1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பனிக்கால பிரச்னைகள்... தவிர்க்கும் வழிமுறைகள்!

 

பனிக்கால பிரச்னைகள்... தவிர்க்கும் வழிமுறைகள்!








பனிக்காலத்தில் சளி, இருமல், தலைவலி, தொண்டைக்கட்டுதல், ஆஸ்துமா, காதடைப்பு, சோர்வு, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, அலர்ஜி போன்ற பல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத் தொடங்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், குழந்தைகள் மற்றும்


வயதானவர்களைத் தொற்றுநோய்கள் எளிதில் தாக்கும். ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக்காலம்’ என்பதே படு அவஸ்தையான காலம்.


உடல்நலனில் தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக்காலத்தில் நோயை நெருங்க விடாமல் கடந்து விடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் குளிர்காலத்தில் தாக்கக் கூடிய நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும்.  


சளி, ஆஸ்துமா


பனிக்காற்றால் சிலருக்கு மூச்சுத்திணறல், சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். குளிர்க் காற்றில் நடைபயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள இந்த சீசனுக்கு உகந்த சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். துளசி டீ, இஞ்சி டீ, புதினா டீ, சுக்கு மல்லி டீ போன்றவற்றைப் பருகலாம். மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை ஆகியவற்றை சாப்பாட்டு மெனுவில் சேர்த்துக் கொள்ளலாம். 


குளிர் காலத்தில் தூசி போன்றவற்றின் மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். மூக்கில் நீர்வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ‘ஸ்பிரே நாஸில்ஸ்’  (Spray Nozzles) உபயோகிக்கலாம். ஆஸ்துமாவுக்கு நவீன சிகிச்சைகளும் இன்ஹேலர்களும் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தாலம்.


சைனஸ்:


பனிக்காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால், அது சைனசஸாக உருவெடுக்க வாய்ப்பு உண்டு. மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படும். இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியவை ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும்போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனையை நுகர முடியாது. இதன் ஆரம்ப நிலை என்றால், மருத்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் அறுவைசிகிச்சை வரை செய்யவேண்டியிருக்கும்.


காது வலி:


தொற்றுநோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த நிலையில் காது சுத்தமாக அடைத்துக் கொள்ளும். இரவு நேரத்தில் காதில் தீவிர வலி ஏற்படும். சில சமயம் நடுக்காதில் திரவத் தேக்கம் ஏற்பட்டு, பாக்டீரியா அதிகமாகப் பெருகும் வாய்ப்பும் உண்டு. பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்துகொண்டு நடக்கலாம்.


டான்சில் (Tonsil) - பிரச்னை


டான்சில் என்பது நம் வாயின் உள்ளே இரு பக்கங்களிலும் உள்ள இயற்கையான சதை.  உலர்வாக உள்ள வாயினுள் கிருமிகள் அதிக நேரம் தங்குவதால் நோய்த்தொற்று ஏற்பட்டு அந்தப் பகுதி வீங்கி வலியை ஏற்படுத்தும். இதை டான்சிலிட்டிஸ் (Tonsillitis) என்பார்கள். அறுவைசிகிச்சை இல்லாமல், மாத்திரைகளாலேயே இதைக் குணப்படுத்தி விடலாம்.


தொண்டை வலி:


நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டு, தொண்டை கட்டிக்கொள்ளும். தொண்டை வறண்டு போவதால், இருமல் வரும். சளி, இருமல் தொல்லையின் அடுத்த கட்டமாகக் குரல்வளையில் வீக்கம் ஏற்பட்டு, அதனால் தொண்டைக் கரகரப்பு ஏற்படும்.


மருந்து, மாத்திரை உட்கொள்வதுடன் அதிகம் பேசுவதையும் தவிர்த்தால், இந்தப் பிரச்னையிலிருந்து விரைவில் குணமடையலாம். பிரணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், குரல் பிரச்னைகள் குறையும். அதிகச் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணவுகளையோ, பானங்களையோ உட்கொள்ளக் கூடாது. சிகரெட் பிடிக்கவோ, சிகரெட் பிடிக்கும் நபர்களின் அருகில் நிற்பதோகூட கூடாது.  நாக்கு வறண்டு போகாதபடி அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். 


அஜீரணக் கோளாறு


குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்காது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிக்காமல் வயிற்றுக்கோளாறு மற்றும் அஜீரணத்தை உருவாக்கலாம். வயிறு மந்தநிலையில் இருக்கும். 


இதைத் தவிர்க்க, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், கீரை வகைகளை அளவாகச் சாப்பிடலாம். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை உனவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 


டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்... கவனம்!


நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு, ஃப்ளூ காய்ச்சல் மிக எளிதாகத் தாக்கலாம். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஃப்ளூ’ தடுப்பூசி போட வேண்டும். டைஃபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு இருப்பதால், முன்னரே அதற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வரும்முன் காக்கலாம்.


அலர்ஜி ஏற்படும் பொருள்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.போர்வை, தலையணை உறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது நல்லது. அதிக வாசனைகொண்ட பெர்ஃப்யூம்களைத் தவிர்ப்பதும் அலர்ஜியிலிருந்து காக்கும்.


சரும வறட்சி


பொதுவாகப் பனிக்காலத்தில் தோல் வறண்டுவிடும். சுருக்கம் ஏற்படும்; உதடு, தோல்களில் வெடிப்பு ஏற்படலாம். இவற்றைச் சரிசெய்ய பாரஃபின் க்ரீம்களை (Paraffin creams) தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயை கை, கால், முகத்தில் தேய்த்துக் கொள்வது. உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், லிப்கார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம். இந்தப் பிரச்னை தீவிரமாக இருந்தால், தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.


மூட்டுவலி


மூட்டுவலிக்கு உடல் எடை அதிகரிப்பது, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், குளிர்காலத்தில் மூட்டு ஜவ்வில் அலர்ஜி ஏற்பட்டு அழுத்தம் கொடுக்கும்போது வலி ஏற்படும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிடலாம்.


இதயநோய்கள் உள்ளவர்கள்


இதயநோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து 'பம்ப்’ செய்யப்படும் ரத்தத்தின் அளவு (Cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது. இதயப் பிரச்னை உள்ளவர்கள், குளிர்காலத்தில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்லக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.


குளிர்கால பிரச்னைகளிலிருந்து தப்பிக்க... சில எளிய வழிமுறைகள்!


*  நாமிருக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.


*  குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும்.


*  பனிக்காலத்தில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளலாம். குளிர்பானங்கள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம்.


*  ரோட்டோரக் கடைகளில் சாப்பிடுவதோ, ஃபாஸ்புட் உணவுகளை உண்பதையோ தவிர்க்கலாம்.


*  ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம். 


ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை  நேரத்துக்குப் பிறகு  வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்யாமலிருக்கலாம்.


தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம்.


இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.


பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டியிருக்கும். சிறுநீர் கழித்த பின்னர்


கை,கால்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதைக் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம். சுகாதாரமற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.


பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்குப் பஞ்சு வைத்துக்கொள்ளலாம் அல்லது மப்ளர் போன்றவற்றால் காதுகளை மறைத்துக்கொள்ளலாம்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags