Home »
Health
» திடீரென்று கண்கள் சிவந்து போவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
திடீரென்று கண்கள் சிவந்து போவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
உங்கள் கண்கள் சிவந்து காணப்படுகிறதா? கண்கள் சிவப்பது என்பது, கண்ணின் வெள்ளை பகுதி சிவந்து காணப்படுவது தான். எப்போதும் இல்லாமல் திடீரென கண்கள் சிவக்கிறது என்றால் அதனை சாதாணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது அல்லவா? கண்கள் சிவப்பது என்பது, உடலில் ஏற்படக்கூடிய ஏதாவது ஒரு பிரச்சனையை வெளிகாட்டுவதாக கூட இருக்கலாம்.
சிவந்த கண்கள், பொதுவாக கண்களில் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்துவதோடு, கண்களில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்திடும். இது போன்ற பிரச்சனையை சரி செய்வதற்கு வழிகள் எல்லாம் உள்ளன தான். ஆனால், அதற்கு முன்பு பிரச்சனைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு பின்னர் அதனை சரி செய்வதே சிறந்தது. அதை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். கண்கள் சிவப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...
கண் வறட்சி..
எப்போது ஒரு மனிதனின் கண்களில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு போதுமான அளவு கண்ணீர் சுரக்கவில்லையோ, அப்போது கண் வறட்சி பிரச்சனை ஏற்படக்கூடும். போதுமான ஈரப்பதம் இல்லாமல் கண்களில் எரிச்சல் உணர்வும், கண்களின் இரத்த நாளங்கள் விரிந்தும் காணப்படும். எரிச்சல், அரிப்பு, குடைச்சல் மற்றும் உணர்ச்சி குறைவு போன்றவை, வறண்ட கண்களின் பொதுவான அறிகுறிகளாகும். இதற்கு தீர்வு உங்கள் மருத்துவரை அணுகுவது தான். மருத்துவர் கூறும் சிறப்பு கண் சொட்டு மருந்தை கண்களுக்கு போடுவதன் மூலம் வீக்கம் குறைந்து, கண்களின் வறட்சியும் குறைந்துவிடும்.
இளஞ்சிவப்பு கண்கள்..
இளஞ்சிவப்பு கண்கள் அல்லது வெண்படலம் என்பது வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒவ்வாமை அல்லது கண்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் உணர்வால் ஏற்படக்கூடியது. கண்களை ஏதாவது எரிச்சலூட்டும் போது தான் கண் சிவந்துவிடுகிறது. கண்களின் இமைகளை சுற்றிலும் மஞ்சள் நிறத்தில் ஏற்படக்கூடிய வெளியேற்றம், வெள்ளை நிற வெளியேற்றம், அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான கண்ணீர் அல்லது கண் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். பிற கண் பிரச்சனைகளுக்கு இதே அறிகுறிகள் தான் இருக்கும். எனவே, இதற்கு தீர்வு காண மருத்துவரை அணுகுங்கள். இந்த இளஞ்சிவப்பு கண் பிரச்சனை என்பது சில வாரங்களில் சரியாகி விடும். ஆனால், சில ஆன்டிபயாடிக் இதனை விரைந்து சரிசெய்ய உதவும். அதற்கு நீங்கள் மருத்துவரை அணுகி தான் ஆக வேண்டும்.
கண் இமை வீக்கம்..
கண் இமை வீக்கம் அல்லது கண் இமை அழற்சியானது ஒருவரது கண்களை சிவக்க செய்வதோடு, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும். பாக்டீரிய தொற்று, அழகு சாதனப் பொருட்கள் தெரியாமல் கண்களில் படுவது அல்லது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பு போன்றவை தான் கண் இமை அழற்சிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. சுடுநீர் கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலமும், கண் இமை சுரப்பிகளில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுவதன் மூலமும் கண்களில் வீக்கத்தை சரி செய்திடலாம். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால், உடனே கண் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
சோர்வடைந்த கண்கள்..
எப்போது ஒரு விஷயத்தில் முழு சிந்தனையையும் செலுத்தி ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்களோ, அவர்கள் அது போன்ற தருணங்களில் கண் சிமிட்டுவதற்கு மறந்து விடுகிறார்கள். இப்படி கண் சிமிட்டாமல் இருப்பதால் கண்களில் அழுத்தம் அதிகரித்து, எரிச்சலை ஏற்படுத்துவதோடு, கண்களின் இரத்த நாளங்களை விரிவடைய செய்திடுவதால் கண்கள் சிவந்து காணப்படுகின்றன. இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்திட வேண்டுமென்றால், எப்படிப்பட்ட விஷயத்தில் கவனத்தை செலுத்தினாலும் கண் சிமிட்டுவதற்கு மட்டும் மறந்து விடக்கூடாது. எப்போதும், 20-20-20 விதியை பின்பற்ற பழகிக் கொள்ளுங்கள். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒன்றை, குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்காவது பார்க்க வேண்டும்.
சேதமடைந்த வெண்படலம்..
கண்களில் ஏதாவது தூசி, அழுக்கு அல்லது மண் விழுந்துவிட்டால், அது வெண்படலத்தில் சிராய்பை ஏற்படுத்திவிடும். அதாவது, கண்களில் எது விழுந்தாலும் அது, மென்மையான வெண்படலத்தில் கீறல்களை ஏற்படுத்தும். எப்போது, தேவையில்லாத ஒன்று கண்களில் விழுகிறதோ, அது கண்களில் கண்ணீர் வரச் செய்து, சிவக்க செய்து, உணர்வை குறைத்து, வலி மற்றும் தலைவலியை கூட ஏற்படுத்திவிடும். கண்களில் விழக்கூடிய தூசி போன்றவற்றை, தண்ணீர் கொண்டோ அல்லது சலைன் கொண்டோ சுத்தம் செய்வதன் மூலம் சுலபமாக வெளியேற்றி விடலாம். அப்படியெல்லாம் செய்தும் கண்களில் எரிச்சல் அடங்கவில்லை என்றால், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் சொட்டு மருந்தை போடுவதன் மூலம் உடனே பிரச்சனையை சரி செய்திடலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.