பொது : வெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு ராசி அதிபதியும் நட்சத்திர அதிபதியும் ஆகிய குரு வரவிருப்பது உங்களுக்கு மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இறங்கிய காரியங்களில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிகத் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். குரு நீச பலம் பெற்றாலும் செயல்வெற்றி என்பது சாத்தியமே. எந்த ஒரு செயலையும் சிறிது காலத்திற்கு முன்னதாகவே சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி என்பது நிச்சயம். ஒவ்வொரு செயலிலும் தனிப்பட்ட முறையில் உங்கள் முத்திரையை பதித்து வருவீர்கள். தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றவர்கள் மத்தியில் உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள்.
நிதி : பொருளாதார நிலைமை மிக நன்றாக இருந்து வரும். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு குறுகிய கால சேமிப்பில் ஈடுபடுவீர்கள். 2021ம் ஆண்டின் பிற்பகுதியில் உங்களது பட்ஜெட்டையும் மீறி சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் திருமணம். மேற்படிப்பு போன்ற சுபசெலவுகளாக இருக்குமே அன்றி அநாவசிய செலவுகள் ஏதும் இருக்காது.
குடும்பம் : உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் காண்பீர்கள். விலகியிருந்த உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். நீங்கள் தாமரை இலைத் தண்ணீர் போல் நழுவிச்சென்றாலும் உங்களை விடாது தொடர்வார்கள். பிள்ளைகளின் வழியில் அதிக செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களால் உண்டாகும் மனமகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. குடும்பத்தினரோடு பொழுதினைக் கழிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்.
கல்வி : மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவு முற்றிலும் அகலும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.
உடல்நிலை : மே வரை உடல்நிலையில் ஒரு சில உபாதைகளை சந்திக்க நேரிடும். தைராய்டு மற்றும் கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ருசியான தின்பண்டங்களையும், எண்ணை பலகாரங்களையும் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.
தொழில் : உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம் : வேதபாடசாலைக்கு உங்களால் இயன்ற நிதியுதவி செய்யுங்கள். தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
உத்திரட்டாதி : நாளெல்லாம் திருநாளே 70/100
பொது : பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான திசை புக்தியைக் கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். ராசி அதிபதி ஆக குருவையும், நட்சத்திர அதிபதி ஆக சனியைக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த இருவரும் இணைந்து வெற்றியைத் தரும் ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் தொடர்வெற்றி கண்டுவருவீர்கள்.
நிதி : பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து வரும். அதே நேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத பல வழிகளிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். புதிதாக வண்டி. வாகனங்கள் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் தேடி வரும். வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற காத்திருப்போருக்கு நிலைமை சாதகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைப்பது போல் தோன்றினாலும் பிற்காலத்தில் அதன் மூலம் புதிய பிரச்னைகள் உருவாகலாம். பாகப்பிரிவினை விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
கல்வி : குருவின் திருவருளால் மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். சரியான முறையில் தேர்விற்கு தயார் செய்து கொண்டீர்களேயானால் எதிர்பார்க்கும் கேள்விகளை வினாத்தாளில் காணப்பெற்று விடையளிக்கலாம். தேர்வு நேரத்தில் கிரஹ நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். மருத்துவத்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்துத்துறை மாணவர்களும் ஏற்றம் காணுவீர்கள்.
பெண்கள் : உங்களுடைய அளவு கடந்த உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவரவர் தங்கள் சொந்த நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்தும்கூட பெரிதாக கவலைப்படாமல் அவர்கள் எதிர்பார்த்த உதவியை செய்து தருவீர்கள். பொதுவாக விட்டுக்கொடுத்தலின் மூலம் நற்பெயரை அடைவீர்கள். கணவரின் பணிகளுக்கு பக்கபலமாக துணைநின்று அவரது வெற்றிக்கு பாடுபட்டு வருவீர்கள்.
உடல்நிலை : பொதுவாக உடல்நிலை சீராக இருந்துவரும். ஆயினும் ராகு, குரு ஆகியோரின் நீச பலத்தினால் வாய்ப்புண், வாயுப்பிடிப்பு, அலர்ஜி, தொற்றுவியாதிகள் போன்றவற்றிற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. உடம்பில் தோன்றும் அலர்ஜிக்கான அறிகுறிகளை உடனுக்குடன் கவனித்துக்கொள்வது நல்லது.
தொழில் : தொழில் நிலை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வரும். நீங்களாக விரும்பினாலொழிய ஓய்வு எடுத்துக்கொள்ள இயலாது. உழைப்பிற்கேற்ற ஊதியமும் நல்ல தனலாபமும் தொடர்ந்து இருந்து வரும். உத்யோகஸ்தர்கள் உடனுக்குடன் சுறுசுறுப்பாக செயல்படுவதன் காரணமாக மேலதிகாரிகளிடம் நற்பெயரை அடைவதோடு மட்டுமல்லாது முக்கியமான வேலைகள் மீண்டும் மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்படுகின்ற நிலைக்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள், நகை அடகு வட்டிக்கடை நடத்துபவர்கள், விவசாயிகள் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு நற்காலமாக இருக்கும். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள்.
பரிகாரம் : பௌர்ணமி நாளில் சந்திர தரிசனம் செய்வதோடு அபிராமி அந்தாதி படித்து அம்பிகையை வணங்கி வாருங்கள்.
பொது : பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைப் போல, நீங்கள் பொறுமையுடன் காத்திருந்ததற்கான பலனைக் காண உள்ளீர்கள். நட்சத்திர அதிபதி புதனின் விவேகமும், ராசி அதிபதி குருவின் நேர்மையும் உங்கள் வாழ்வின் இரு கண்களாக அமைந்திருக்கும். எல்லோரையும் மொத்தமாக நம்பிவிடாமல் நல்லவர், தீயவர்களை பிரித்தறிந்து பழக வேண்டியது அவசியம். எல்லாவற்றிலும் மிகுந்த நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உங்களது எண்ணம் அடுத்தவர் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றாலும் எங்கே, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொய்மையும் வாய்மையிடத்து என்ற வள்ளுவரின் கூற்றுக்கேற்ப நன்மையை விளைவிக்கும் பொய்யைச் சொல்வதில் தவறில்லை என்பதை உணர்ந்தீர்களேயானால் வெற்றி நிச்சயம்.
கல்வி : குரு பகவானின் துணையினால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். அதே நேரத்தில் எழுதும் திறன் குறைவாக இருப்பதால் தேர்வினில் விடையளிக்க நேரம் போதவில்லை என்ற குறை உண்டாகலாம். எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப் பழகி வந்தால் தேர்வு நேரத்தில் கை கொடுக்கும். சட்டம், பொருளாதாரம், கணிதம், வணிகவியல், மருத்துவம் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.
பெண்கள் : நீங்கள் விரும்பிய ஆடம்பர பொருட்கள் வீட்டினில் சேரும். அநாவசியமாகப் பேசுவது ஆபத்தினைத் தரும் என்பதை நீங்கள் உணருவது நல்லது. நம் வீட்டுப் பிரச்னைகளை வெளியில் சொல்வது நல்லதல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களை பாராட்டிப் பேசி ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் பலவீனமாக உள்ளது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகம் என்பதால் மனதில் லேசான விரக்தி தலைதுாக்கும். கணவருக்கு பணிநிமித்தம் பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள்.
உடல்நிலை : உடல்நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கமான சூழல் இருந்துவரும். ஆஸ்துமா, சைனஸ், சளித் தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள் உரிய சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்வது நல்லது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது அவசியம்.
பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாருங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.