Home »
Health
» குறட்டை உடல்நல பாதிப்பைக் காட்டும் அறிகுறி... கவனம்!
குறட்டை உடல்நல பாதிப்பைக் காட்டும் அறிகுறி... கவனம்!
‘படுத்தவுடனே நல்லா குறட்டைவிட்டுத் தூங்குறேனு மனைவி சொல்றாங்க டாக்டர்… நல்லாத் தூங்கினாலும் அடுத்த நாள் முழுக்க சோர்வாகவே இருக்கு... தூக்கத்துல எந்தக் குறையும் இல்லை. நல்லாத்தான் தூங்குறேன்
மறுநாள் சோர்வுக்கு என்ன காரணமா இருக்கும்?’ என்று மருத்துவரிடம் குறட்டைவிட்டு உறங்குவதைப் பெருமையாகப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மறுநாள் சோர்வுக்கான காரணமே, அவர்கள் பெருமையாகப் பேசும் குறட்டைதான். குறட்டை என்பது தூக்கத்தின் ஆழத்தை உணர்த்தும் அளவுகோள் அல்ல.
இது `சவுண்ட் ஸ்லீப்’ அல்ல!
குறட்டைவிட்டு உறங்கினால், ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவர் இருக்கிறார் என்று எண்ணுவது தவறு. உண்மையில், குறட்டைவிட்டு உறங்குவது ஆரோக்கியமானது அல்ல. ஆங்கிலத்தில் ஆழ்ந்த உறக்கத்தைச் சுட்டிக்காட்ட, ‘சவுண்ட் ஸ்லீப்’ எனும் பதத்தை உபயோகப்படுத்துவதுண்டு. அந்த வகையில் குறட்டைவிட்டு உறங்குவது, ‘சவுண்ட் ஸ்லீப் அல்ல, சவுண்ட் உண்டாக்கும் ஸ்லீப்’ என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பாதிப்பின் அறிகுறி!
குறட்டை ஒலி அடுத்தவரின் தூக்கத்தைக் கெடுப்பதால், அதை நிறுத்த வேண்டும் என்ற பெருந்தன்மையோடு சிகிச்சைக்கு வருபவர்களும் சிலர் உண்டு. குறட்டை ஒலி அடுத்தவரின் தூக்கத்தை மட்டுமல்ல, குறட்டைவிடுபவர்களின் உடல்நிலையையும் பாதிக்கும். குறட்டையில் வெளிப்படும் ஒலி, சுவாசப் பாதையின் தொடக்கத்தில் இருக்கும் பாதிப்பைக் கோடிட்டுக் காட்டும் அறிகுறி.
காரணங்கள்...
சிலருக்கு மெல்லிய அன்னம் (Soft palate) மற்றும் உள்நாக்கு (Uvula) பகுதிகள், உறக்கத்தின் போது அதிகளவில் நெகிழ்வதால், மூச்சுக்காற்று உட்செல்லும் போது, அவற்றில் உண்டாகும் அதிர்வுகளால் குறட்டை உண்டாகும். ஒவ்வாமை, மூக்கடைப்பு, நாசித் தண்டின் அமைப்பு வளைந்திருக்கும் (Deviated nasal septum) போதும் குறட்டை ஏற்படலாம். நீண்ட நாள்கள் சைனஸ் அழற்சியால் அவதிப்படுபவர்கள், ஆஸ்துமா நோயாளிகளுக்குக் குறட்டைச் சத்தம் வெளிப்படலாம். சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, இயல்பாக சுவாசம் நடைபெற முடியாமல் போகும் காரணிகள் குறட்டையை உண்டாக்கும். குழந்தைகள் உறங்கும்போது குறட்டைச் சத்தம் கேட்டால், டான்சிலைடிஸ் (Tonsillitis) தொந்தரவு இருக்கிறதா என்பதை அறிந்து சிகிச்சையளிக்க வேண்டும். அடிக்கடி சளித் தொந்தரவு, மூக்கடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொண்டைத் திசுக்கள் தடித்திருந்தாலும் குறட்டை ஏற்படலாம். சுவாசப்பாதை சார்ந்த தொற்றுகள் ஏற்படாத வண்ணம் தூதுவளைத் துவையல், கற்பூரவல்லி ரசம், தும்பைப் பூ நசியம், துளசிச் சாறு போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்தலாம்.
புகையும் மதுவும்!
நீண்ட நாள்கள் புகைப்பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும் குறட்டைத் தொந்தரவு நிச்சயம் இருக்கும். சில வகை தூக்க மாத்திரைகளும் குறட்டையை உண்டாக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் குறட்டை அதிகமாக இருக்கும். சமீபத்தில் மெலிந்த தேகம் இருப்பவர்களுக்கும் இந்தத் தொந்தரவு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. அதிகரிக்கும் வயதும் குறட்டையை உண்டாக்குவதற்கான முக்கியமான காரணம். பெண்களைவிட ஆண்களுக்கு அதிகளவில் குறட்டை உண்டாகிறது.
குறட்டையின் தீவிரத்தை அறிய...
குறட்டை விடுவதை ஒப்புக்கொள்ள மறுப்பவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு, அவர்கள் குறட்டைவிடுவதை செல்போனில் படம்பிடித்து / ஒலியைச் சேமித்து அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்கலாம். மருத்துவரிடம் காண்பிக்கும் பட்சத்தில், குறட்டையின் தீவிரத்தை அவர் அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். வெறும் குறட்டை ஒலி மட்டும் வெளிப்படுகிறதா, இல்லை மூச்சுவிடுவதில் தடை (Sleep apnea) ஏற்படுத்துகிறதா என்பதையும் கண்டறிய உதவும்.
சமிக்ஞைகள்...
தொடக்கத்தில் ஒலியை மட்டும் வெளிப்படுத்தும் குறட்டை, போகப் போக மேலும் சில சமிக்ஞைகளை நமக்குக் காட்டத் தொடங்கும். நா வறண்டு போதல், தொண்டையில் லேசான புண்கள் தோன்றுதல், தூக்கம் தடைப்படுதல், மூச்சுவிடுவதில் சிரமம், பகலில் மிகுந்த சோர்வு, தலைவலி ஆகிய குறிகுணங்கள் குறட்டையால் உண்டாகும் பாதிப்புகள்.
குறட்டையைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், ரத்த அழுத்தம், இதயநோய் வரை இது கொண்டு சென்றுவிடும் அபாயம் உண்டு. உறக்கத்தின்போது ’மூச்சு விடுவதில் தடை’ (Sleep apnea) என்ற நிலையையும் குறட்டை உண்டாக்கும். போதிய அளவு பிராண வாயு செறிவு இல்லாமல், உடலில் சோர்வு அதிகரிக்கும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய பிராண வாயுவின் அளவு குறைவுபடும். அரிதாக, சுவாசம் தடைப்பட்டு மரணம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. இரவில் எவ்வளவு நேரம் உறங்கினாலும் பகலில் சோர்வாக இருந்தால் அதற்கு குறட்டையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
என்ன செய்யலாம்?
குறட்டைவிடுவதைப் பிறர் சுட்டிக்காட்டத் தொடங்கிவிட்டால், உங்கள் உடலை செப்பனிடவேண்டியது மிக அவசியம். அதிக எடை இருந்தால், அதைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். புகைப் பழக்கத்துக்கும், மதுப் பழக்கத்துக்கும் கருணையின்றி தடை போடுங்கள். தேவையில்லாமல் மருத்துவர் அனுமதியின்றி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். இடது புறமாகப் படுத்து உறங்குவது குறட்டைக்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கு எதிரி. தலையணையைச் சற்று உயர்த்திக்கொள்ளலாம். நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கும் சவுரிப் பழத்தை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யப்படும் நசிய சிகிச்சைகள், சுவாசப் பாதையின் குறைபாடுகளை நிவர்த்திசெய்து குறட்டையைக் குறைக்கும். குறட்டையின் காரணமாக உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க சில உபகரணங்களும் இப்போது இருக்கின்றன.
பயிற்சிகள்...
கழுத்துப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலிமையாக்கும் எளிய கழுத்துப் பயிற்சிகளைச் செய்யலாம். ‘ஆம்’ என்று சொல்லும் செய்கையில், தலையை மெதுவாக மேலும் கீழும் அசைப்பது, ’இல்லை’ என்று சொல்லும் சாயலில் வலது புறமும் இடது புறமும் மெதுவாகத் தலையை அசைப்பது போன்ற பயிற்சிகள் உதவும். பக்கவாட்டிலும் கழுத்தை அசைத்து, அவ்வப்போது அந்தப் பகுதியிலுள்ள தசைகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.
ஆசன வகைகளில் புஜங்காசனம், தனுராசனம் போன்றவற்றைச் செய்து வரலாம். பிராணாயாம வகைகளில் ’ஓங்கார பிராணாயாமம்’ மிகுந்த நன்மை அளிக்கும். நாடிசுத்தி பிராணாயாமம் செய்து, ஆக்சிஜன் செறிவை அதிகரித்துக்கொள்வதும் நல்லது. குறிகுணங்களைக் குறைக்க சீந்தில் சூரணம், திரிபலா சூரணம் போன்றவற்றை உட்கொள்ளலாம். உடல் அமைப்புக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ எண்ணெய்களை (சுக்குத் தைலம், பீனசத் தைலம், நொச்சித் தைலம்), வாரத்துக்கு இரு முறை தலைக்குத் தேய்ந்து முழுகுவது பயன் அளிக்கும்.
குறட்டைவிடுவதை இகழ்ச்சியாகப் பார்ப்பதைத் தவிர்த்து, அவர்களுக்கே தெரியாமல் நடக்கும் மாறுபட்ட செயல்பாட்டை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்ய வழிவகை செய்வதுதான் நாம் செய்யவேண்டிய நல்ல காரியம். குறட்டைப் பிரச்னையால் விவாகரத்து கோரும் மேல்நாட்டு மக்களின் மனநிலை நமது பாரம்பர்யத்துக்கு இல்லை. தங்கள் துணைக்கு இருக்கும் பிரச்னையை எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வை நாடச் செய்வதே நமது பாரம்பர்யம். குறட்டைப் பிரச்னையால் உண்டாகும் சத்தத்தை வெறும் ஒலி மாசாக (Sound pollution) மட்டும் நினைத்துக் கடந்து சென்றுவிடாமல், உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் மாசு என்பதைத் தெரிந்து கொண்டு தடுக்க முயற்சி செய்வோம்!
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.