்கள்.

Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags